கையேடுகளும் அழைப்புகளும்
2. இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலின் பணியில் தனிநபர்களையும், குடும்பங்களையும் ஆதரித்தல்


“2. இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலின் பணியில் தனிநபர்களையும் குடும்பங்களையும் ஆதரித்தல்,” பொது கையேட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டவை (2023).

“2. தனிநபர்களையும் குடும்பங்களையும் ஆதரித்தல்,” பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை

குடும்ப புகைப்படம்

2.

இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலின் பணியில் தனிநபர்களையும், குடும்பங்களையும் ஆதரித்தல்

2.0

முன்னுரை

இயேசு கிறிஸ்துவின் சபையில் ஒரு தலைவராக, தேவனின் இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலுக்கான பணியை நிறைவேற்றுவதில் தனிநபர்களையும் குடும்பங்களையும் நீங்கள் ஆதரிக்கிறீர்கள் (1.2 பார்க்கவும்). இந்த பணியின் நிறைவான நோக்கம் தேவனின் பிள்ளைகள் அனைவருக்கும் நித்திய ஜீவனின் ஆசீர்வாதங்களையும் மகிழ்ச்சியின் முழுமையையும் பெற உதவுவதாகும்.

இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலின் பெரும்பாலான வேலைகள் குடும்பத்தின் மூலம் நிறைவேற்றப்படுகின்றன. அனைத்து சபை உறுப்பினர்களுக்கும், இந்த பணி வீட்டை மையமாகக் கொண்டது.

2.1

தேவனின் திட்டத்தில் குடும்பத்தின் பங்கு

அவருடைய திட்டத்தின் ஒரு பகுதியாக, பரலோக பிதா, பூமியில் குடும்பங்களை அமைத்துள்ளார். குடும்பங்கள் நமக்கு மகிழ்ச்சியைத் தர வேண்டும் என்று அவர் விரும்புகிறார். குடும்பங்கள் கற்றுக் கொள்ளவும், வளரவும், சேவை செய்யவும், மனந்திரும்பவும், மன்னிக்கவும் வாய்ப்புகளை வழங்குகின்றன. நித்திய ஜீவனுக்கு ஆயத்தமாவதற்கு அவை நமக்கு உதவமுடியும்.

நித்திய ஜீவன் குறித்த தேவனின் வாக்குறுதியில் நித்திய திருமணம், பிள்ளைகள் மற்றும் ஒரு நித்திய குடும்பத்தின் மற்ற அனைத்து ஆசீர்வாதங்களும் அடங்கும். தற்போது திருமணமாகாதவர்களுக்கு அல்லது சபையில் குடும்பத்துடன் இல்லாதவர்களுக்கு இந்த வாக்குறுதி பொருந்தும்.

2.1.1.

நித்திய குடும்பங்கள்

ஆலயத்தில் முத்திரித்தலின் நியமங்களை சபை உறுப்பினர்கள் பெற்று அவர்கள் உடன்படிக்கைகளைச் செய்யும்போது நித்திய குடும்பங்கள் உருவாகின்றன. உறுப்பினர்கள் அந்த உடன்படிக்கைகளைக் கைக்கொண்டு, அவர்கள் தவறும்போது மனந்திரும்புவதால் நித்திய குடும்பத்தின் ஆசீர்வாதங்கள் உணரப்படுகின்றன. இந்த நியமங்களைப் பெறவும், அவர்களின் உடன்படிக்கைகளை மதிக்கவும் உறுப்பினர்களுக்கு சபைத் தலைவர்கள் உதவுகிறார்கள்.

நித்திய குடும்பங்களை அமைப்பதற்கான கூடுதல் அம்சம், ஆலயத்தில் உறுப்பினர்கள் தங்கள் மரித்த மூதாதையர்களுடன் முத்திரித்தலை அனுமதிக்கும் நியமங்களை நிறைவேற்றுவதாகும்.

2.1.2.

கணவனும் மனைவியும்

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான திருமணம் தேவனால் நியமனம் செய்யப்பட்டது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 49: 15 பார்க்கவும்). கணவனும் மனைவியும் நித்திய ஜீவனை நோக்கி ஒன்றாக முன்னேற விரும்புகிறார்கள் (1 கொரிந்தியர் 11:11 பார்க்கவும் ).

நித்திய ஜீவனைப் பெறுவதற்கான தேவைகளில் ஒன்று, ஒரு ஆணும் பெண்ணும் சிலஸ்டியல் திருமண உடன்படிக்கையில் பிரவேசிப்பது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 131:1–4 பார்க்கவும்). ஒரு தம்பதியினர் ஆலயத்தில் திருமண முத்திரித்தல் நியமத்தைப் பெற்றவுடன் இந்த உடன்படிக்கையை அவர்கள் செய்கிறார்கள். இந்த உடன்படிக்கை ஒரு நித்திய குடும்பத்தின் அடித்தளமாகும். விசுவாசத்தோடு கைக்கொள்ளப்படும்போது, அது அவர்களுடைய திருமணத்தை என்றென்றும் நிலைத்திருக்க அனுமதிக்கிறது.

