வேதங்கள்
1 நேபி 7


அதிகாரம் 7

லேகியின் குமாரர்கள் எருசலேமுக்குத் திரும்பி, இஸ்மவேலையும் அவனது குடும்பத்தையும், தங்களின் பயணத்தில் அவர்களுடன் சேர்ந்துகொள்ளும்படி அழைத்தல் – லாமானும் மற்றவர்களும் கலகஞ்செய்தல் – நேபி தன் சகோதரருக்கு கர்த்தர்மீது நம்பிக்கை வைக்குமாறு புத்தி சொல்லுதல் – அவர்கள் அவனை கயிறுகளால் கட்டி, அவனை அழிக்க திட்டமிடுதல் – அவன் விசுவாசத்தின் வல்லமையினால் கட்டவிழ்க்கப்படுதல் – அவனுடைய சகோதரர்கள் மன்னிப்புக்கேட்டல் – லேகியும் அவனுடைய கூட்டத்தாரும் பலியையும் தகனபலிகளையும் செலுத்துதல். ஏறக்குறைய கி.மு. 600–592.

1 இப்பொழுது, என் தகப்பனாகிய லேகி தம்முடைய சந்ததியைக் குறித்த தீர்க்கதரிசனத்தை முடித்த பின்பு, கர்த்தர் அவருடனே மறுபடியுமாய்ப் பேசி, அவர் தம்முடைய குடும்பத்தைத் தனியாக வனாந்தரத்திற்கு அழைத்துச் செல்வது அவருக்கு உகந்ததல்ல என்றும், ஆனால் அவருடைய குமாரர்கள் வாக்குத்தத்தத்தின் தேசத்திலே கர்த்தருக்கு சந்ததி உண்டாக்கும்படி குமாரத்திகளை மனைவிகளாகக் கொள்ளவேண்டுமென்றும் சொன்னார்.

2 நேபியாகிய நானும், என் சகோதரரும், மறுபடியும் எருசலேம் தேசத்திற்குச் சென்று, இஸ்மவேலையும், அவன் குடும்பத்தாரையும், வனாந்தரத்திற்கு கொண்டுவரவேண்டுமெனவும் கர்த்தர் அவருக்குக் கட்டளையிட்டார்.

3 நேபியாகிய நான் மறுபடியும் என் சகோதரருடன் எருசலேமுக்கு ஏறிப்போகும்படிக்கு வனாந்தரத்தினுள் சென்றேன்.

4 நாங்கள் மேலேறி இஸ்மவேலின் வீட்டிற்கு சென்றோம். மேலும் கர்த்தருடைய வார்த்தைகளை அவனிடத்தில் பேசும்படிக்கு இஸ்மவேலின் பார்வையில் நாங்கள் தயை பெற்றோம்.

5 அவர்கள் எங்களுடனே எங்கள் தகப்பனின் கூடாரத்தை நோக்கி வனாந்தரத்தினுள் பயணத்தை மேற்கொள்ளும்படிக்கு, கர்த்தர் இஸ்மவேல் மற்றும் அவன் வீட்டாரின் இருதயத்தையும் இளக்கினார்.

6 நாங்கள் வனாந்தரத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபொழுது, இதோ, லாமானும் லெமுவேலும், இஸ்மவேலின் இரண்டு குமாரத்திகளும், இஸ்மவேலின் இரண்டு குமாரரும் அவர்களுடைய குடும்பத்தாரும், ஆம், நேபியாகிய எனக்கும், சாம், அவர்கள் தகப்பனாகிய இஸ்மவேல், அவனுடைய மனைவி, அவனுடைய பிற மூன்று குமாரத்திகள் ஆகியோருக்கு எதிராகவும் கலகஞ் செய்தார்கள்.

7 அப்போது, இந்தக் கலகத்தினாலே, அவர்கள் எருசலேம் தேசத்திற்குத் திரும்பிப்போக வாஞ்சையுடையவர்களாய் இருந்தார்கள்.

8 இப்பொழுதும், நேபியாகிய நான் அவர்களுடைய இருதயக் கடினத்தினிமித்தம் துக்கப்பட்டுக் கொண்டிருந்தபடியால், நான் அவர்களிடத்தில், ஆம், லாமானுடனும் லெமுவேலுடனும் பேசி, இதோ, நீங்கள் என் மூத்த சகோதரர்களாய் இருக்கிறீர்கள். உங்கள் இளைய சகோதரனாகிய நான் உங்களுடனே பேசும்படிக்கும், உங்களுக்கு ஒரு மாதிரியை ஏற்படுத்தும்படிக்கும், நீங்கள் உங்கள் இருதயத்தில் கடினமுள்ளவர்களாயும், மனதில் குருடராயும் இருப்பது எப்படி என்றேன்.

9 கர்த்தருடைய வார்த்தைக்கு நீங்கள் செவிகொடாமல் இருப்பது என்ன?

10 நீங்கள் கர்த்தருடைய தூதனைப் பார்த்தீர்கள் என்பதை மறந்துபோனது என்ன?

11 ஆம், லாபானுடைய கரங்களில் இருந்து விடுவித்ததையும், மேலும் நாம் பதிவேடுகளைப் பெறும்படியாகவும் கர்த்தர் நமக்குச் செய்த மகத்தான காரியங்களையும் நீங்கள் மறந்துபோனது என்ன?

12 ஆம், கர்த்தரில் தங்கள் விசுவாசத்தை வைப்பார்களெனில், அவர் தம்முடைய சித்தத்தின்படியே மனுபுத்திரருக்கு எல்லாக் காரியங்களையும் செய்யப் போதுமானவராய் இருக்கிறார் என்பதை நீங்கள் மறந்துபோனது என்ன? ஆகையால் நாம் அவரில் விசுவாசமுள்ளவர்களாய் இருப்போமாக.

