வேதபாட வகுப்பும் முதிர்வேதபாட வகுப்பும்
கோட்பாட்டைப் போதிக்கவும்


“கோட்பாட்டைப் போதிக்கவும்,” இரட்சகரின் வழியில் போதித்தல்: வீட்டிலும் சபையிலும் கற்பிக்கிற அனைவருக்கும் (2022)

“கோட்பாட்டைப் போதிக்கவும்,” இரட்சகரின் வழியில் போதித்தல்

படம்
இயேசு கிறிஸ்துவுக்கு 12 வயதாயிருந்தபோது அவர் ஆலயத்தில் போதித்தல்

ஆலயத்தில் கிறிஸ்து– ஹெய்ன்ரிச் ஹோப்மான்

கோட்பாட்டைப் போதிக்கவும்

இயேசு தனது வாழ்நாள் முழுவதும் ஞானத்திலும் அறிவிலும் வளர்ந்தாலும், அவருடைய நாளின் மற்ற மதத் தலைவர்களைப் போல அவர் முறையாக கல்வி கற்கவில்லை. இருந்தும் அவர் போதித்தபோது, “இவர் கல்லாதவராயிருந்தும் எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார்?” என்று மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். அவருடைய போதனைகள் ஏன் மிக வல்லமையாயிருந்தது? “என் உபதேசம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது” (யோவான் 7:15–16) என இரட்சகர் விவரித்தார். கோட்பாடு என்பது நித்திய உண்மை, வேதங்களிலும் பிற்கால தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளிலும் காணப்படுகிறது, இது பரலோகத்தில் உள்ள நமது பிதாவைப் போல ஆகி அவரிடம் திரும்புவதற்கான வழியை நமக்குக் காட்டுகிறது. ஒரு ஆசிரியராக நீங்கள் எவ்வளவு அனுபவம் வாய்ந்தவராக இருந்தாலும், பிதாவின் கோட்பாட்டைக் கற்பிப்பதன் மூலம் இரட்சகர் செய்தது போல் நீங்கள் ஆற்றலுடன் கற்பிக்க முடியும். உங்கள் கற்பித்தலும் கற்றுக்கொள்ளுதலும் அவருடைய வார்த்தையில் அமையும் போது தேவன் அனுப்பும் ஆசீர்வாதங்களைக் கண்டு நீங்களும் நீங்கள் கற்பிப்பவர்களும் ஆச்சரியப்படுவீர்கள்.

கோட்பாட்டைப் போதிக்க

  • இயேசு கிறிஸ்துவின் கோட்பாட்டை நீங்களே கற்றுக்கொள்ளுங்கள்.

  • வேதங்களிலிருந்தும் பிற்கால தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளிலிருந்தும் கற்பியுங்கள்.

  • வேதங்களிலுள்ள சத்தியங்களைத் தேடவும், அடையாளம் காணவும், புரிந்துகொள்ளவும் கற்றுக்கொள்பவர்களுக்கு உதவுங்கள்.

  • மனமாற்றத்திற்கும் இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தை வளர்த்துக் கொள்ளுவதற்கும் வழிவகுக்கும் சத்தியங்களில் கவனம் செலுத்துங்கள்.

  • இயேசு கிறிஸ்துவின் கோட்பாட்டில் தனிப்பட்ட தொடர்பைக் கண்டறிய கற்பவர்களுக்கு உதவுங்கள்.

கோட்பாட்டை இரட்சகர் கற்றுக்கொண்டார்

இரட்சகர் தனது இளமைப் பருவத்தில் “ஞானத்திலும்… தேவ தயவிலும்” பெருகியதால் வேதங்களிலிருந்து கற்றுக்கொண்டார் என்பது தெளிவாகத் தெரிகிறது. (லூக்கா 2:52). யூத ஆசிரியர்களுக்குக் கற்பித்து, அவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து, சிறுவயதிலேயே அவருடைய பெற்றோர் அவரை ஆலயத்தில் கண்டபோது, பிதாவின் கோட்பாட்டைப்பற்றிய அவருடைய ஆழமான புரிதல் வெளிப்பட்டது. (ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு, லூக்கா 2:46 [லூக்கா 2:46ல், அடிக்குறிப்பு c] பார்க்கவும்). பின்னர், வனாந்தரத்தில் சாத்தான் அவருக்கு தீவிர சோதனையை அளித்தபோது, வேதங்களில் உள்ள கோட்பாட்டைப்பற்றிய இயேசுவின் அறிவு, சோதனையை எதிர்க்க அவருக்கு உதவியது. (லூக்கா 4:3–12 பார்க்கவும்).

