வேதங்கள்
1 நேபி 10


அதிகாரம் 10

பாபிலோனியர்களால் யூதர்கள் சிறைபிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்படுவர் என்று லேகி முன்னறிவித்தல் – யூதர்கள் மத்தியில் ஒரு மேசியா, ஒரு இரட்சகர், ஒரு மீட்பர் வருவதைக் குறித்து அவர் சொல்லுதல் – தேவ ஆட்டுக்குட்டிக்கு ஞானஸ்நானம் கொடுக்க ஒருவர் வருவதைக் குறித்தும் லேகி சொல்லுதல் – மேசியாவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் குறித்து லேகி சொல்லுதல் – இஸ்ரவேலின் சிதறடிக்கப்படுதலையும், கூடிச்சேர்தலையையும் ஒரு ஒலிவ மரத்திற்கு ஒப்பிடுதல் – தேவ குமாரனைப்பற்றியும், பரிசுத்த ஆவியானவரின் வரத்தைப்பற்றியும் நீதியின் அவசியத்தைக் குறித்தும் நேபி பேசுதல். ஏறக்குறைய கி.மு. 600–592.

1 இப்பொழுது, நேபியாகிய நான் என்னுடைய நடவடிக்கைகளையும், என்னுடைய ஆளுகையையும் மற்றும் ஊழியத்தையும் குறித்து, இந்தத் தகடுகளின்மீது, ஒரு விவரத்தைக் கொடுக்கத் தொடருகிறேன். ஆகையால் என்னுடைய விவரத்தைத் தொடர்வதற்கு, நான் என்னுடைய தகப்பன் மற்றும் சகோதரர்களின் காரியங்களைக் குறித்துச் சற்றே பேசுதல் வேண்டும்.

2 இதோ, அவர்களுக்குக் கருத்தாய் எல்லா புத்திமதிகள் சொல்லியும், தன் சொப்பனத்தைக் குறித்த வார்த்தைகளையும் என் தகப்பன் பேசுவதை முடித்த பின்னர் அவர்களிடத்தில் யூதர்களைப்பற்றி அவர் பேசினார்.

3 அதாவது, கர்த்தருக்கு ஏற்ற காலத்தின்படி, அவர்களும், அந்த பெரிய நகரமாகிய எருசலேமும்கூட, அழிக்கப்பட்டு, பலர் பாபிலோனுக்குள் சிறைபிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்ட பின்பு, அவர்கள் மீண்டும் திரும்ப, ஆம், சிறைத்தனத்திலிருந்து திரும்பவும் வெளியே கொண்டுவரப்படுவார்கள்; மேலும் அவர்கள் சிறைத்தனத்திலிருந்து திரும்பவும் வெளியே கொண்டுவரப்பட்ட பின்பு அவர்கள் தங்கள் சுதந்திர தேசத்தை பெற்றுக்கொள்வார்கள்.

4 ஆம், என் தகப்பன் எருசலேமை விட்டுவந்த காலத்திலிருந்து, அறுநூறு வருஷங்களில், யூதர்கள் மத்தியில் ஒரு தீர்க்கதரிசியை கர்த்தராகிய தேவன் எழும்பப்பண்ணுவார், ஒரு மேசியா அல்லது வேறு வார்த்தைகளிலெனில், அவரே உலகத்தின் இரட்சகர்.

5 அவர் தீர்க்கதரிசிகளைக் குறித்தும் பேசினார், அவர் பேசப்பட்ட இந்த மேசியாவை அல்லது உலகத்தின் மீட்பரைக் குறித்த இந்தக் காரியங்களை எவ்வளவு அதிகமானோர் சாட்சி பகர்ந்துள்ளனர் எனவும் சொன்னார்.

6 ஆகையால், மனுக்குலம் யாவும், தொலைந்த மற்றும் வீழ்ந்த நிலையிலே இருந்தார்கள், மேலும் அவர்கள் இந்த மீட்பரைச் சார்ந்தாலொழிய என்றைக்கும் அப்படியே இருப்பார்கள்.

