வேதங்கள்
2 நேபி 1


நேபியின் இரண்டாம் புஸ்தகம்

லேகியின் மரணத்தைப்பற்றிய ஒரு விவரம்; நேபியின் சகோதரர் அவனுக்கெதிராகக் கலகஞ் செய்தல். வனாந்தரத்திற்குள் புறப்பட்டுச் செல்லும்படி நேபியைக் கர்த்தர் எச்சரித்தல், வனாந்தரத்தில் அவனுடைய பயணங்கள், மற்றும் பிற காரியங்கள்.

அதிகாரம் 1

லேகி சுதந்திர தேசத்தைப்பற்றித் தீர்க்கதரிசனம் உரைத்தல் – அவனது சந்ததி இஸ்ரவேலின் பரிசுத்தரைப் புறக்கணித்தால், அவர்கள் சிதறடிக்கப்பட்டு, அடிக்கப்படுவர் – அவன், தன் குமாரருக்கு, நீதியின் கவசத்தைத் தரிக்கும்படி புத்தி சொல்லுதல். ஏறக்குறைய கி.மு. 588–570.

1 இப்பொழுதும், அந்தப்படியே, நேபியாகிய நான், என் சகோதரருக்குப் போதித்த பிறகு, எங்கள் தகப்பன் லேகியும், அவர்களிடத்தில் பல காரியங்களைப் பேசி, எருசலேம் தேசத்திலிருந்து அவர்களை வெளியே கொண்டுவருவதில், அவர்களுக்குக் கர்த்தர் எவ்வளவு மகத்தான காரியங்களைச் செய்திருக்கிறார் என்பதைக் குறித்து, அவர்களுக்கு விவரித்தார்.

2 அவர், தண்ணீர்களின் மேல் அவர்களுடைய கலகங்களைக் குறித்தும், அவர்கள் சமுத்திரத்தால் விழுங்கப்பட்டுப் போகாதபடி, அவர்கள் ஜீவனைத் தப்புவித்த தேவனுடைய இரக்கங்களைக் குறித்தும் பேசினார்.

3 அவர்கள் அடைந்த, வாக்குத்தத்தத்தின் தேசத்தைக் குறித்தும், நாங்கள் எருசலேம் தேசத்தைவிட்டு ஓடிப்போக வேண்டும், என்று எச்சரித்த கர்த்தர் எவ்வளவு இரக்கமுடையவராயிருந்தார் என்பதைப்பற்றியும் அவர் அவர்களுக்குச் சொன்னார்.

4 ஏனெனில் இதோ, எருசலேம் அழிக்கப்பட்டுப் போயிற்று என்பதை நான் கண்ட தரிசனத்தால் அறிவேன், நாம் எருசலேமில் இருந்திருப்போமெனில், நாமும் அழிந்து போயிருப்போம், என்று அவர் சொன்னார்.

5 ஆனால், அவர் சொன்னதாவது: நமது உபத்திரவங்கள் மத்தியிலும், என் சந்ததியால் சுதந்தரிக்கப்படும் தேசமாய் இருக்கும், என்று தேவனாகிய கர்த்தர் என்னோடு வாக்குத்தத்தம் பண்ணின தேசமாயும், மற்ற எல்லா தேசங்களைக்காட்டிலும், தெரிந்து கொள்ளப்படத்தக்கதுமான, வாக்குத்தத்தத்தின் தேசத்தைப் பெற்றுக் கொண்டோம். ஆம், கர்த்தர் இந்த தேசத்தை எனக்கும், என்றென்றைக்குமாய் என் பிள்ளைகளுக்கும், கர்த்தருடைய கரத்தால் மற்ற தேசங்களிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டவர்களுக்கும், இருக்கும்படிக்கு உடன்படிக்கை பண்ணியிருக்கிறார்.

6 ஆகையால், கர்த்தருடைய கரத்தால் கொண்டுவரப்பட்டாலொழிய, ஒருவனும் இந்த தேசத்திற்குள் பிரவேசிப்பதில்லை, என்று லேகியாகிய நான், எனக்குள்ளே இருக்கிற கர்த்தருடைய ஆவி கிரியை செய்கிறபடியே, தீர்க்கதரிசனம் உரைக்கிறேன்.