நீங்களும் உண்மையான கோட்பாட்டை கற்பிக்கும் முன் அதை இன்னும் ஆழமாக கற்றுக்கொள்ள நாடலாம். மற்றவர்களுடன் கற்பிக்கவும் கற்றுக்கொள்ளவும் நீங்கள் தயாராகும்போது, நீங்கள் கற்பிக்கும் சத்தியங்களைப்பற்றி கர்த்தர் என்ன சொன்னார் என்பதை கவனமாகப் பாருங்கள். விளக்கம் மற்றும் ஆலோசனைக்காக வேதங்களையும் ஜீவிக்கிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளையும் தேடுங்கள். நீங்கள் படிக்கும் சத்தியங்களின்படி வாழ்வதும் நடைமுறைப்படுத்துவதும், கோட்பாட்டை இன்னும் ஆழமான வழிகளில் கற்பிக்கவும், நீங்கள் கற்பிப்பவர்களின் இருதயங்களில் கோட்பாட்டின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தவும் ஆவியானவரை அழைக்கும்.

சிந்திக்க வேண்டிய கேள்விகள்: சுவிசேஷ சத்தியங்களை நீங்களே புரிந்துகொள்வது ஏன் முக்கியம்? சுவிசேஷத்தின் சத்தியங்களைப்பற்றிய ஆழமான புரிதலை நீங்கள் எவ்வாறு பெற்றுள்ளீர்கள்? வேதங்கள் மற்றும் ஜீவிக்கிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைப்பற்றிய உங்கள் படிப்பை மேம்படுத்த நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று உணர்கிறீர்கள்?

வேதங்களிலிருந்து: நீதிமொழிகள் 7:1–3; 2 நேபி 4:15–16; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 11:21; 88:118

வேதங்களிலிருந்து இரட்சகர் போதித்தார்

இரட்சகரின் மரணத்திற்குப் பின்னர், அவருடைய சீஷர்களில் இருவர் தங்கள் இருதயங்களில் சோகமும் ஆச்சரியமும் கலந்தபடி பேசிக்கொண்டு நடந்துகொண்டிருந்தார்கள். அப்போது என்ன நடந்தது என்பதை அவர்கள் எப்படி புரிந்து கொள்ள முடியும்? தங்கள் மீட்பர் என்று அவர்கள் நம்பியவரான, நாசரேத்தின் இயேசு, மரித்து மூன்று நாட்கள் ஆகின்றன. பின்னர் அவரது கல்லறை காலியாக இருப்பதாகவும், அவர் உயிருடன் இருப்பதாக தேவதூதர்கள் அறிவித்ததாகவும் செய்திகள் வந்தன! இந்த சீஷர்களின் விசுவாசத்தின் முக்கிய கட்டத்தில், ஒரு அந்நியர் அவர்களின் பயணத்தில் சேர்ந்தார். “எல்லா வேதங்களிலும் [இரட்சகரைப்] பற்றிய காரியங்களை அவர்களுக்கு விளக்கி” அவர்களுக்கு ஆறுதல் கூறினார். இறுதியில், பயணிகள் தங்கள் போதகர் இயேசு கிறிஸ்துவே என்றும் அவர் உண்மையில் உயிர்த்தெழுந்தார் என்றும் உணர்ந்தனர். அவர்கள் எப்படி அவரை அடையாளம் கண்டனர்? “வழியிலே அவர் நம்முடனே பேசி, வேத வாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா?” என பின்னர் அவர்கள் நினைத்தார்கள். (லூக்கா 24:27, 32).