7 கர்த்தரின் வழியை ஆயத்தப்படுத்த, மேசியாவிற்கு முன்னர் வரப்போகிற ஒரு தீர்க்கதரிசியைக் குறித்தும் அவர் சொன்னார்.

8 ஆம், அவன் போய் வனாந்தரத்திலே கூக்குரலிட்டான், கர்த்தருடைய வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவரின் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள், ஏனெனில் உங்கள் மத்தியில் நிற்கும் அவரை நீங்கள் அறியாமலிருக்கிறீர்கள்; என்னைவிட அவர் வல்லமையுள்ளவர், அவருடைய பாதரட்சையின் வாரையோ அவிழ்ப்பதற்கு நான் பாத்திரனல்ல. மேலும் இந்தக் காரியத்தைக் குறித்து என் தகப்பன் அதிகமாய்ப் பேசினார்.

9 யோர்தானுக்கு அக்கரையிலுள்ள பெத்தாபராவில் அவன் ஞானஸ்நானம் கொடுக்க வேண்டுமென்று என் தகப்பன் சொன்னார்; மேலும் அவன் தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுப்பான்; மேசியாவுக்கும் அவன் தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுப்பான் என்றும் சொன்னார்.

10 மேசியாவுக்கு அவன் தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுத்த பின்னர், அவன் உலகத்தினுடைய பாவங்களை நீக்கப்போகிற தேவ ஆட்டுக்குட்டிக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன் என்று அவன் அடையாளம் கண்டு சாட்சி சொல்லவேண்டும்.

11 என் தகப்பன் இந்த வார்த்தைகளைப் பேசிய பின்பு, யூதர்கள் மத்தியில் பிரசங்கிக்கப்படவேண்டிய சுவிசேஷத்தைக் குறித்தும், யூதர்கள் அவிசுவாசத்தில் நலிவதைக் குறித்தும் அவர் என் சகோதரரிடத்தில் பேசினார். மேலும் வரப்போகிற மேசியாவை அவர்கள் கொன்ற பின்னரும், அவர் கொலை செய்யப்பட்ட பின்னரும், அவர் மரித்தோரிலிருந்து எழுந்து, புறஜாதியாரிடத்தில் பரிசுத்த ஆவியானவரால் தன்னை வெளியரங்கப்படுத்துவார்.

12 ஆம், புறஜாதியாரைப்பற்றியும், இஸ்ரவேல் வீட்டாரைக் குறித்தும் என் தகப்பன் மிகுதியாய்ப் பேசி, அவர்களை ஒரு ஒலிவ விருட்சத்திற்கு ஒப்பிட்டு, அதன் கிளைகள் முறிக்கப்பட்டு, பூமியின் பரப்பின்மேலெல்லாம் சிதறடிக்கப்படுதல் வேண்டும் என்றும் சொன்னார்.

13 ஆகையால், நாம் பூமியின் பரப்பின் மேலெல்லாம் சிதறடிக்கப்பட்டு, கர்த்தரின் வார்த்தை நிறைவேறும்படியாய், ஒருமனதோடு வாக்குத்தத்தத்தின் தேசத்திற்கு நடத்திச் செல்லப்படுதல் அவசியமாய் இருக்கிறது என்று அவர் சொன்னார்.

14 இஸ்ரவேல் வீட்டார் சிதறடிக்கப்பட்ட பின்பு, அவர்கள் மீண்டும் ஒன்றுசேர்க்கப்பட வேண்டும்; அல்லது முடிவில் புறஜாதியார் பூரண சுவிசேஷத்தைப் பெற்றபின்பு, ஒலிவ விருட்சத்தின் சுபாவ கிளைகள் அல்லது இஸ்ரவேல் வீட்டாரின் மீதியானவர்கள் ஒட்டப்படுதல் வேண்டும் அல்லது அவர்களின் கர்த்தரும், மீட்பருமாகிய உண்மையான மேசியாவைப்பற்றிய ஞானத்திற்கு வருதல் வேண்டும்.