7 ஆதலால், அவர் கொண்டுவரப்போகிறவர்களுக்காக இந்தத் தேசம் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது; அப்படியானால், அவர் கொடுத்துள்ள கட்டளைகளின்படியே அவர்கள் அவருக்கு ஊழியம் செய்வார்களெனில், இது அவர்களுக்கு சுதந்திர தேசமாயிருக்கும்; ஆகையால், அவர்கள் ஒருபோதும் சிறையிருப்பிற்குள்ளாகக் கொண்டுபோகப்படமாட்டார்கள்; அப்படியாகுமெனில், அது அவர்கள் அக்கிரமத்தினிமித்தமாகவே ஏற்படும்; அப்படி அக்கிரமம் பெருகுமெனில், அவர்கள் நிமித்தம் இந்தத் தேசம் சபிக்கப்பட்டதாயிருக்கும்; ஆனால் நீதிமான்களுக்கோ இது என்றென்றைக்குமாய் ஆசீர்வதிக்கப்பட்டதாயிருக்கும்.

8 இதோ, மற்ற தேசங்கள் அறியாதபடிக்கு, இந்த நிலத்தைக் காப்பது ஞானமாயிருக்கிறது; ஏனெனில் இதோ, சுதந்தரிப்பதற்கு இடம் இல்லாமற்போகுமட்டும், அநேக தேசங்கள் நிலத்தை ஆக்கிரமிக்கும்.

9 ஆகையால், தேவனாகிய கர்த்தரால் எருசலேம் தேசத்திலிருந்து அழைத்துவரப்படுபவர்கள், அவருடைய கட்டளைகளை கைக்கொள்கிற அளவில், இந்தத் தேசத்தின் மேல் விருத்தியடைவார்கள் என்றும் இந்தத் தேசத்தை அவர்கள் சொந்தமாக்கிக் கொள்ளும்படி சகல தேசங்களிலிருந்தும், விலக்கிக் காத்துக்கொள்ளப்படுவார்களென்றும், ஒரு வாக்குத்தத்தத்தை லேகியாகிய நான், பெற்றுக்கொண்டேன். அப்படி அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்வார்களெனில் அவர்கள் இந்த தேசத்தின் மேல் ஆசீர்வதிக்கப்படுவார்கள்; அவர்களுக்கு இடையூறு செய்யவோ, அவர்கள் சுதந்தரித்த தேசத்தை எடுத்துக்கொள்ளவோ, அங்கே யாரும் இருக்க மாட்டார்கள்; அவர்கள் என்றென்றைக்கும் பாதுகாப்பாய் வாசம்பண்ணுவார்கள்.

10 ஆனால், இதோ, சகல மனுஷரும், பூமியும் சிருஷ்டிக்கப்பட்டதைக் குறித்த அறிவையும், உலக சிருஷ்டி முதல் கர்த்தருடைய பெரிதும், அதிசயமுமான கிரியைகளை அறிந்துகொள்ளக்கூடிய அநேக மகா மேன்மையான ஆசீர்வாதங்களை கர்த்தருடைய கரத்திலிருந்து அவர்கள் பெற்ற பிறகும், சகலவற்றையும் விசுவாசத்தினால் செய்ய அவர்களுக்கு வல்லமை கொடுக்கப்பட்டிருந்தும், ஆதிமுதல் எல்லா கட்டளைகளையும் பெற்றவர்களாயிருந்தும், அவரின் எல்லையில்லா நன்மையினால் இந்த விலையேறப்பெற்ற வாக்குத்தத்தத்தின் தேசத்திற்குள்ளே கொண்டுவரப்பட்டிருந்தும், அவர்கள் அவிசுவாசத்தில் படிப்படியாக நலியும் காலம் வரும். இதோ, அவர்கள் இஸ்ரவேலின் பரிசுத்தரும், மெய்யான மேசியாவும், தங்களின் மீட்பரும், தேவனுமானவரை புறக்கணிக்கும் நாள் வருமேயானால் இதோ, நீதிபரரின் நியாயத்தீர்ப்புக்கள் அவர்கள் மேல் வரும்.

