இயேசு கிறிஸ்துவில் கவனம் செலுத்துங்கள்
நம் பிரச்சனைகளுக்கு அவர்தான் தீர்வு, ஆனால் நாம் அவரைப் பார்க்க நம் கண்களை உயர்த்தி நம் பார்வையை உயர்த்த வேண்டும்.
என் தந்தை என்னிடம், “நீ உன் பிரச்சினைகளில் மிகவும் தீவிரமாக கவனம் செலுத்தாதே, தீர்வு காண முடியாது,” ,என வழக்கமாக சொல்லுவார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய மிகவும் கடினமான பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கிறார் என்று நான் சாட்சி கூறுகிறேன். குறிப்பாக, நாம் ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் மற்றும் நம்மில் ஒருவராலும் தீர்க்க முடியாத நான்கு பிரச்சினைகளை அவர் மேற்கொண்டார்.
-
முதல் பிரச்சனை சரீர மரணம். நாம் அதை தாமதப்படுத்த அல்லது புறக்கணிக்க முயற்சி செய்யலாம், ஆனால் நம்மால் அதை மேற்கொள்ள முடியாது. இருப்பினும், இயேசு கிறிஸ்து நமக்காக மரணத்தை வென்றார், அதன் விளைவாக, நாம் அனைவரும் ஒரு நாள் உயிர்த்தெழுப்பப்படுவோம்.1
-
இரண்டாவது பிரச்சனை இந்த உலகின் இன்னல்கள், கடினமான அனுபவங்கள், சோகம், வலி மற்றும் அநியாயம் ஆகியவை அடங்கும். இயேசு கிறிஸ்து இவை அனைத்தையும் மேற்கொண்டார். அவரைப் பின்பற்ற முயற்சிப்பவர்களுக்கு, அவர் ஒரு நாள் “கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்” மீண்டும் விஷயங்களைச் சரிசெய்வார்.2 இதற்கிடையில், நம்பிக்கையுடனும், நல்ல உற்சாகத்துடனும், சமாதானத்துடனும் நம்முடைய சோதனைகளைக் கடந்து செல்ல அவர் நம்மைப் பலப்படுத்துவார்.3
-
மூன்றாவது பிரச்சனை பாவத்திலிருந்து எழும் ஆவிக்குரிய மரணம். இயேசு கிறிஸ்து “நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினையை” தம்மீது ஏற்றுக்கொள்வதன் மூலம் இந்தப் பிரச்சனையை மேற்கொண்டார்.4 அவருடைய பாவநிவாரண பலியின் காரணமாக, இரட்சகரில் விசுவாசம் வைத்து, உண்மையாக மனந்திரும்பி, ஞானஸ்நானம் போன்ற இன்றியமையாத, பிதா நமக்கு அளிக்கும் உடன்படிக்கையை ஏற்று, இறுதிபரியந்தம் நிலைத்திருந்தால், நம்முடைய பாவங்களின் விளைவுகளிலிருந்து நாம் விடுபடலாம்.5
-
நான்காவது பிரச்சனை நமது வரையறுக்கப்பட்ட, பூரணமற்ற இயல்புகள். இந்தப் பிரச்சனைக்கும் இயேசு கிறிஸ்துவிடம் தீர்வு இருக்கிறது. அவர் நம் தவறுகளை மட்டும் அழித்து நம்மை மீண்டும் குற்றமற்றவர்களாக ஆக்குவதில்லை. “பொல்லாப்பை இனிச் செய்ய மனமில்லாதவர்களாய், நன்மையையே தொடர்ந்து செய்யும்படிக்கு, … பலத்த மாற்றத்தை” அவரால் செய்ய முடியும்.6 கிறிஸ்துவின் கிருபையால் நாம் பரிபூரணமடைந்து ஒரு நாள் அவரைப் போல் ஆகலாம்.7
துரதிர்ஷ்டவசமாக, அடிக்கடி நாம் நம்முடைய சொந்தப் பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்துகிறோம், அதனால் நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவாகிய தீர்வின் மீது கவனத்தை இழக்கிறோம். அந்த தவறை எப்படி தவிர்ப்பது? அவருடனும் பரலோகத்திலுள்ள நமது பிதாவுடனும் செய்ய அழைக்கப்பட்ட உடன்படிக்கைகளில் பதில் இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.
