வேதங்கள்
1 நேபி 1


நேபியின் முதலாம் புஸ்தகம்

அவனுடைய ஆளுகையும் ஊழியமும்

லேகி அவனுடைய மனைவியாகிய சரயா, அவனுடைய நான்கு குமாரர்களாகிய (மூத்தவனிலிருந்து தொடங்கி) லாமான், லெமுவேல், சாம், நேபி எனப்பட்டவர்களின் விவரம். ஜனங்களுடைய அக்கிரமத்தைக் குறித்து லேகி தீர்க்கதரிசனமுரைத்ததினிமித்தம், அவர்கள் அவனுடைய ஜீவனை அழிக்கத் தேடுகிறார்கள் என்பதால் கர்த்தர் எருசலேம் தேசத்தைவிட்டுப் புறப்பட்டுச் செல்லும்படி அவனை எச்சரித்தல். அவன் தன் குடும்பத்தாருடன் வனாந்தரத்தினுள் மூன்று நாள் பயணம் செய்தல். நேபி தன் சகோதரரை அழைத்துக்கொண்டு, யூதர்களின் பதிவேடுகளுக்காக எருசலேம் தேசத்திற்குத் திரும்பிவருதல். அவர்களுடைய பாடுகளின் விவரம். இஸ்மவேலின் குமாரத்திகளை அவர்கள் மனைவிகளாக விவாகம் செய்தல். அவர்கள் தங்கள் குடும்பங்களை அழைத்துக்கொண்டு, வனாந்தரத்திற்குள் புறப்பட்டுப்போகுதல். வனாந்தரத்தில் அவர்களின் பாடுகளும், உபத்திரவங்களும் மற்றும் அவர்களுடைய பயணத்தின் மார்க்கம். அவர்கள் திரளான தண்ணீர்களண்டைக்கு வருதல். நேபியின் சகோதரர்கள் அவனுக்கு எதிராக கலகஞ்செய்தல். அவன் அவர்களைத் திகைக்கப்பண்ணி, ஒரு கப்பலைக் கட்டுதல். அவர்கள் அந்த இடத்தை உதாரத்துவஸ்தலம் என்று அழைத்தல். அவர்கள் திரளான தண்ணீர்களைக் கடந்து வாக்குத்தத்தத்தின் தேசத்திற்கு வருதல் முதலியன. இது நேபியின் விவரத்தின்படியானது அல்லது வேறு வார்த்தைகளிலெனில், நேபியாகிய நான் இந்தப் பதிவேடுகளை எழுதினேன்.

அதிகாரம் 1

நேபி தன் ஜனத்தின் பதிவேட்டைத் தொடங்குதல் – தரிசனத்திலே லேகி அக்கினிஸ்தம்பத்தைக் காணுதல் மற்றும் தீர்க்கதரிசன புஸ்தகத்திலிருந்து வாசித்தல் – அவன் தேவனைத் துதித்தல். மேசியாவின் வருகையை முன்னறிவித்தல். எருசலேமின் அழிவைத் தீர்க்கதரிசனம் உரைத்தல் – அவன் யூதர்களால் துன்புறுத்தப்படுதல். ஏறக்குறைய கி.மு 600.

1 நேபியாகிய நான், நற்கீர்த்தி பெற்ற பெற்றோருக்குப் பிறந்தவனாய் இருந்தபடியால், என் தகப்பன் கற்றறிந்த சகலவற்றிலும் சற்றே போதிக்கப்பட்டிருந்தேன்; என்னுடைய வாழ்நாட்களில் அநேக உபத்திரவங்களைக் கண்டிருப்பினும், என் வாழ்நாள் முழுவதும் நான் கர்த்தரால் மிகத் தயவுபெற்றவனாயிருந்தேன்; ஆம், தேவனின் நன்மைகளையும், இரகசியங்களையும் குறித்து சிறந்த ஞானமுடையவனாய் இருந்தபடியால், என் நாட்களில் நடந்த என் நடவடிக்கைகளை ஒரு பதிவேடாக எழுதிவைக்கிறேன்.

2 ஆம், யூதர்களின் கற்றறிவும், எகிப்தியர்களின் பாஷையும் அடங்கிய என் தகப்பனின் பாஷையிலே நான் ஒரு பதிவேட்டை எழுதிவைக்கிறேன்.

3 நான் எழுதும் இந்தப் பதிவேடுகள் உண்மையானவை என்று நான் அறிவேன்; நான் என் சொந்தக் கைகளினால் இவைகளைச் செய்கிறேன்; நான் இவைகளை என் அறிவின்படியே எழுதுகிறேன்.

