வேதங்கள்
1 நேபி 9


அதிகாரம் 9

நேபி இரண்டு தொகுப்புப் பதிவேடுகளைச் செய்தல் – ஒவ்வொன்றும் நேபியின் தகடுகள் என அழைக்கப்படுதல் – பெரிய தகடுகள் இம்மைக்குரிய வரலாற்றை அடக்கியுள்ளது; சிறியவைகளோ விசேஷமாகப் பரிசுத்த காரியங்களைப்பற்றி பகிர்கிறது. ஏறக்குறைய கி.மு 600–592.

1 என் தகப்பன் இந்த எல்லாக் காரியங்களையும் மற்றும் இந்த தகடுகளின்மீது எழுதப்படமுடியாத அநேக பெரிய காரியங்களையும், அவர் லெமுவேலின் பள்ளத்தாக்கில் ஒரு கூடாரத்தில் வாசமாய் இருந்தபொழுது கண்டும், கேட்டும், பேசியும் இருந்தார்.

2 இப்பொழுது, இந்தத் தகடுகளைக் குறித்து, நான் சொன்னதுபோல, இதோ, என் ஜனத்தின் வரலாற்றை முழு விவரமாக நான் எழுதுகிற தகடுகள் அவை அல்ல; ஏனெனில் என் ஜனத்தின் முழு விவரத்தையும் எழுதியுள்ள அந்தத் தகடுகளுக்கு நேபியின் பெயரைக் கொடுத்துள்ளேன்; ஆகையால் என்னுடைய சொந்தப் பெயரிலே அவைகள் நேபியின் தகடுகள் என்று அழைக்கப்படுகின்றன; மேலும் இந்தத் தகடுகளும் நேபியின் தகடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

3 இருந்த போதிலும், என் ஜனத்தின் ஊழியத்தின் விவரம் பொறிக்கப்படவேண்டும் என்ற முக்கிய நோக்கத்திற்காக, நான் இந்தத் தகடுகளை உருவாக்கவேண்டுமென்று கர்த்தருடைய கட்டளையை நான் பெற்றிருக்கிறேன்.

4 மற்ற தகடுகளின்மீது, ராஜாக்களின் ஆளுகை மற்றும் என் ஜனத்தின் யுத்தங்கள், பிணக்குகளின் விவரத்தைப் பதிக்க வேண்டும்; ஆதலால் இந்தத் தகடுகள், ஊழியத்தின் அதிகமான பகுதிக்கானவை; மற்ற தகடுகள், ராஜாக்களின் ஆளுகைகள் மற்றும் என் மக்களின் யுத்தங்கள் மற்றும் பிணக்குகளின் அதிகமான பகுதிகளுக்கானவை.

5 ஆகையால், அவரில் ஒரு ஞானமுள்ள நோக்கத்திற்காகக் கர்த்தர், இந்தத் தகடுகளை எழுதவேண்டுமென எனக்குக் கட்டளையிட்டுள்ளார். அதன் நோக்கத்தையோ, நான் அறியாமலிருக்கிறேன்.

6 ஆனால் கர்த்தரோ ஆதியிலிருந்து சகல காரியங்களையும் அறிந்திருக்கிறார்; ஆகையால் மனுபுத்திரர்களிடையே அவர் எல்லா கிரியைகளையும் நிறைவேற்ற அவர் ஒரு வழியை ஆயத்தப்படுத்துகிறார்; ஏனெனில் இதோ, அவருடைய எல்லா வார்த்தைகளையும் நிறைவேற்ற அவருக்கு எல்லா வல்லமையுமுள்ளது. இது இப்படியாக இருக்கிறது. ஆமென்.