கணவன் மனைவி இடையேயான சரீர நெருக்கம் அழகாகவும் பரிசுத்தமாகவும் இருக்க வேண்டும். இது பிள்ளைகளை சிருஷ்டிப்பதற்கும் கணவன் மனைவி இடையே அன்பை வெளிப்படுத்துவதற்கும் தேவனால் நியமிக்கப்பட்டது. மென்மை மற்றும் மரியாதை, சுயநலம் அல்ல, அவர்களின் நெருங்கிய உறவை வழிநடத்த வேண்டும்.

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான திருமணத்திற்காக பாலியல் நெருக்கம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டுள்ளார்.

தேவனின் பார்வையில் கணவனும் மனைவியும் சமம். ஒருவர் மீது மற்றொருவர் ஆதிக்கம் செலுத்தக்கூடாது. இருவரின் முழுப் பங்கேற்புடன் அவர்களின் தீர்மானங்கள் ஒற்றுமையுடனும் அன்புடனும் எடுக்கப்பட வேண்டும்.

2.1.3.

பெற்றோரும் பிள்ளைகளும்

தன் பிள்ளைகள் பூமியில் பலுகிப் பெருகவேண்டுமென்ற தேவனுடைய கட்டளை அமலில் உள்ளது என்று பிற்கால தீர்க்கதரிசிகள் போதிக்கிறார்கள்.(“குடும்பம்: உலகிற்கு ஓர் பிரகடனம்”; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 49:16–17 ஐயும் பார்க்கவும்).

அன்பான கணவனும் மனைவியும் சேர்ந்து பிள்ளைகளை வளர்ப்பதற்கும் போஷிப்பதற்கும் சிறந்த பின்னணியை வழங்குகிறார்கள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஒன்றாக வளர்ப்பதை தனிப்பட்ட சூழ்நிலைகள் தடுக்கலாம். இருப்பினும், அவர்கள் அவருடைய உதவியை நாடும்போதும், அவருடன் தங்கள் உடன்படிக்கைகளைக் கைக்கொள்ள முயலும்போதும் கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பார்.

நித்திய ஜீவனின் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்குத் தங்கள் பிள்ளைகளுக்கு உதவுவதற்கு பெற்றோருக்கு முக்கிய பொறுப்பு உள்ளது. தேவனையும் மற்றவர்களையும் நேசிக்கவும் சேவை செய்யவும் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கற்பிக்கிறார்கள் (மத்தேயு 22:36–40 பார்க்கவும்).

“தகப்பன்மார்கள் தங்கள் குடும்பங்களை அன்பிலும் நீதியிலும் வழிநடத்த வேண்டும் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு வாழ்க்கை மற்றும் பாதுகாப்பிற்கான தேவைகளை வழங்குவதற்கு பொறுப்பானவர்கள்” (“குடும்பம்: உலகிற்கு ஓர் பிரகடனம்”). வீட்டில் கணவரோ, தகப்பனோ இல்லாதபோது, தாய் குடும்பத்தை தலைமையேற்று நடத்துகிறார்.

குடும்பத்தில் தலைமை தாங்குவது என்பது குடும்ப உறுப்பினர்கள் மீண்டும் தேவனின் பிரசன்னத்தில் வாழ உதவும் பொறுப்பாகும். இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றி, மென்மை, சாந்தம் மற்றும் தூய அன்புடன் சேவை செய்து கற்பிப்பதன் மூலம் இது செய்யப்படுகிறது (மத்தேயு20:26–28 பார்க்கவும்). குடும்பத்தில் தலைமை தாங்குவது என்பது, வழக்கமான ஜெபம், சுவிசேஷப் படிப்பு மற்றும் ஆராதனையின் பிற அம்சங்களில் குடும்ப உறுப்பினர்களை நடத்துதலை உள்ளடக்கியது. இந்தப் பொறுப்புகளை நிறைவேற்ற பெற்றோர்கள் ஒற்றுமையுடன் செயல்படுகிறார்கள்.

“தங்கள் பிள்ளைகளை வளர்ப்பதற்கு தாய்மார்கள் முதன்மையாக பொறுப்புள்ளவர்கள்”(“குடும்பம்: உலகிற்கு ஓர் பிரகடனம்”). வளர்ப்பது என்பது இரட்சகரின் முன்மாதிரியைப் பின்பற்றி, போஷித்தல், கற்பித்தல் மற்றும் ஆதரவளிப்பதாகும் (3 நேபி 10:4 பார்க்கவும்). தன் கணவருடன் ஒற்றுமையுடன், தன் குடும்பத்திற்கு சுவிசேஷ சத்தியங்களைக் கற்றுக்கொள்ளவும், பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தை வளர்க்கவும் ஒரு தாய் உதவுகிறாள். இருவரும் சேர்ந்து குடும்பத்தில் அன்பின் சூழலை வளர்க்கிறார்கள்.