“அனைத்து வேதத்தின் மைய நோக்கமும் பிதாவாகிய தேவன் மற்றும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையால் நம் ஆத்துமாவை நிரப்புவதாகும்”(“The Blessing of Scripture,” Liahona, May 2010, 34) என மூப்பர் டி. டாட் கிறிஸ்டோபர்சன் கற்பித்தார். மற்றவர்களுக்குக் கற்பிக்கவும், திருத்தவும், ஊக்குவிக்கவும் அவருடைய ஊழியம் முழுவதும், வேதங்களை இயேசு பயன்படுத்தினார். உங்கள் கற்பித்தல்கள் வேதங்களிலிருந்தும் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளிலிருந்தும் விலகிச் செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் கற்பித்தலில் தேவனுடைய வார்த்தையை நீங்கள் உண்மையாகச் சார்ந்திருக்கையில், இரட்சகர் செய்ததை நீங்கள் மற்றவர்களுக்குச் செய்யலாம். அவரை அறிந்துகொள்ள நீங்கள் அவர்களுக்கு உதவலாம், ஏனென்றால் நம் அனைவருக்கும் இரட்சகர் மீது நம்முடைய விசுவாசம் தொடர்ந்து பலப்படுத்தப்பட வேண்டும். வேதங்களின் மீதான உங்கள் அன்பு நீங்கள் கற்பிப்பவர்களுக்குத் தெளிவாகத் தெரியும், மேலும் உங்கள் கற்பித்தல்கள் பிதா மற்றும் குமாரனின் சாட்சியால் அவர்களின் இருதயங்களை எரியச் செய்ய ஆவியானவரை அழைக்கும்.

சிந்திக்க வேண்டிய கேள்விகள்: இரட்சகரை நன்கு அறிந்துகொள்ள உங்களுக்கு உதவுவதற்காக வேதவசனங்களைப் பயன்படுத்திய ஒரு ஆசிரியரால் நீங்கள் எவ்வாறு செல்வாக்கடைந்தீர்கள்? நீங்கள் கற்பிக்கும் போது வேதங்களையும் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளையும் அதிகமாய் சார்ந்திருப்பதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? தேவனுடைய வார்த்தையை அறியவும் நேசிக்கவும் நீங்கள் கற்பிப்பவர்களுக்கு எப்படி உதவ முடியும்?

வேதங்களிலிருந்து: லூக்கா 4:14–21; ஆல்மா 31:5; ஏலமன் 3:29–30;3 நேபி 23

சத்தியங்களைத் தேடவும், அடையாளம் காணவும், புரிந்துகொள்ளவும் மக்களுக்கு இரட்சகர் உதவினார்

ஒரு நியாயசாஸ்திரி ஒருமுறை இயேசுவிடம், “போதகரே, நித்திய ஜீவனை சதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். பதிலுக்கு, இரட்சகர் கேள்வி கேட்பவருக்கு வேதவசனங்களுக்கு வழிகாட்டினார்: “நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன?” என்றார் இது அந்த மனிதனை அவனது பதிலுக்கு மட்டுமே அழைத்துச் செல்லவில்லை, “உன் தேவனாகிய கர்த்தரிடத்திலும் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக என்பதற்கும்”, “எனக்கு பிறன் யார்?” என்ற தொடர் கேள்விக்கும் இட்டுச் சென்றது. தேவையிலிருக்கும் ஒரு சகபயணியைப் பார்த்த இரட்சகர் மூன்று மனிதர்களைப்பற்றிய இந்தக் கேள்விக்கு ஒரு உவமையுடன் பதிலளித்தார். தான் எங்கிருந்து வந்தான் என்பதற்காக யூதர்களால் வெறுக்கப்பட்ட மூவரில் ஒருவரான சமாரியன், உதவி செய்வதற்காக நின்றான். இயேசு தனது சொந்தக் கேள்விக்கு பதிலளிக்கும்படி நியாயசாஸ்திரியை அழைத்தார்: “இந்த மூன்றுபேரில் எவன் பிறனாயிருந்தான், உனக்கு எப்படி தோன்றுகிறது?” (லூக்கா 10:25–37 பார்க்கவும்).