உடன்படிக்கைகள் மூலம் இயேசு கிறிஸ்துவின் மீது கவனம் செலுத்துதல்
நமது உடன்படிக்கைகள் நம் கவனத்தையும், எண்ணங்களையும், செயல்களையும் கிறிஸ்துவின் மீது செலுத்த உதவுகின்றன. நாம் “[நாம்] செய்து கொண்ட உடன்படிக்கைகளில்” இசைந்திருக்கும்போது, நாம் “உலகத்தின் காரியங்களை ஒதுக்கிவிட்டு” நாம் விடாமுயற்சியுடன் தேட வேண்டிய “சிறந்த [உலக] விஷயங்களை” இன்னும் எளிதாக அடையாளம் காணலாம்.8
மார்மன் புஸ்தகத்தில் அம்மோன் மக்கள் அதைத்தான் செய்தார்கள். அவர்கள் இயேசு கிறிஸ்துவைப்பற்றிக் கற்றுக்கொண்டு, அவரில் தங்கள் வாழ்க்கையை கவனிக்கத் தொடங்கியபோது, அவர்கள் தங்கள் போர் ஆயுதங்களைப் புதைக்க வேண்டும் என்பதை உணர்ந்து, முற்றிலும் நேர்மையானவர்களாகவும், “தேவனிடத்தில் அவர்கள் கொண்டிருந்த வைராக்கியத்தினிமித்தமும் தனித்துவம் பெற்றார்கள்”. 9
உடன்படிக்கையைக் கடைப்பிடிப்பது, ஆவியின் செல்வாக்கை அழைக்கும் அனைத்தையும் தேடுவதற்கும், அதை விரட்டும் அனைத்தையும் நிராகரிப்பதற்கும் நம்மை வழிநடத்துகிறது, “பரிசுத்த ஆவியின் பிரசன்னத்திற்கு நாம் தகுதியுடையவர்களாக இருக்க முடியுமானால், நாமும் பரலோக பிதா, அவருடைய குமாரனுமான இயேசு கிறிஸ்து முன்னிலையில் வாழ தகுதியுடையவர்களாக இருக்க முடியும் என்பதை நாம் அறிவோம்”.10 அன்பான வார்த்தைகளைப் பயன்படுத்தி, நமது சொற்களை மாற்ற வேண்டும் என்று இது அர்த்தமாகலாம். ஆவிக்குரிய ரீதியில் ஆரோக்கியமற்ற பழக்கங்களை மாற்றியமைக்கும் புதிய பழக்கவழக்கங்கள், அதாவது தனித்தனியாகவும் நம் குடும்பத்துடனும் அன்றாட ஜெபம் மற்றும் வேதப் படிப்பு கர்த்தருடன் நமது உறவை வலுப்படுத்துவதைக் குறிக்கலாம்.