11 ஆம், அவர் மற்ற தேசங்களை அவர்களிடத்திற்குக் கொண்டுவருவார்; அவர் அவர்களுக்கு வல்லமையைக் கொடுத்து, அவர்களுக்குச் சொந்தமாயுள்ள நிலங்களை அவர் எடுத்துப்போடுவார்; அவர்கள் சிதறடிக்கப்பட்டு, அடிக்கப்பட்டுப் போகும்படிச் செய்வார்.

12 ஆம், ஒரு தலைமுறை, மற்றொரு தலைமுறைக்கு கடந்து செல்லும்போது, அங்கே இரத்தஞ்சிந்துதலும், மகா விசாரிப்புகளும் அவர்கள் மத்தியில் சம்பவிக்கும்; ஆகையால், என் குமாரரே, நீங்கள் இவைகளை நினைவுகூர வேண்டுமென்று நான் விரும்புகிறேன்; ஆம், நீங்கள் என் வார்த்தைக்குச் செவிகொடுக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.

13 விழித்தெழுங்கள்; கன நித்திரையிலிருந்தும், பாதாளத்தின் நித்திரையிலிருந்தும் விழித்தெழுங்கள்; நீங்கள் கட்டப்பட்டிருக்கிற பயங்கரமான சங்கிலிகளை உதறித்தள்ளுங்கள்; அவைகள் மனுபுத்திரரை, துன்பம், வேதனை ஆகியவைகளின் நித்திய பிளவுக்கு சிறைபிடித்துக்கொண்டு செல்லும்படிக்கு, அவர்களை கட்டக்கூடிய சங்கிலிகளாய் இருக்கின்றன.

14 விழித்தெழுங்கள்! புழுதியிலிருந்து எழும்புங்கள், எந்தப் பிரயாணியும் திரும்பி வரக்கூடாத, விறைப்பும், அமைதியுமான கல்லறையினுள் விரைவில் நீங்கள் இந்த கைகால்களை வைக்கவிருக்கிற, நடுக்கங்கொண்டுள்ள, உங்களைப் பெற்றவனின் வார்த்தைகளைக் கேளுங்கள்; இன்னும் சில நாட்களில் நான் பூலோகத்தார் எல்லாரும் போகிற வழியே போகிறேன்.

15 ஆனாலும் இதோ, கர்த்தர் பாதாளத்திலிருந்து என் ஆத்துமாவை மீட்டிருக்கிறார்; நான் அவரின் மகிமையைக் கண்டிருக்கிறேன்; அவருடைய அன்பின் கரங்களால் நான் எப்பொழுதும் நித்தியமாய் தழுவப்பட்டிருக்கிறேன்.

16 நீங்கள் கர்த்தருடைய நியமங்களையும், நியாயத்தீர்ப்புகளையும் கைக்கொள்ள நினைவுகூர வேண்டும், என்று நான் விரும்புகிறேன். இதோ, ஆதிமுதல் இதுவே என் ஆத்துமாவின் தவிப்பாயிருக்கிறது.

17 உங்கள் இருதயக்கடினத்தினிமித்தம் தேவனாகிய கர்த்தர் தம் தீர்க்கமான கோபாக்கினையோடு உங்கள்மேல் வருவாராகில், நீங்கள் அறுப்புண்டு என்றென்றைக்குமாய் அதம்பண்ணப்படுவீர்களோ என்று நான் பயப்படுவதினால்,

18 அல்லது, ஒரு சாபம் உங்கள்மேல் பல தலைமுறைகளுக்கு வரும்படிக்கும்; பட்டயமும், பஞ்சமும் உங்கள்மேல் வரும்படிக்கும். நீங்கள் வெறுக்கப்பட்டு, பிசாசின் சித்தம் மற்றும் சிறைத்தனத்தின்படியே நடத்திச்செல்லப்படுவீர்கள், என்று என் இருதயம் துக்கத்தினால் அவ்வப்போது பாரப்பட்டிருக்கிறது.