தேடவும், சிந்திக்கவும், கண்டறியவும் அழைப்புகளுடன் கேள்விகளுக்குப் பதிலளிப்பதில், ஏன் இரட்சகர் இப்படிப் போதித்தார் என்று நினைக்கிறீர்கள்? சத்தியத்தைத் தேடும் முயற்சியை கர்த்தர் மதிக்கிறார் என்பது பதிலின் ஒரு பகுதி. “தேடுங்கள், கண்டடைவீர்கள்” என்று அவர் மீண்டும் மீண்டும் அழைத்துள்ளார்(உதாரணமாக, மத்தேயு 7:7; லூக்கா 11:9; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 4:7 பார்க்கவும்). தேடுபவரின் விசுவாசம் மற்றும் பொறுமையின் செயல்களுக்கு அவர் பிரதிபலன் அளிக்கிறார்.

சத்தியத்தை, அடையாளம் காணவும், புரிந்துகொள்ளவும் நீங்கள் கற்பிக்கிற மக்களுக்கு இரட்சகரைப் போல நீங்கள் உதவ முடியும். உதாரணமாக, வேதங்கள் சுவிசேஷ சத்தியங்களால் நிரப்பப்பட்டுள்ளன, ஆனால் சில சமயங்களில் அவற்றைக் கண்டுபிடிப்பதற்கு உணர்வுள்ள முயற்சி தேவைப்படுகிறது. நீங்கள் வேதங்களிலிருந்து ஒன்றாகக் கற்கும்போது, நீங்கள் கற்பிப்பவர்களை நிறுத்தி, அவர்கள் கவனித்த சுவிசேஷ சத்தியங்களைப்பற்றிக் கேளுங்கள். இந்த சத்தியங்கள் பரலோக பிதாவின் இரட்சிப்பின் திட்டத்துடன் எவ்வாறு தொடர்புபடுகின்றன என்பதைப் பார்க்க அவர்களுக்கு உதவுங்கள். சில சமயங்களில் நித்திய சத்தியங்கள் வேதங்களில் கூறப்பட்டுள்ளன, சில சமயங்களில் அவை நாம் படிக்கும் மக்களின் கதைகளிலும் வாழ்க்கையிலும் விவரிக்கப்பட்டுள்ளன. நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் வசனங்களின் வரலாற்றுப் பின்னணியையும், வசனங்களின் அர்த்தத்தையும், அவை இன்று நமக்கு எவ்வாறு பொருந்துகின்றன என்பதையும் ஒன்றாக ஆராய்வது உதவியாக இருக்கும்.

சிந்திக்க வேண்டிய கேள்விகள்: வேதங்களில் அல்லது தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளில் உள்ள நித்திய சத்தியங்களை நீங்கள் எவ்வாறு அடையாளம் காண்பீர்கள்? அந்த சத்தியங்கள் உங்கள் வாழ்க்கையை எப்படி ஆசீர்வதிக்கிறது? கற்பவர்களுக்கு அர்த்தமுள்ளதாயிருக்கிற சத்தியங்களை அடையாளம் கண்டு புரிந்துகொள்வதற்கும், தேவனிடம் அவர்களை நெருங்கச் செய்வதற்கும் நீங்கள் உதவும் சில வழிகள் யாவை?

வேதங்களிலிருந்து: யோவான் 5:39; 1 நேபி 15:14; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 42:12

படம்
மாணவர்கள் படித்துக்கொண்டிருத்தல்

தாங்களாகவே சத்தியத்தைக் கண்டுபிடித்து அடையாளம் கண்டுகொள்ள நாம் கற்பிப்பவர்களுக்கு உதவலாம்.