தலைவர் ரசல் எம் நெல்சன் சொன்னார், “ஞானஸ்நான தொட்டிகளிலும், ஆலயங்களிலும் உடன்படிக்கைகளைச் செய்து, அவற்றைக் கடைப்பிடிக்கும் ஒவ்வொரு நபரிடம் இயேசு கிறிஸ்துவின் வல்லமைக்கான அதிகரித்த நெருக்கமிருக்கிறது. …
தேவனுடன் செய்த உடன்படிக்கைகளைக் கடைப்பிடிப்பதற்கான வெகுமதி பரலோக வல்லமையாகும், நமது துன்பங்கள், சோதனைகள் மற்றும் மனவேதனைகளை சிறப்பாகச் சமாளிக்க நம்மைப் பலப்படுத்தும் வல்லமை.”11
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருவிருந்தின்போது நமது உடன்படிக்கைகளை புதுப்பித்தல், நம்மை நாமே பரிசோதிக்கவும், இயேசு கிறிஸ்துவின் மீது நம் வாழ்க்கையை மீண்டும் ஒருமுகப்படுத்தவும் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.13 திருவிருந்தில் பங்கேற்பதன் மூலம், “அவரை எப்பொழுதும் நினைவுகூர்வோம்” என்று அறிவிக்கிறோம்.13 எப்போதும் எனும் வார்த்தை மிகவும் முக்கியமானது. அது நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் இரட்சகரின் செல்வாக்கை விரிவுபடுத்துகிறது. நாம் அவரை சபையில் அல்லது நமது காலை ஜெபத்தில் மட்டும் அல்லது நாம் பிரச்சனையில் இருக்கும்போது மற்றும் நமக்கு ஏதாவது தேவைப்படும் போது மட்டுமே நினைவில் கொள்ள மாட்டோம்.
ஆம், நாம் சில சமயங்களில் திசைதிருப்பப்படுகிறோம். நாம் மறக்கிறோம். நாம் கவனம் இழக்கிறோம். ஆனால் நமது உடன்படிக்கைகளை புதுப்பித்தல் என்பது இரட்சகரை எப்போதும் நினைவுகூர விரும்புகிறோம், வாரம் முழுவதும் அவ்வாறு செய்ய முயற்சிப்போம், அடுத்த வாரமும் திருவிருந்து மேசையில் அவருக்கு மீண்டும் ஒப்புக்கொடுத்து மீண்டும் கவனம் செலுத்துவோம்.
நம் வீடுகளில் இயேசு கிறிஸ்துவின் மீது கவனம் செலுத்துதல்
தெளிவாக, இயேசு கிறிஸ்துவில் கவனம் செலுத்துவது ஒரு ஞாயிற்றுக்கிழமை, சபை நிகழ்ச்சியில் செயல்படுவதை விட அதிகமாக இருக்க வேண்டும். தலைவர் நெல்சன் 2018-ல் என்னைப் பின்பற்றி வாருங்கள் அறிமுகப்படுத்தியபோது, “வீட்டை மையமாகக் கொண்ட சபைக்கான நேரம் இது” என்றார்.14 “[நமது] வீட்டை விசுவாசத்தின் சரணாலயமாக மாற்ற” மற்றும் “சுவிசேஷம் கற்றுக்கொள்ளுதல் மையமாக மாற்றியமைக்க” வேண்டும் என அவர் சொன்னார். நாம் செய்தால் அவர் நமக்கு நான்கு அற்புதமான வாக்குறுதிகளை அளித்தார்.15
முதல் வாக்குறுதி: “உங்கள் ஓய்வு நாட்கள் மகிழ்ச்சியாக இருக்கும்”. நம் இரட்சகரிடம் நாம் நெருங்கி வரும் நாளாக அது மாறும். பெருவைச் சேர்ந்த ஒரு இளம் பெண் சொன்னது போல், “கர்த்தரிடமிருந்து நான் அதிக பதில்களைப் பெற்ற நாள் கர்த்தருடைய நாள்”.