13 நாம் அவருக்கு விசுவாசமுள்ளவர்களாய் இருப்போமெனில், நாம் வாக்குத்தத்தத்தின் தேசத்தை அடைவோம்; எருசலேமின் அழிவைக் குறித்த கர்த்தருடைய வார்த்தை நிறைவேற்றப்படுவதை, வருங்காலத்தில் ஒரு சமயத்தில் நீங்கள் அறிவீர்கள்; ஏனெனில் எருசலேமின் அழிவைக் குறித்து கர்த்தர் பேசிய எல்லாக் காரியங்களும் நிறைவேற்றப்படவேண்டும்.

14 ஏனெனில் இதோ, கர்த்தருடைய ஆவி அவர்களில் கிரியை செய்வதிலிருந்து விரைவில் நின்றுபோகும்; இதோ, அவர்கள் தீர்க்கதரிசிகளை மறுதலித்தார்கள், எரேமியாவை சிறையிலே போட்டார்கள். மேலும் அவர்கள் என் தகப்பன் தேசத்திலிருந்து ஓடிப்போகுமளவிற்கு அவர்கள் அவருடைய ஜீவனை வாங்க வகை தேடினார்கள்.

15 இதோ, இப்பொழுதும், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் எருசலேமிற்குத் திரும்பிப்போனால் நீங்களும் அவர்களுடன் அழிவீர்கள். மேலும் இப்பொழுதும் நீங்கள் அதைத் தெரிந்துகொள்வீர்களானால், நீங்கள் மேலேறி தேசத்திற்கு போங்கள்; மேலும் நீங்கள் போவீர்களானால் நீங்களும் அழிவீர்கள் என்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தைகளை நினைவுகூருங்கள்; ஏனெனில் நான் இப்படியாகப் பேசவேண்டுமென கர்த்தருடைய ஆவியானவர் என்னை நெருக்கி ஏவினார்.

16 நேபியாகிய நான் இந்த வார்த்தைகளை என் சகோதரரிடம் பேசியபொழுது, அவர்கள் என்மீது கோபமடைந்தார்கள். இதோ, அவர்கள் மிகவும் கோபமாயிருந்தபடியால், என்மீது கைபோட்டு என்னைக் கயிறுகளினால் கட்டினார்கள், ஏனெனில் காட்டுமிருகங்கள் என்னை பட்சித்துப்போடும்படிக்கு வனாந்தரத்தில் என்னை விட்டு விட்டு அவர்கள் என் ஜீவனை எடுத்துப்போடும்படியாக வகைதேடினார்கள்.

17 நான் கர்த்தரை நோக்கி, கர்த்தாவே, உம்மீதுள்ள என்னுடைய விசுவாசத்தின்படியே, என் சகோதரருடைய கரங்களிலிருந்து என்னை விடுவியும்; ஆம் நான் கட்டப்பட்டிருக்கும் இந்தக் கட்டுகளை நான் அறுத்துப்போடும்படி, எனக்கு பெலன் தாரும் என்று ஜெபம்பண்ணினேன்.

18 நான் இந்த வார்த்தைகளைச் சொன்னபொழுது, இதோ, என் கரங்களிலும், கால்களிலும் இருந்த கட்டுகள் தளர்ந்துபோயின, நான் என் சகோதரர் முன்பாக நின்று மறுபடியும் அவர்களுடன் பேசினேன்.

19 அவர்கள் மறுபடியும் என்மேல் கோபமடைந்தவர்களாய், என்மேல் கைபோடப்பார்த்தார்கள்; ஆனால் இதோ, இஸ்மவேலின் குமாரத்திகளில் ஒருத்தியும், ஆம், அவளுடைய தாயும், இஸ்மவேலின் குமாரரில் ஒருவனும் என் சகோதரருடைய இருதயங்களை இளக்கும் அளவுக்கு அவர்களிடம் பரிந்து பேசினார்கள்; அப்பொழுது அவர்கள் என் ஜீவனை எடுத்துப்போட முயற்சிப்பதை நிறுத்திவிட்டார்கள்.

20 அவர்களுடைய துன்மார்க்கத்தினிமித்தம் அவர்கள் துக்கமடைந்தவர்களாய், அவர்கள் என் முன்னால் தலைவணங்கி, அவர்கள் எனக்கு எதிராகச் செய்த காரியத்தை நான் மன்னிக்கும்படி என்னிடம் மன்றாடினார்கள்.

21 அவர்கள் செய்த எல்லாவற்றையும் நான் அவர்களுக்கு உண்மையாகவே மன்னித்தேன், கர்த்தராகிய தங்கள் தேவனிடம் மன்னிப்பிற்காக ஜெபிக்கும்படி நான் அவர்களுக்கு புத்திசொன்னேன். அவர்கள் அப்படியே செய்தார்கள், அவர்கள் கர்த்தரிடம் ஜெபித்த பின்பு, நாங்கள் எங்கள் தகப்பனின் கூடாரத்தை நோக்கி மறுபடியும் பயணம் செய்தோம்.

22 நாங்கள் எங்கள் தகப்பனின் கூடாரத்திற்கு வந்து சேர்ந்தோம். மேலும் நானும் என் சகோதரர்களும் இஸ்மவேலின் வீட்டார் எல்லோரும், என் தகப்பனின் கூடாரத்திற்கு வந்துசேர்ந்த பின்பு, அவர்கள் தங்கள் கர்த்தராகிய தேவனுக்கு நன்றி செலுத்தினார்கள்; அவர்கள் அவருக்கு பலியையும் தகனபலியையும் செலுத்தினார்கள்.