மனமாற்றத்திற்கு நடத்துகிற, விசுவாசத்தை வளர்க்கிற சத்தியங்களை இரட்சகர் போதித்தார்

ஒரு ஓய்வுநாளில், இரட்சகரும் அவருடைய சீஷர்களும், பசியாயிருந்து, ஒரு வயலைக் கடந்து, தானியத்தை உண்ணத் தொடங்கினர். மோசேயின் நியாயப்பிரமாணத்தின் நுணுக்கங்களை வலியுறுத்த எப்போதும் ஆர்வமாக இருக்கும் பரிசேயர்கள், தானியங்களை சேகரிப்பது தொழில்நுட்ப ரீதியாக, ஓய்வுநாளில் தடைசெய்யப்பட்ட ஒரு வகையான வேலை என்று சுட்டிக்காட்டினர்.(மாற்கு 2:23–24 பார்க்கவும்). மார்மன் புஸ்தக தீர்க்கதரிசி யாக்கோபின் சொற்றொடரைப் பயன்படுத்த, பரிசேயர்கள் “குறிக்கு புறம்பாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்” (யாக்கோபு 4:14). வேறு வார்த்தைகளில் எனில், அவர்கள் கட்டளைகளின் பாரம்பரிய விளக்கங்களில் கவனம் செலுத்தினர், அந்தக் கட்டளைகளின் தெய்வீக நோக்கமான நம்மை தேவனிடம் நெருங்கி வருவதை அவர்கள் தவறவிட்டார்கள். உண்மையில், ஓய்வுநாளைக் கனப்படுத்தக் கட்டளையிட்டவர் தங்களுக்கு முன்பாக நிற்கிறார் என்பதை பரிசேயர்கள் உணரவில்லை.

இரட்சகர் தனது தெய்வீக அடையாளத்தைப்பற்றி சாட்சியமளிக்கவும், ஓய்வுநாள் ஏன் முக்கியமானது என்பதைப் போதிக்கவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார். ஓய்வுநாளின் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவையே ஆராதிக்கும் நாளாக நமக்காக இது உருவாக்கப்பட்டது (மாற்கு 2:27–28 பார்க்கவும்). தேவனுடைய கட்டளைகள் நம்முடைய வெளிப்புற நடத்தையைவிட மேலானவை என்பதைப் புரிந்துகொள்ள இத்தகைய சத்தியங்கள் நமக்கு உதவுகின்றன. அவை நம் இருதயங்களை மாற்றவும் மிக முழுமையாக மாற்றப்பட்டவர்களாக மாறவும் உதவுவதற்காகவே உள்ளன.

நீங்கள் கவனம் செலுத்த முடிவு செய்யும் கோட்பாடு மற்றும் கொள்கைகளை கவனமாக பரிசீலிக்கவும். வேதங்களில் பல சத்தியங்கள் விவாதிக்கப்படலாம் என்றாலும், மனமாற்றத்திற்கு வழிவகுக்கும் மற்றும் இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தை வளர்க்கும் சுவிசேஷ சத்தியங்களில் கவனம் செலுத்துவது சிறந்தது. இரட்சகர் கற்பித்த மற்றும் எடுத்துக்காட்டிய எளிய, அடிப்படை சத்தியங்கள் நம் வாழ்க்கையை மாற்றும் மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளன, அவருடைய பாவநிவர்த்தியைப்பற்றிய சத்தியங்கள், இரட்சிப்பின் திட்டம், தேவனையும் நம் அண்டை வீட்டாரையும் நேசிக்க கட்டளைகள் மற்றும் பல. இந்த சத்தியங்களுக்கு சாட்சியமளிக்க ஆவியானவரை அழையுங்கள், நீங்கள் கற்பிப்பவர்களின் இருதயங்களில் ஆழமாக செல்ல அவர்களுக்கு உதவுங்கள்.

சிந்திக்க வேண்டிய கேள்விகள் நீங்கள் இயேசு கிறிஸ்துவில் மனமாற்றமடைந்தவராக மாறுவதற்கும், அவர் மீது அதிக விசுவாசமுள்ளவராகுவதற்கும் உதவிய சுவிசேஷத்தின் சில சத்தியங்கள் யாவை? சுவிசேஷத்தின் மிக அத்தியாவசியமான சத்தியங்கள்மீது கவனம் செலுத்த ஒரு ஆசிரியர் எவ்வாறு உங்களுக்கு உதவினார்? இயேசு கிறிஸ்துவிடம் மிக ஆழமாக மனமாற்றமடைய மற்றவர்களுக்கு உதவும் எதை நீங்கள் கற்பிக்க முடியும்?