4 யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவின் ஆளுகையின் முதலாம் ஆண்டின் ஆரம்பத்தில் (என் தகப்பனாகிய லேகி எருசலேமிலே, தன் வாழ்நாள் முழுவதும் வாசமாயிருந்தபடியால்) அதே ஆண்டில் அநேக தீர்க்கதரிசிகள் வந்து, அவர்கள் மனந்திரும்ப வேண்டுமெனவும், இல்லையேல் மகாநகரமாகிய எருசலேம் அழிக்கப்படும் எனவும் ஜனங்களுக்குத் தீர்க்கதரிசனமுரைத்தார்கள்.

5 ஆனபடியால், என் தகப்பனாகிய லேகி, கர்த்தரிடத்தில் சென்று, ஆம், அவருடைய முழு இருதயத்தோடும் தம்முடைய ஜனத்துக்காக ஜெபித்தார்.

6 அவர் கர்த்தரிடம் ஜெபித்துக் கொண்டிருந்தபொழுது, ஒரு அக்கினி ஸ்தம்பம் அவர் முன்பாக வந்து, அவருக்கு முன்னிருந்த ஒரு பாறையின் மேல் இறங்கியது; மேலும் அவர் அதிகமானவற்றைக் கண்டும் கேட்டுமிருந்தார், அவர் கண்டும் கேட்டும் இருந்த காரியங்களினிமித்தம், அவர் மிகவும் அதிர்ந்து, நடுக்கம் கொண்டார்.

7 அவர் எருசலேமில் இருந்த தம் சொந்த வீட்டிற்குத் திரும்பினார்; அவர் ஆவியினால் மேற்கொள்ளப்பட்டும், தாம் கண்டகாரியங்களினிமித்தமும் தாமாகவே படுக்கையின்மேல் விழுந்தார்.

8 ஆவியினால் மேற்கொள்ளப்பட்டவராய், அவர் ஒரு தரிசனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு, வானம் திறந்திருப்பதைக்கூட அவர் கண்டு, எண்ணிலடங்கா தூதர்களின் கூட்டங்கள் தங்களுடைய தேவனைப் பாடியும், துதித்தும் இருக்கும் நிலையில், தேவன் தன்னுடைய சிங்காசனத்தில் வீற்றிருப்பதையும், அவர் கண்டதாக நினைத்தார்.

9 ஒருவர் வானத்தின் மத்தியிலிருந்து இறங்கி வருவதை அவர் கண்டார். அவருடைய பிரகாசம் மத்தியானவேளையின் சூரியனைக் காட்டிலும் மேலானதாக இருந்ததையும் கண்டார்.

10 அவரைப் பின்தொடர்ந்து வந்த பன்னிரண்டுபேரையும் அவர் கண்டார், அவர்களுடைய பிரகாசம் ஆகாய விரிவிலுள்ள நட்சத்திரங்களையும் மிஞ்சுவதாக இருந்தது.

11 அவர்கள் கீழே இறங்கிவந்து, பூமியின் பரப்பின் மீதெங்கும் போனார்கள்; முதலாமவர் வந்து என் தகப்பனின் முன்பாக நின்று, அவரிடம் ஒரு புஸ்தகத்தைக் கொடுத்து, அவர் வாசிக்க வேண்டுமெனக் கட்டளையிட்டார்.

12 அதனை அவர் வாசித்தபொழுது, அவர் கர்த்தருடைய ஆவியினால் நிரப்பப்பட்டார்.

13 அவர், வாசித்துச் சொன்னதாவது: எருசலேமே, உனக்கு ஐயோ, ஐயோ, ஏனெனில், நான் உன் அருவருப்புகளைக் கண்டிருக்கிறேன்! ஆம், அதுவும் அதன் குடிகளும் அழிக்கப்படவேண்டுமெனவும், அநேகர் பட்டயத்தால் அழிவார்கள் எனவும், அநேகர் பாபிலோனுக்குச் சிறைப்பிடிக்கப்பட்டுக் கொண்டுபோகப்படுவார்கள் எனவும் எருசலேமைக் குறித்து அநேக காரியங்களை என் தகப்பன் வாசித்தார்.