இரண்டாம் வாக்குறுதி: “உங்கள் பிள்ளைகள் இரட்சகரின் போதனைகளின்படி கற்று வாழவும் மகிழ்ச்சியடைவார்கள்.” அந்த காரணத்திற்காக, “எங்கள் பிள்ளைகள் தங்களுடைய பாவங்களின் மன்னிப்புக்காக, எதனைக் கண்நோக்கவேண்டுமென்று அறியும்பொருட்டாக, நாங்கள் கிறிஸ்துவைப்பற்றிப் பேசுகிறோம். கிறிஸ்துவில் களிகூருகிறோம், கிறிஸ்துவைப்பற்றிப் போதிக்கிறோம்,”16
ஏனோஸ் செய்தது போல், ஒரு நாள், எங்கள் மகன் வேலைக்குச் செல்லும்போது அல்லது மலைகளுக்குச் செல்லும்போது அல்லது காடுகளில் மிருகங்களை வேட்டையாடச் செல்லும்போது, கிறிஸ்துவைப்பற்றியும் சுவிசேஷத்தின்படி வாழ்வதன் மகிழ்ச்சியைப்பற்றியும் நாம் அவனுக்குக் கற்பித்ததை அவன் நினைவில் கொள்வதற்காக இதைச் செய்கிறோம். மற்றும் யாருக்குத் தெரியும்? இயேசு கிறிஸ்துவிடம் தன்னைத் திருப்பும் ஆவிக்குரிய பசியை அவன் இறுதியாக உணரும் நாளாக இருக்கலாம், அதனால் கர்த்தரின் குரலை அவன் கேட்க முடியும், “உன்னுடைய பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன. நீ ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்”.17
மூன்றாம் வாக்குறுதி: “உங்கள் வாழ்க்கையிலும் உங்கள் வீட்டிலும் சத்துருவின் செல்வாக்கு குறையும்.” ஏன்? ஏனென்றால், இயேசு கிறிஸ்துவில் நாம் எவ்வளவு கவனம் செலுத்துகிறோமோ, அவ்வளவு அதிகமாக பாவம் அதன் கவர்ச்சியை இழக்கிறது.18 நம் வீடுகள் இரட்சகரின் ஒளியால் நிரப்பப்பட்டிருப்பதால், சத்துருவின் இருளுக்கு இடம் குறைகிறது.
நான்காம் வாக்குறுதி: “உங்கள் குடும்பத்தில் ஏற்படும் மாற்றங்கள் வியக்கத்தக்க மற்றும் நீடித்ததாக இருக்கும்.” ஏன்? ஏனென்றால் இயேசு கிறிஸ்து கொண்டுவரும் மாற்றம் “ஒரு பெரிய மாற்றம்”.18 அவர் நம் இயல்புகளையே மாற்றுகிறார்; நாம் “புதிய சிருஷ்டிகளாகுவோம்” .20 நாம் படிப்படியாக இரட்சகரைப் போல ஆகிவிடுகிறோம், தேவனின் பிள்ளைகள் அனைவருக்காகவும் அவருடைய தூய அன்பினால் நிரப்பப்படுகிறோம்.
இந்த வாக்குறுதிகள் தங்கள் வாழ்க்கையிலும் தங்கள் குடும்பங்களிலும் நிறைவேற்றப்படுவதை யார் விரும்ப மாட்டார்கள்? அவற்றைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்? நமது வீடுகளை விசுவாசத்தின் பரிசுத்த ஸ்தலமாகவும், சுவிசேஷக் கல்வியின் மையமாகவும் மாற்றுவதே இதற்குப் பதில். நாம் இதை எப்படி செய்கிறோம்? பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவின் மீது கவனம் செலுத்துவதன் மூலம், அவர்களை நம் குடும்ப வாழ்க்கையின் மையமாக மாற்றுவதன் மூலம், நம் வீட்டில் மிக முக்கியமான செல்வாக்கு ஆகிறது.