19 என் குமாரர்களே, இந்தக் காரியங்கள் உங்கள்மேல் வரக்கூடாதபடிக்கு, நீங்கள் கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டு, தயவுபெற்ற ஜனங்களாய் இருக்கவேண்டும். ஆனாலும், இதோ, அவரது சித்தத்தின்படியே ஆகக்கடவது. ஏனெனில், அவருடைய வழிகள் என்றென்றைக்கும் நீதியுள்ளவைகளாயிருக்கின்றன.

20 அவர் சொல்லியிருப்பதாவது: என் கட்டளைகளைக் கைக்கொள்கிற அளவில், நீங்கள் தேசத்தில் விருத்தியடைவீர்கள்; ஆனால் நீங்கள் என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமற் போகிற அளவில், என் சமுகத்திலிருந்து அறுப்புண்டு போவீர்கள்.

21 இப்பொழுதும், உங்களிலே என் ஆத்துமா மகிழ்ந்திருக்கும்படிக்கும், உங்களினிமித்தம் என் இருதயம் ஆனந்தத்துடனே இவ்வுலகத்தைக் கடந்துசெல்லும்படிக்கும், நான் கல்லறைக்குச் சஞ்சலத்தோடும், துக்கத்தோடும் எடுத்துச்செல்லப்படாதபடிக்கும், புழுதியிலிருந்து எழுந்திருங்கள், என் குமாரரே, மனுஷராயிருங்கள், நீங்கள் அடிமைத்தனத்திற்குள்ளாகப் போகாதபடிக்கும்,

22 கொடிய சாபத்தால் சபிக்கப்படாதபடிக்கும், அழிக்கப்படாதபடிக்கும், உங்கள் மீது நீதியின் தேவனின் துக்கத்தை, ஆம், ஆத்துமா மற்றும் சரீரத்தின் நித்திய அழிவிற்கேதுவானதை வருஷிக்கப்பண்ணாமல், ஏக சிந்தனையிலும், ஏக உள்ளத்திலும் உறுதியாய் சகலவற்றிலும் ஐக்கியப்பட்டிருங்கள்.

23 என் குமாரரே, விழித்தெழுங்கள்; நீதியின் கவசத்தைத் தரித்துக்கொள்ளுங்கள்; நீங்கள் பிணைக்கப்பட்டிருக்கிற சங்கிலிகளை உதறித்தள்ளி அந்தகாரத்திலிருந்து வெளிவாருங்கள்; புழுதியிலிருந்து எழும்புங்கள்.

24 மகிமையான நோக்கங்கள் உடையவனாயும், நாம் எருசலேமை விட்டுப் புறப்பட்ட காலத்திலிருந்து கட்டளைகளைக் கைக்கொண்டவனுமாயிருக்கிற, உங்கள் சகோதரனுக்கு எதிராகக் கலகஞ்செய்யாதிருங்கள்; அவன் நம்மை வாக்குத்தத்தத்தின் தேசத்திற்குக் கொண்டுவரும்படியாய், தேவனுடைய கரங்களில் ஒரு கருவியாயிருந்திருக்கிறான்; அவன் இல்லாதிருந்தால் நாம் வனாந்தரத்தில் பட்டினியால் அழிந்து போயிருப்போம்; இப்படி இருப்பினும், நீங்கள் அவன் ஜீவனை வாங்கத் தேடினீர்கள்; ஆம், உங்களினிமித்தம் அவன் அதிக துன்பத்தை அனுபவித்திருக்கிறான்.

25 அவன் உங்களினிமித்தம் மறுபடியும் பாடனுவிப்பானோவென்று, நான் மிகவும் பயந்து, நடுக்கமடைகிறேன். ஏனெனில், இதோ, அவன் உங்கள்மேல் பலத்தையும், அதிகாரத்தையும் செலுத்த வகை தேடுகிறான் என்று நீங்கள் அவன் மேல் குற்றஞ்சாட்டினீர்கள்; ஆனால் அவன் உங்கள் மேல் பலத்தையோ அதிகாரத்தையோ செலுத்த முனையவில்லை, ஆனால் உங்கள் நித்திய சுகவாழ்வையும், தேவனுடைய மகிமையையுமே அவன் நாடினான் என்று அறிவேன்.

