வேதங்கள்
1 நேபி 3


அதிகாரம் 3

பித்தளைத் தகடுகளைப் பெறும்படியாய் லேகியின் குமாரர்கள் எருசலேமுக்குத் திரும்பிப் போகுதல் – லாபான் தகடுகளைக் கொடுக்க மறுத்தல் – நேபி தன் சகோதரர்களுக்கு புத்திமதிசொல்லி ஊக்கமளித்தல் – லாபான் அவர்களின் உடைமைகளைத் திருடிக்கொண்டு அவர்களை சங்கரிக்க முயற்சித்தல் – லாமானும் லெமுவேலும், நேபியையும் சாமையும் அடித்தல், ஒரு தூதனால் கடிந்துகொள்ளப்படுதல். ஏறக்குறைய கி.மு. 600–592.

1 நேபியாகிய நான், கர்த்தருடன் பேசிவிட்டு, என் தகப்பனின் கூடாரத்திற்குத் திரும்பினேன்.

2 அவர் என்னை நோக்கி: இதோ, நான் ஒரு சொப்பனம் கண்டேன், அதில் நீயும் உன் சகோதரரும் எருசலேமுக்குத் திரும்பிச் செல்லவேண்டுமெனக் கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார், என்று சொன்னார்.

3 ஏனெனில் இதோ, யூதர்களின் பதிவேட்டையும், என் முற்பிதாக்களின் வம்சவரலாற்றையும் லாபான் வைத்திருக்கிறான். அவைகள் பித்தளைத் தகடுகளின்மேல் பதிக்கப்பட்டிருக்கின்றன.

4 ஆகையால், நீயும் உன் சகோதரரும் லாபானுடைய வீட்டிற்குள் சென்று, அந்தப் பதிவேடுகளைத் தேடி, அவைகளை இங்கே வனாந்தரத்திற்குள் கொண்டுவர வேண்டுமென, கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.

5 இதோ, இப்பொழுதும், நான் அவர்களிடத்தில் கேட்டது ஒரு கடினமான காரியம் என்று சொல்லி, உன் சகோதரர்கள் முறுமுறுக்கிறார்கள்; ஆனாலும் இதோ, நான் அவர்களிடத்தில் இவற்றைக் கேட்கவில்லை, ஆனால் இது கர்த்தருடைய கட்டளையாயிருக்கிறது.

6 ஆகையால் என் மகனே, நீ போ, நீ முறுமுறுக்காததினிமித்தம் கர்த்தரிடத்திலிருந்து தயைபெற்றுக்கொள்வாய்.

7 நேபியாகிய நான் என் தகப்பனை நோக்கி சொன்னேன்: நான் போய் கர்த்தர் கட்டளையிட்ட காரியங்களைச் செய்வேன், ஏனெனில் மனுபுத்திரருக்கு தாம் கட்டளையிட்ட காரியத்தைச் செய்துமுடிக்கக்கூடிய ஒரு வழியை ஆயத்தப்படுத்தினாலொழிய, கர்த்தர் எந்தக் கட்டளைகளையும் அவர்களுக்குக் கொடுப்பதில்லை என்பதையும் நான் அறிகிறேன்.

8 என் தகப்பன் இந்த வார்த்தைகளைக் கேட்டபொழுது, கர்த்தரால் நான் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன் என்பதை அவர் அறிந்ததினால், மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

9 நேபியாகிய நானும், என் சகோதரர்களும், மேலே எருசலேம் தேசத்திற்குப் போவதற்காக, எங்கள் கூடாரங்களுடன் வனாந்தரத்தில் எங்களுடைய பயணத்தைத் தொடங்கினோம்.

10 நாங்கள் மேலே எருசலேம் தேசத்தை வந்தடைந்தபொழுது, நானும் என் சகோதரரும் ஒருவரோடொருவர் ஆலோசித்தோம்.

11 எங்களில் யார் லாபானுடைய வீட்டிற்குள் செல்லவேண்டுமென, நாங்கள் சீட்டுப்போட்டோம். அந்தச்சீட்டு லாமான் பேருக்கு விழுந்தது; லாபானுடைய வீட்டிற்கு லாமான் சென்று, தன்னுடைய வீட்டில் அவன் உட்கார்ந்திருந்தபொழுது, அவனுடன் பேசினான்.