14 என் தகப்பன் பெரிதும் அதிசயமுமான காரியங்களை வாசித்தும், கண்டுமிருந்தபோது, அவர் கர்த்தரை நோக்கி அநேக காரியங்களை ஓலமிட்டுச் சொன்னதாவது: சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே! உம்முடைய கிரியைகள் பெரிதும், அதிசயமுமானவைகள்; உம்முடைய சிங்காசனம் வானங்களில், உயரத்திலிருக்கிறது; உம்முடைய வல்லமையும், நன்மையும், இரக்கமும், பூமியின் குடிகள் எல்லோர்மீதும் உள்ளது; மேலும் நீர் இரக்கமுடையவராய் இருக்கிறபடியால், உம்மிடத்தில் வருகிறவர்களை அழிந்துபோகவிடீர்!

15 என் தகப்பன், தன் தேவனைத் துதித்த வார்த்தைகள் இவ்விதமானதாயிருந்தது; அவர் கண்ட காரியங்களினிமித்தம், ஆம், கர்த்தர் அவருக்குக் காட்டியவைகளினிமித்தம் அவருடைய ஆத்துமா களிகூர்ந்தது மற்றும் அவருடைய முழு இருதயமும் நிரப்பப்பட்டது.

16 இப்பொழுதும், நேபியாகிய நான் என் தகப்பன் எழுதிய எல்லாக் காரியங்களின் முழு விவரத்தையும் எழுதுவதில்லை, ஏனெனில், அவர் தரிசனங்களிலும் சொப்பனங்களிலும் கண்ட அநேக காரியங்களை எழுதி இருக்கிறார்; மேலும் அவர் தம்முடைய பிள்ளைகளிடத்தில் தீர்க்கதரிசனம் உரைத்து, பேசிய அநேக காரியங்களையும் எழுதியிருக்கிறார், அவைகளைக் குறித்த முழு விவரத்தையும் நான் எழுதப் போவதில்லை.

17 ஆனால், என் வாழ்நாட்களில் என் நடவடிக்கைகளைக் குறித்த விவரத்தை நான் எழுதுகிறேன். இதோ, என் சொந்தக் கைகளினால் செய்த தகடுகளின்மேல், என் தகப்பனுடைய பதிவேடுகளைச் சுருக்கி பொறிக்கிறேன், ஆகையால், என் தகப்பனின் பதிவேடுகளைச் சுருக்கி பொறித்த பின்பு, நான், என் சொந்த வாழ்க்கையைக் குறித்த விவரத்தை எழுதுவேன்.

18 ஆகையால், எருசலேமின் அழிவைக் குறித்த, அநேக அதிசயமான காரியங்களை என் தகப்பனாகிய லேகிக்குக் கர்த்தர் காட்டிய பின்னர், இதோ, ஜனங்கள் மத்தியில் போய், அவர் கண்டும் கேட்டும் இருக்கிற காரியங்களைக் குறித்து அவர்களிடம் தீர்க்கதரிசனம் உரைத்து, அறிவிக்கத் தொடங்கினார் என்பதை நீங்கள் அறியவேண்டுமென நான் விரும்புகிறேன்.

19 அவர்களைப்பற்றி அவர் சாட்சிகொடுத்த காரியங்களினிமித்தம், யூதர்கள் அவரைப் பரியாசம் பண்ணினார்கள், ஏனெனில், அவர் அவர்களுடைய துன்மார்க்கத்தையும், அருவருப்புகளையும் குறித்து உண்மையாகவே சாட்சி கொடுத்தார்; அவர் கண்டும் கேட்டும் இருக்கிற காரியங்களும், மேலும் அவர் புஸ்தகத்தில் வாசித்த காரியங்களும், மேசியாவின் வருகையையும், உலகத்தின் மீட்பையும் தெளிவாக வெளிப்படுத்துவதாய் இருக்கிறது என்பதையும் அவர்களுக்குச் சாட்சி கொடுத்தார்.

20 யூதர்கள் இந்தக் காரியங்களைக் கேட்டபொழுது, அவர்கள் புறம்பே தள்ளி, கல்லெறிந்து, கொலைபண்ணின பூர்வகால தீர்க்கதரிசிகளிடம் கோபம்கொண்டதுபோலவே அவரிடமும் கோபம்கொண்டார்கள். அவர்கள் அவருடைய ஜீவனை எடுத்துப்போடும்படி, அதை வாங்க வகைதேடினார்கள். ஆனாலும் கர்த்தருடைய உருக்கமான இரக்கங்கள், அவர் தெரிந்துகொண்டவர்களின் விசுவாசத்தினிமித்தமாக, அவர்கள் விடுதலையின் வல்லமையைப் பெறுமளவும், அவர்களைப் பலவான்களாக்கும்படி அவர்கள் எல்லோர் மேலுமிருக்குமென்று இதோ, நேபியாகிய நான் உங்களுக்குக் காண்பிப்பேன்.