வேதத்தில் காணப்படும் கிறிஸ்துவின் வார்த்தைகளை உங்கள் வாழ்க்கையின் தினசரி பகுதியாக ஆக்குவதன் மூலம் நீங்கள் ஆரம்பிக்கலாம் என்று நான் பரிந்துரைக்கலாமா? சரியான வேதப் படிப்புக்கு பரிந்துரைக்கப்பட்ட சூத்திரம் எதுவும் இல்லை. ஒவ்வொரு நாளும் 5 அல்லது 10 நிமிடங்கள் இருக்கலாம் அல்லது உங்களால் முடிந்தால் அதற்கும் அதிகமாக இருக்கலாம். அது ஒரு நாளுக்கு ஒரு அத்தியாயமாகவோ அல்லது சில வசனங்களாகவோ இருக்கலாம். சில குடும்பங்கள் பள்ளி அல்லது வேலைக்குச் செல்வதற்கு முன் காலையில் படிக்க விரும்புகின்றன. மற்றவர்கள் படுக்கைக்கு முன் இரவில் படிக்க விரும்புகிறார்கள். சில இளம் ஜோடிகள் தாங்கள் வேலைக்குச் செல்லும் வழியில் தனித்தனியாகப் படிப்பதாகவும், பின்னர் குறுஞ்செய்தி மூலம் ஒருவருக்கொருவர் உள்ளுணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதாகவும் என்னிடம் கூறியுள்ளனர், எனவே அவர்களின் கருத்துகள் மற்றும் விவாதங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
என்னைப் பின்பற்றி வாருங்கள் என்பது, தனிநபர்கள் மற்றும் குடும்பங்கள் பரிசுத்த நூல்களிலிருந்து சுவிசேஷக் கொள்கைகளைக் கற்றுக்கொள்ள உதவும் நடவடிக்கைகள் மற்றும் ஆதாரங்களின் பல பரிந்துரைகளை வழங்குகிறது. வேதாகம காணொலிகளும், மார்மன் புஸ்தக காணொலிகளும் உங்கள் குடும்பத்தினருக்கு வேதத்தை இன்னும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கு மதிப்புமிக்க கருவிகளாக இருக்கலாம். இளைஞர்களும் பிள்ளைகளும் பெரும்பாலும் வேதங்களில் உள்ள மறக்கமுடியாத கதைகளால் உணர்த்தப்படுகிறார்கள். சேவை, நல்லொழுக்கம், கீழ்ப்படிதல், பொறுமை, விடாமுயற்சி, தனிப்பட்ட வெளிப்பாடு, தொண்டு, மனத்தாழ்மை மற்றும் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் ஆகியவற்றின் நல்ல எடுத்துக்காட்டுகள் தேவைப்படும்போது, இந்தக் கதைகளும், அவர்கள் கற்பிக்கும் சுவிசேஷ கோட்பாடுகளும், உங்கள் பிள்ளைகளுக்கு நம்பகமான நண்பர்களைப் போல இருக்கும். காலப்போக்கில், தேவனுடைய வார்த்தையை ருசித்தல் உங்களின் நிலைத்தன்மை உங்கள் பிள்ளைகள் இரட்சகருடன் நெருக்கமாக வளர உதவும். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அவரை அறிந்து கொள்வார்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இன்று ஜீவிக்கிறார். அவர் நம் வாழ்வில் சுறுசுறுப்பாக, தினசரி இருப்பவராக இருக்க முடியும். நம் பிரச்சனைகளுக்கு அவர்தான் தீர்வு, ஆனால் நாம் அவரைப் பார்க்க நம் கண்களை உயர்த்தி நம் பார்வையை உயர்த்த வேண்டும். அவர் சொன்னார், “எல்லா சிந்தனையிலும் என்னை நோக்கிப் பார், சந்தேகிக்காதே, பயப்படாதே.”21 அவர் மீதும் பரலோகத்திலுள்ள நமது பிதா மீதும் நாம் கவனம் செலுத்தி, அவர்களுடன் உடன்படிக்கைகளை செய்து, அவற்றைக் கடைப்பிடித்து, அவர்களை நம் வீடு மற்றும் குடும்பத்தில் மிக முக்கியமான செல்வாக்காக ஆக்கும்போது, தலைவர் நெல்சன் நினைத்த மாதிரியான நபர்களாக நாம் மாறுவோம்: “கர்த்தர் மீண்டும் வரும்போது அவரை வரவேற்கத் திறனும், ஆயத்தமும், தகுதியும் உள்ள மக்கள், இந்த வீழ்ச்சியுற்ற உலகத்தில் இயேசு கிறிஸ்துவை ஏற்கனவே தேர்ந்தெடுத்த மக்கள், இயேசு கிறிஸ்துவின் உயர்ந்த, பரிசுத்த பிரமாணங்களின்படி வாழ்வதற்கு தங்கள் சுயாதீனத்தில் மகிழ்ச்சியடையும் மக்கள்.”22 இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.