வேதங்களிலிருந்து: 2 நேபி 25:26; 3 நேபி 11:34–41; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 19:31–32; 68:25–28; 133:57; மோசே 6:57–62

இரட்சகர் தனது கோட்பாட்டில் தனிப்பட்ட தொடர்பைக் கண்டறிய மக்களுக்கு உதவினார்

இது ஒரு ஆவிக்குரிய போதகருக்கு பொருத்தமான நடத்தை அல்ல என்பதைக் குறிக்கிறது என “இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார்,” என்று பரிசேயர்கள் இயேசுவைப்பற்றி முறையிட்டனர் (லூக்கா 15:2). சில ஆழமான ஆவிக்குரிய சத்தியங்களை அவர்களுக்குக் கற்பிக்க இது ஒரு வாய்ப்பாக இருப்பதை இயேசு கண்டார். இதை அவர் எப்படி செய்வார்? தூய்மையற்றதும் குணப்படுத்துதல் தேவையாயிருந்ததுமான இது அவர்களுடைய இருதயங்களாயிருந்தது, அவருடையதல்ல என்பதை பரிசேயர்கள் பார்க்க எவ்வாறு அவர் உதவுவார்? அவர்களுடைய சிந்தனையும் நடத்தையும் மாற வேண்டும் என்பதைக் காட்ட அவர் தனது கோட்பாட்டை எவ்வாறு பயன்படுத்துவார்?

மந்தையிலிருந்து அலைந்து திரிந்த ஒரு செம்மறி ஆடு மற்றும் காணாமல் போன ஒரு நாணயத்தைப்பற்றி அவர்களிடம் பேசி இதைச் செய்தார். மன்னிப்புக் கோரும் ஒரு கலகக்கார மகனைப்பற்றியும், அவரை ஏற்றுக்கொள்ளவோ அல்லது அவருடன் சாப்பிடவோ மறுத்த மூத்த சகோதரனைப்பற்றியும் அவர் பேசினார். ஒவ்வொரு ஆத்துமாவுக்கும் பெரிய மதிப்பு இருக்கிறது என்று அவர்களுக்குக் கற்பித்து, இந்த உவமைகள் ஒவ்வொன்றிலும் பரிசேயர்கள் மற்றவர்களை எப்படிப் பார்த்தார்கள் என்பதற்குப் பொருத்தமான உண்மைகளைக் கொண்டிருந்தது (லூக்கா 15 பார்க்கவும்). அவருடைய உவமைகளில் யாரை அடையாளப்படுத்த வேண்டும் என்று இரட்சகர் பரிசேயர்களுக்கோ அல்லது நம்மில் எவருக்கோ சொல்லவில்லை. சில சமயங்களில் நாம் கவலையுள்ள தகப்பனாக இருக்கிறோம். சில சமயங்களில் நாம் பொறாமை கொண்ட சகோதரராயிருக்கிறோம். பெரும்பாலும் நாம் காணாமற்போன ஆடு அல்லது முட்டாள் குமாரனாயிருக்கிறோம். ஆனால் நம்முடைய சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், நாம் கற்றுக்கொள்ள விரும்புவதையும், நம்முடைய சொந்த சிந்தனை மற்றும் நடத்தையில் நாம் எதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதைக் கண்டறியவும், அவருடைய உவமைகள் மூலம், இரட்சகர் தம்முடைய போதனைகளில் பொருத்தத்தைக் கண்டறிய நம்மை அழைக்கிறார்.

சில சத்தியங்கள் அவர்களுக்கு ஏன் முக்கியம் என்பதை சில கற்பவர்கள் பார்க்காமலிருக்கிறார்கள் என்பதை நீங்கள் கவனிக்கலாம். நீங்கள் கற்பிப்பவர்களின் தேவைகளை நீங்கள் கருத்தில் கொள்ளும்போது, வேதங்களில் உள்ள சத்தியங்கள் எவ்வாறு அர்த்தமுள்ளதாகவும் அவர்களுடைய சூழ்நிலைகளில் பயனுள்ளதாகவும் இருக்கும் என்பதைப்பற்றி சிந்தியுங்கள். “நீங்கள் இப்போது அனுபவிக்கும் விஷயத்திற்கு இது எப்படி உங்களுக்கு உதவும்?” போன்ற கேள்விகளைக் கேட்பதன் மூலம், கற்பவர்கள் அவர்கள் கண்டறிந்த உண்மைகளின் பொருத்தத்தைப் பார்க்க உதவுவது நீங்கள் உதவுவதற்கான ஒரு வழி. “இந்த காரியங்களை அறிந்துகொள்வது உங்களுக்கு ஏன் முக்கியமானதாக இருக்கிறது?” “இந்த அறிவு உங்கள் வாழ்க்கையில் என்ன வித்தியாசத்தை ஏற்படுத்தும்?” நீங்கள் கற்பிப்பவர்களுக்கு செவிசாயுங்கள். கேள்விகள் கேட்க அவர்களை அனுமதியங்கள். இரட்சகரின் போதனைகளுக்கும் அவர்களது சொந்த வாழ்க்கைக்கும் இடையே தொடர்புகளை ஏற்படுத்த அவர்களை ஊக்குவிக்கவும். நீங்கள் கற்பிப்பது உங்கள் சொந்த வாழ்க்கைக்கு எவ்வாறு பொருத்தமாக இருக்கிறது என்பதை நீங்கள் எவ்வாறு கண்டீர்கள் என்பதையும் பகிர்ந்து கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம், கோட்பாடு எவ்வாறு தங்கள் வாழ்வில் வேறுபாட்டை ஏற்படுத்தலாம் என்பதை கற்பிப்பவர்களுக்கு தனித்தனியாக கற்பிக்க ஆவியானவரை அழைக்கலாம்.

