வேதங்கள்
2 நேபி 30


அதிகாரம் 30

மனமாறிய புறஜாதியார் உடன்படிக்கையின் ஜனத்துடன் எண்ணப்படுவர் – அநேக லாமானியர்களும், யூதர்களும் வார்த்தையை விசுவாசித்துப் பூரித்திருப்பார்கள் – இஸ்ரவேல் திரும்பச் சேர்க்கப்பட்டு, துன்மார்க்கர் அழிக்கப்படுவர். ஏறக்குறைய கி.மு. 559–545.

1 இப்பொழுது, என் பிரியமான சகோதரரே, நான் உங்களிடத்தில் பேசுவேன். ஏனெனில், புறஜாதியாரைக் காட்டிலும் நீங்கள் அதிக நீதியுள்ளவர்கள் என்று நீங்கள் எண்ணிக்கொள்ள, நேபியாகிய நான், அனுமதியேன். ஏனெனில் இதோ, நீங்கள் தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாவிடில், நீங்கள் அனைவரும் அவ்விதமாகவே அழிந்துபோவீர்கள். பேசிய வார்த்தைகளின் நிமித்தம், புறஜாதியார் முழுவதும் அழிக்கப்பட்டனர், என நீங்கள் எண்ணிவிடவேண்டாம்.

2 ஏனெனில் இதோ, மனந்திரும்புகிற புறஜாதியார் அனைவரும் கர்த்தருடைய உடன்படிக்கையின் ஜனமாக இருப்பார்கள், என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். மனந்திரும்பாமலிருக்கும் யூதர்கள் அனைவரும் புறம்பே தள்ளப்படுவார்கள். மனந்திரும்பி இஸ்ரவேலின் பரிசுத்தராகிய, அவரின் குமாரனில் விசுவாசிக்கிறவர்களைத் தவிர வேறொருவருடனும் கர்த்தர் உடன்படிக்கை செய்வதில்லை.

3 இப்பொழுது, நான் சற்று அதிகமாக புறஜாதியாரையும், யூதர்களையும் குறித்துத் தீர்க்கதரிசனம் உரைக்கிறேன். ஏனெனில் நான் பேசிய புஸ்தகம் வெளிவந்து, புறஜாதியாருக்கு எழுதப்பட்டதாயிருந்து, கர்த்தருக்குள் மறுபடியும் முத்திரை செய்யப்பட்ட பின்னர், எழுதப்பட்ட வார்த்தைகளை அநேகர் விசுவாசிப்பார்கள். அவைகளை அவர்கள் எங்கள் சந்ததியின் மீதியானவர்களுக்குக் கொண்டு செல்வார்கள்.

4 அப்பொழுதுதான், எங்கள் சந்ததியின் மீதியானவர்கள் எங்களைக் குறித்தும், நாங்கள் எருசலேமிலிருந்து எப்படி வந்தோம் என்பதையும், அவர்கள் யூதர்களின் வழிவந்தவர்கள் என்பதையும் அறிவார்கள்.

5 அவர்கள் மத்தியில் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் அறிவிக்கப்படும். இதினிமித்தம் அவர்கள் தங்கள் பிதாக்களைப்பற்றிய அறிவிற்கும், தங்களுடைய பிதாக்கள் அறிந்திருந்த, இயேசு கிறிஸ்துவைப்பற்றிய ஞானத்திற்கும், திரும்பச் சேர்க்கப்படுவார்கள்.

6 அப்பொழுது அவர்கள் களிகூருவார்கள். ஏனெனில் தேவனுடைய கரத்திலிருந்து அவர்களுக்கு அது ஒரு ஆசீர்வாதம், என்பதை அறிந்துகொள்வார்கள். அவர்கள் கண்களிலிருந்து இருளின் செதில்கள் விழத்துவங்கும். பல தலைமுறைகள் கடந்துபோகும் வரைக்கும் அவர்கள் குற்றமற்றவர்களாயும் மகிழ்ச்சி நிறைந்த ஜனமாயுமில்லாவிட்டால், அவர்கள் மத்தியிலிருந்து அநேக தலைமுறைகள் கடந்து போகாது.