12 என் தகப்பனின் வம்சவரலாறு அடங்கியிருந்த பித்தளைத் தகடுகளின்மேல், பொறிக்கப்பட்டிருந்த பதிவேடுகளை, லாபானிடத்தில் அவன் கேட்டான்.

13 இதோ, லாபான் கோபம்கொண்டு அவனைத் தன் சமுகத்திலிருந்து வெளியே தள்ளிவிட்டான், லாமான் அந்தப் பதிவேடுகளை எடுத்துக்கொள்ள அவன் விரும்பவில்லை. ஆகையால் அவன் அவனை நோக்கி: இதோ, நீ கொள்ளைக்காரனாயிருக்கிறாய், நான் உன்னைக் கொன்றுபோடுவேன் என்றான்.

14 ஆனால் லாமான் அவன் சமுகத்தைவிட்டுத் தப்பியோடி, லாபான் செய்த காரியங்களை எங்களுக்குச் சொன்னான். நாங்கள் மிகவும் வருத்தப்படத் தொடங்கினோம், மேலும் என் சகோதரர்கள் வனாந்தரத்திலுள்ள என் தகப்பனிடத்திற்கு திரும்பிப் போகவிருந்தார்கள்.

15 ஆனாலும் இதோ, நான் அவர்களை நோக்கி: கர்த்தர் ஜீவிக்கிற மட்டும், நாம் உயிரோடிருக்கு மட்டும், கர்த்தர் நம்மிடத்தில் கட்டளையிட்ட காரியத்தைச் செய்து முடிக்காமல், கீழே நாம் வனாந்தரத்தில் இருக்கும் நம் தகப்பனிடத்திற்குப் போகப் போவதில்லை என்றேன்.

16 அதனால் கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொள்கிறதில் நாம் உண்மையுள்ளவர்களாயிருப்போம்; ஆகையால் நாம் கீழே நம்முடைய தகப்பனின் சுதந்திர தேசத்திற்குச் செல்வோம், ஏனெனில், இதோ, அவர் பொன்னையும், வெள்ளியையும், சகலவிதமான ஆஸ்திகளையும் துறந்தார். மேலும் இவைகள் எல்லாவற்றையும் கர்த்தருடைய கட்டளைகளினிமித்தமே அவர் செய்தார்.

17 ஏனெனில், ஜனங்களுடைய துன்மார்க்கத்தினிமித்தம், எருசலேம் அழிக்கப்படவேண்டும் என்பதை அவர் அறிந்திருந்தார்.

18 ஏனெனில் இதோ, அவர்கள் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைப் புறக்கணித்தனர். ஆகையால், தேசத்தைவிட்டு ஓடிப்போகும்படி கட்டளையிட்ட பின்பும், நம் தகப்பன் தேசத்திலே தங்கி வாசம் செய்திருப்பாரெனில், அவரும் அழிவார். ஆகையால் அவர் தேசத்தைவிட்டு ஓடிப்போவது தேவையாயிருக்கிறது.

19 இதோ, நம்முடைய பிள்ளைகளுக்காக, நம் பிதாக்களின் பாஷையைப் பாதுகாப்பதற்காக, நாம் இந்தப் பதிவேடுகளைப் பெறவேண்டும் என்பது தேவ ஞானமாயிருக்கிறது.

20 உலகம் ஆரம்பமானது முதல், இந்தக் காலம் வரைக்கும், ஆவியினாலும், தேவனின் வல்லமையினாலும், அவர்களிடத்தில் கொடுக்கப்பட்ட, எல்லா பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாயால் பேசப்பட்ட வார்த்தைகளை, நாம் அவர்களுக்காக பாதுகாப்பதற்காகவுமே.

21 இவ்விதமான வார்த்தைகளால், என் சகோதரர், தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்வதில் உண்மையாயிருக்கவேண்டுமென நான் அவர்களை இசையச் செய்தேன்.