சிந்திக்க வேண்டிய கேள்விகள்: சுவிசேஷ சத்தியங்களை உங்களுக்கு அர்த்தமுள்ளதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுவது எது? நீங்கள் சுவிசேஷத்தைப் படிக்கும்போது தனிப்பட்ட பொருத்தத்தைக் கண்டறிய எது உதவுகிறது? நீங்கள் கற்பிப்பவர்களுடன் தொடர்புடைய சத்தியங்களில் கவனம் செலுத்த நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

வேதங்களிலிருந்து: 1 நேபி 19:23; 2 நேபி 32:3; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 43:7–9

நீங்கள் கற்றுக்கொள்வதைப் பிரயோகிக்க சில வழிகள்

  • நீங்கள் உண்மையான கோட்பாட்டைக் கற்பிக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த, நீங்கள் என்ன கற்பிக்கிறீர்கள் என்பதை மதிப்பிடுங்கள். இந்த கேள்விகள் உதவலாம்:

    • நான் கற்பிக்கத் திட்டமிடுவது வேதங்கள் மற்றும் பிற்கால தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளின் அடிப்படையில் அமைந்ததா?

    • பல தீர்க்கதரிசிகள் இதைப் போதித்தார்களா? தற்போதைய சபைத் தலைவர்கள் இதைப்பற்றி என்ன கற்பிக்கிறார்கள்?

    • இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தை வளர்க்கவும், மனந்திரும்பவும், உடன்படிக்கையின் பாதையில் முன்னேறவும் இது மற்றவர்களுக்கு எப்படி உதவும்?

    • இது பரிசுத்த ஆவியின் தூண்டுதலுடன் ஒத்துப்போகிறதா அல்லது நான் ஆவிக்குரிய ரீதியில் இதைப்பற்றி நிச்சயமற்று உணர்கிறேனா?

  • உங்களுக்காக உண்மையான கோட்பாட்டைக் கற்றுக்கொள்ள தினசரி தேவ வார்த்தையைப் படிக்கவும்.

  • நீங்கள் கற்பிக்கும்போது வேதங்களையும் தற்கால தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளையும் படிக்கக் கற்பவர்களைக் கேளுங்கள்.

  • கற்பவர்கள் வேதங்களைப் படிக்கும்போது, அடிக்குறிப்புகள், வேதங்களுக்கான வழிகாட்டி மற்றும் பிற ஆதாரங்களை அவர்கள் எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்.

  • ஒரு வேதப் பகுதி அல்லது ஒரு கதையில் சத்தியங்களைக் கண்டறிய கற்பவர்களை அழைக்கவும்.

  • ஒரு கோட்பாட்டை நீங்கள் எப்படி உண்மையாக அறிந்து கொண்டீர்கள் என்பதற்கு சாட்சி சொல்லுங்கள்.

  • சுவிசேஷ சத்தியங்களைப்பற்றிய ஆழமான புரிதலைப் பெற கற்பவர்களுக்கு உதவ கதைகள் அல்லது உருவகங்களைப் பயன்படுத்தவும்.