7 சிதறடிக்கப்பட்டிருக்கிற யூதர்களும் கிறிஸ்துவில் விசுவாசிக்கத் துவங்குவார்கள்; அவர்கள் தேசத்தின் பரப்பின் மீது கூடத்தொடங்குவார்கள். கிறிஸ்துவிலே விசுவாசிக்கும் அநேகரும் மகிழ்ச்சி நிறைந்த ஜனமாவார்கள்.

8 கர்த்தராகிய தேவன் பூமியின்மீது தன் ஜனத்தைத் திரும்பச் சேர்ப்பதற்கு எல்லா தேசங்கள், இனங்கள், பாஷைகள் மற்றும் ஜனத்திற்குள்ளும், தன் கிரியையைத் தொடங்குவார்.

9 கர்த்தராகிய தேவன் நீதியினால் எளிமையானோரை நியாந்தீர்த்து, பூமியின் சாந்தகுணமுள்ளவர்களை நடுநிலையோடு கடிந்துகொள்வார். மேலும் தன் வாயின் கோலால் பூமியை அடித்து, தன் உதடுகளின் சுவாசத்தால் துன்மார்க்கரைக் கொன்றுபோடுவார்.

10 ஏனெனில் கர்த்தராகிய தேவன், தன் ஜனத்திற்குள் ஒரு பெரிய பிரிவை வரப்பண்ணி, துன்மார்க்கரை அவர் அழிக்கும் காலம் விரைவில் வருகிறது. அவர் துன்மார்க்கரை நெருப்பால் அழித்தாலும் அவர் தன் ஜனத்தைத் தப்பவைப்பார்.

11 நீதி அவரின் அரைக் கச்சையாகவும், சத்தியம் அவரின் இடைக் கச்சையாகவுமிருக்கும்.

12 ஓநாய் செம்மறியாட்டுக்குட்டியுடன் வாசம் செய்யும். சிறுத்தைப்புலி வெள்ளாட்டுக்குட்டியுடனும், கன்றும், பாலசிங்கமும் கொழுத்தக் கன்றும், ஒருமித்துப் படுத்துக்கொள்ளும். ஒரு சிறுபிள்ளை அவைகளை நடத்திச் செல்லுவான்.

13 பசுவும் கரடியும் மேயும். அவைகளின் குட்டிகள் ஒருமித்துப் படுத்திருக்கும், சிங்கம் எருதுவைப்போல வைக்கோல் தின்னும்.

14 பால் குடிக்கும் குழந்தை விரியன் பாம்பு வளையின்மேல் விளையாடும். பால் மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும்.

15 என் பரிசுத்த பர்வதமெங்கும் அவைகள் தீங்குசெய்வதுமில்லை. கேடு செய்வதுமில்லை. ஏனெனில் ஜலம் சமுத்திரத்தை மூடியிருப்பதைப்போல, பூமி கர்த்தரின் அறிவினால் நிரம்பியிருக்கும்.

16 ஆனபடியால், எல்லா தேசங்களின் காரியங்களும் தெரியப்படுத்தப்படும்; ஆம் அனைத்து காரியங்களும் மனுபுத்திரருக்குத் தெரியப்படுத்தப்படும்.

17 வெளிப்படுத்தப்படாத ஒன்றும் அங்கே இரகசியமாக வைத்திருக்கப்படமாட்டாது. ஒளியிலே வெளியரங்கமாகாத அந்தகாரக் கிரியை அங்கே ஒன்றுமில்லை. பூமியின்மீது முத்திரையிடப்பட்டு கட்டவிழ்க்கப்படாது ஒன்றுமிவில்லை.

18 ஆகையால் மனுபுத்திரருக்கு வெளிப்படுத்தப்பட்டிருந்த, எல்லாக் காரியங்களும் அந்த நாளிலே வெளிப்படுத்தப்படும். இனி ஒருபோதும் மனுபுத்திரர் இருதயங்களின்மீது சாத்தான், நீடிய காலத்திற்கு வல்லமை கொள்ளமாட்டான். இப்பொழுது, என் பிரியமான சகோதரரே, நான் என் வார்த்தைகளை முடித்துக்கொள்கிறேன்.