22 நாங்கள் எங்களின் சுதந்திர தேசத்திற்கு இறங்கிச் சென்று, எங்களின் பொன்னையும், எங்களின் வெள்ளியையும், எங்களின் விலையேறப்பெற்ற பொருட்களையும் சேகரித்தோம்.

23 இந்தப் பொருட்களைச் சேகரித்த பின்பு, நாங்கள் மறுபடியும் லாபானுடைய வீட்டிற்கு ஏறிச் சென்றோம்.

24 நாங்கள் லாபானிடம் சென்று, அவனிடத்திலிருந்த பித்தளைத் தகடுகளின் மேல் பதிக்கப்பட்டுள்ள பதிவேடுகளை, அவன் எங்களுக்குத் தரும்படி, விரும்புவதாகக் கூறி, அதற்குப் பதிலாக எங்களின் பொன்னையும், எங்களின் வெள்ளியையும், எங்களின் விலைமதிப்பற்ற பொருட்களையும் அவனுக்குத் தர விரும்புவதாகச் சொன்னோம்.

25 லாபான் எங்களுடைய ஆஸ்தி மிகவும் அதிகமாய் இருப்பதைக் கண்டபொழுது, அவன் எங்களை வெளியே தள்ளி, எங்களுடைய ஆஸ்தியை அவன் அடைந்துகொள்ளும்படிக்குத், தன் வேலையாட்களை அனுப்பி எங்களைக் கொலை செய்யும் அளவுக்கு, அவன் அதை இச்சித்தான்.

26 நாங்கள் லாபானின் வேலைக்காரருக்கு முன்பாக ஓடிப்போனோம், மேலும் நாங்கள் எங்கள் ஆஸ்திகளைவிட்டுச் செல்ல வேண்டியவர்களானோம், அது லாபானின் கரங்களில் சிக்கியது.

27 நாங்கள் வனாந்தரத்தினுள் ஓடிப்போனோம், லாபானுடைய வேலைக்காரர்கள் எங்களை முந்தவில்லை, நாங்கள் ஒரு பாறையின் பிளவிலே மறைந்துகொண்டோம்.

28 லாமான், என் பேரிலும் என் தகப்பனின் பேரிலும் கோபம் கொண்டான், லாமானுடைய வார்த்தைகளைக் கேட்டபடியினால், லெமுவேலும் அவ்வாறே செய்தான். ஆகையால் லாமானும் லெமுவேலும் அவர்களுடைய இளைய சகோதரர்களாகிய எங்களை கடினமான வார்த்தைகளால் பேசி, ஒரு கோலால் எங்களை அடிக்கவும் செய்தார்கள்.

29 அவர்கள் எங்களைக் கோலால் அடித்தபொழுது, இதோ, கர்த்தருடைய தூதன் வந்து, அவர்களுக்கு முன்பாக நின்று அவர்களை நோக்கி: ஏன் உங்கள் இளைய சகோதரனை கோலால் அடிக்கிறீர்கள்? அவனை உங்கள் மேல் அதிபதியாய்க் கர்த்தர் தெரிந்துகொண்டார் என்பதை நீங்கள் அறியீர்களா, இதுவும் உங்கள் அக்கிரமம் நிமித்தமே? இதோ நீங்கள் மறுபடியும் மேலே எருசலேமுக்குப் போவீர்கள், கர்த்தர் லாபானை உங்கள் கரங்களில் ஒப்படைப்பார் என்றான்.

30 மேலும், தூதன் எங்களிடம் பேசிய பின்பு, அவன் போனான்.

31 தூதன் எங்களைவிட்டுப் போனபின்பு லாமானும் லெமுவேலும் மறுபடியும் முறுமுறுக்கத் தொடங்கி, கர்த்தர் லாபானை நம் கரங்களில் ஒப்படைப்பது எப்படி இயலும்? இதோ, அவன் பெலசாலியான மனுஷன், அவன் ஐம்பது பேரை கட்டளையிடக் கூடியவன், ஆம், அவனால் ஐம்பதுபேரைக் கொல்லவும் முடியும்; அப்படியிருக்கையில் நம்மை ஏன் கொல்லமாட்டான் என்று சொன்னார்கள்.