15 என் சகோதரர்களுக்கு, இந்த விதமான வார்த்தைகளில் என் தகப்பன் தீர்க்கதரிசனம் உரைத்தும், பேசியுமிருக்கிறார். இன்னும் இப்புஸ்தகத்தில், நான் எழுதாத, அநேக பல காரியங்கள் உள்ளன. ஏனெனில் எனக்கு அதில் பொருத்தமாகத் தோன்றுகிற பலவற்றை, என்னுடைய மற்ற புஸ்தகத்தில் நான் எழுதியுள்ளேன்.

16 நான் பேசியிருக்கிற இந்த எல்லாக் காரியங்களும், லெமுவேலின் பள்ளத்தாக்கில் ஒரு கூடாரத்தில் என் தகப்பன் வாசமாய் இருந்தபோது நடந்தவைகளாகும்.

17 நேபியாகிய நான், என் தகப்பன் அவர் தரிசனத்திலே கண்ட காரியங்களைக் குறித்த அவருடைய எல்லா வார்த்தைகளையும், வரப்போகிற மேசியாவாயிருந்த தேவனின் குமாரனாகிய, தேவ குமாரன் மீதிருந்த விசுவாசத்தின் மூலம் அவர் பெற்ற வல்லமையான பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால், அவர் பேசின காரியங்களையும் கேட்டிருப்பினும், பூர்வகாலத்தில் மட்டும் அல்ல, அவர் மனுபுத்திரருக்கு தன்னையே வெளிப்படுத்தவிருக்கிற காலத்திலும், அவரைக் கருத்தாய் தேடுகிற எல்லோருக்கும் தேவனின் ஈவாய் இருக்கின்ற பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் இந்தக் காரியங்களை, நானும் பார்க்கவும், கேட்கவும், அறியவும் நேபியாகிய நான் வாஞ்சையாயிருந்தேன்.

18 ஏனெனில் அவர் நேற்றும், இன்றும், என்றும், மாறாதவராயிருக்கிறார்; உலக ஆரம்பத்திலிருந்தே எல்லா மனுஷருக்கும் வழி ஆயத்தம் பண்ணப்பட்டுள்ளது. அப்படியானால் அவர்கள் மனந்திரும்பி, அவரிடத்தில் வர வேண்டும்.

19 ஏனெனில், கருத்தாய்த் தேடுகிறவன் கண்டடைவான்; பூர்வகாலங்களைப்போலவே இக்காலங்களிலும், வரப்போகிற காலங்களிலும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் தேவனின் இரகசியங்கள் அவர்களுக்கு வெளிப்படுத்தப்படும்; ஆகையால் கர்த்தரின் மார்க்கமோ ஒரு நித்தியச் சுற்று.

20 ஆகவே, மனுஷனே, நினைவுகூர்வாயாக, ஏனெனில் உன்னுடைய எல்லா செயல்களுக்காகவும் நீ நியாயத்தீர்ப்புக்குள் கொண்டுவரப்படுவாய்.

21 ஆகையால், நீ உன்னுடைய சோதனைக் காலத்தில் அக்கிரமத்தைச் செய்ய நாடியிருப்பாயெனில், தேவனுடைய நியாயாசனத்தின் முன் அசுத்தமாகக் காணப்படுவாய்; மேலும் எந்த ஒரு அசுத்தமுள்ள பொருளும் தேவனுடன் வாசம் செய்யமுடியாது; ஆகையால் நீ என்றென்றைக்கும் தள்ளப்பட்டவனாய் இருப்பாய்.

22 நான் இந்தக் காரியங்களைப் பேசவேண்டும், என்று பரிசுத்த ஆவியானவர் அதிகாரத்தைக் கொடுத்துள்ளார், நான் அவைகளை மறுதலிப்பதில்லை.