26 அவன் உங்களிடத்தில் வெளிப்படையாய் நடந்துகொண்டதினிமித்தம் நீங்கள் முறுமுறுத்தீர்கள்; அவன் உங்களிடத்தில் கடூரத்தை உபயோகித்தான் என்கிறீர்கள்; அவன் உங்கள் மேல் கோபமடைந்தான் என்றும் சொல்கிறீர்கள்; ஆனாலும், இதோ, அந்தக் கண்டிப்பு அவனுள்ளிருந்த தேவனுடைய வார்த்தையினுடைய வல்லமையின் கூர்மையாயிருக்கிறது; நீங்கள் கோபமென்று அழைப்பது, உங்கள் அக்கிரமங்களைக் குறித்து தைரியமாய் வெளிப்படுத்தவேண்டியதும், அவனால் அடக்கிக்கொள்ள முடியாததுமான தேவனிடத்தில் உள்ள சத்தியமாயிருக்கிறது.

27 நீங்கள் கீழ்ப்படிய வேண்டுமென்று அவன் கட்டளை பிறப்பிப்பதற்கும், தேவ வல்லமை அவனுக்குள்ளிருப்பது அவசியமாயிருக்கிறது; அதனால் இதோ, அவன் நிறுத்திக்கொள்ள முடியாமற்போகுமளவுக்குப் பேசும்படி அவன் வாயைத் திறந்தது அவனல்ல, அவனுக்குள்ளிருந்த கர்த்தருடைய ஆவியானவரே.

28 இப்பொழுதும் என் குமாரர்களாகிய லாமான், லெமுவேல், சாம் மற்றும், இஸ்மவேலின் குமாரர்களாகிய என் குமாரர்களுமானவர்களே, இதோ, நேபியின் வார்த்தைகளுக்குச் செவி கொடுத்தால் நீங்கள் அழிந்து போகமாட்டீர்கள்; அப்படி அவனுக்குச் செவி கொடுப்பீர்களெனில், என் ஆசீர்வாதமாகிய, ஆம், என் முதல் ஆசீர்வாதத்தை நான் உங்களுக்கு வைத்துப்போகிறேன்.

29 ஆனால் அப்படி நீங்கள் அவனுக்குச் செவி கொடாவிடில், என் ஆசீர்வாதமாகிய முதல் ஆசீர்வாதத்தை நான் எடுத்துப்போடுவேன்; அது அவன் மேல் தங்கும்.

30 இப்பொழுதும் சோரமே, நான் உன்னுடன் பேசுகிறேன்; இதோ, நீ லாபானுடைய வேலைக்காரனாயிருக்கிறாய்; இருப்பினும், நீ எருசலேம் தேசத்தைவிட்டு அழைத்துக்கொண்டுவரப்பட்டாய்; நீ என் குமாரனாகிய நேபிக்கு என்றென்றும் உண்மையான சினேகிதனாய் இருக்கிறாய் என்பதை நான் அறிவேன்.

31 ஆதலால் நீ உண்மையுள்ளவனாய் இருந்ததினிமித்தம், உன் சந்ததியும் அவன் சந்ததியோடே, இத்தேசத்திலே செழிப்படைந்து அநேகங்காலம் வாசம் பண்ணுமாறு ஆசீர்வதிக்கப்படுவார்கள்; அவர்களின் அக்கிரமத்தைத் தவிர, வேறெதுவும் இத்தேசத்திலே அவர்கள் என்றென்றைக்கும், செழிப்படைவதற்கு, இடையூறாகவோ, தடையாகவோ அமையாது.

32 ஆதலால் நீ கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொள்வாயெனில், கர்த்தர் இந்த நிலத்தை, என் குமாரனுடைய சந்ததியோடு, உன் சந்ததிக்கும் பாதுகாப்பாய் இருக்கும்படி அர்ப்பணித்திருக்கிறார்.