“இந்தப் பரிசுத்தமான பொறுப்புகளில், தகப்பன்மார்களும் தாய்மார்களும் ஒருவருக்கொருவர் சமமான பங்காளிகளாக உதவக் கடமைப்பட்டுள்ளனர்” (“குடும்பம்: உலகிற்கு ஓர் பிரகடனம்”). அவர்கள் ஒன்றாகவும் தேவனுடனும் ஜெபத்துடன் ஆலோசனை பெறுகிறார்கள். அவர்கள் இருவரின் முழுப் பங்கேற்புடன், ஒற்றுமையுடனும் அன்புடனும் ஒன்றுசேர்ந்து தீர்மானங்களை எடுக்கிறார்கள்.

2.2

வீட்டில் இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலின் பணி

பிரதான தலைமை கூறியது, “வீடுதான் நீதியான வாழ்க்கையின் அடிப்படை” (பிரதான தலைமை கடிதம், பிப்ருவரி 11, 1999).

வீட்டில் இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலின் பணியைச் செய்வதில் உறுப்பினர்களை ஆதரிக்க, சபைத் தலைவர்கள் ஆவியானவர் இருக்கும் ஒரு வீட்டை அமைக்க அவர்களை ஊக்குவிக்கிறார்கள். ஓய்வு நாளைக் கனம்பண்ணவும், வீட்டில் சுவிசேஷத்தைப் படிக்கவும் கற்றுக்கொள்ளவும், வாராந்திர இல்ல மாலையை நடத்தவும் அவர்கள் உறுப்பினர்களை ஊக்குவிக்கிறார்கள்.

2.2.3.

சுவிசேஷப் படிப்பும் வீட்டில் கற்றுக்கொள்ளுதலும்

சுவிசேஷத்தைக் கற்பித்தல் மற்றும் கற்றுக்கொள்ளுதல் ஆகியவை வீட்டை மையமாகக் கொண்டு சபையால் ஆதரிக்கப்படுவதாகும். சபைத் தலைவர்கள் அனைத்து உறுப்பினர்களையும் ஓய்வுநாளிலும் வாரம் முழுவதும் வீட்டில் சுவிசேஷத்தைப் படிக்கும்படி ஊக்குவிக்கிறார்கள்.

என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்-ல் குறிப்பிடப்பட்டுள்ள வேதவசனங்களைப் படிப்பது, வீட்டில் சுவிசேஷப் படிப்பின் பரிந்துரைக்கப்பட்ட பாடமாகும்.

2.2.4.

இல்ல மாலையும் பிற நடவடிக்கைகளும்

பிற்கால தீர்க்கதரிசிகள் சபை உறுப்பினர்களுக்கு வாராந்திர இல்ல மாலையை நடத்துவதற்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். தனிநபர்களும் குடும்பங்களும் சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ளவும், சாட்சிகளைப் பலப்படுத்தவும், ஒற்றுமையைக் கட்டியெழுப்பவும், ஒருவருக்கொருவர் மகிழவும் இது ஒரு பரிசுத்தமான நேரம்.

இல்ல மாலை என்பது உறுப்பினர்களின் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றக்கூடியது. இது ஓய்வுநாளில் அல்லது பிற நாட்களிலும் நேரங்களிலும் நடத்தப்படலாம். இதில் அடங்கியன:

  • சுவிசேஷ படிப்பும் அறிவுறுத்தலும் (என்னைப் பின்பற்றி வாரங்கள் விரும்பியபடி பாடங்கள் பயன்படுத்தப்படலாம்).

  • மற்றவர்களுக்கு சேவை செய்தல்.

  • துதிப்பாடல்கள் மற்றும் ஆரம்ப வகுப்புப் பாடல்களைப் பாடுதல் அல்லது இசைத்தல் (அத்தியாயம் 19 பார்க்கவும்).

  • பிள்ளைகள் மற்றும் இளைஞர்களின் வளர்ச்சியில் குடும்ப உறுப்பினர்களை ஆதரித்தல்.

  • குடும்ப ஆலோசனைக் குழு இலக்குகளை ஏற்படுத்துகிறது, சிக்கல்களைத் தீர்க்கிறது, நேர அட்டவணைகளை ஒருங்கிணைக்கிறது .

  • பொழுதுபோக்கு நடவடிக்கைகள்.

ஒற்றை உறுப்பினர்களும் மற்றவர்களும் சாதாரண ஓய்வுநாள் ஆராதனை சேவைகளுக்கு வெளியே குழுக்களாக கூடி இல்ல மாலையில் பங்கேற்கலாம் மற்றும் சுவிசேஷப் படிப்பின் மூலம் ஒருவரையொருவர் பலப்படுத்தலாம்.

2.2.5.

ஆதரிக்கும் தனிநபர்கள்

குடும்ப ஆதரவு இல்லாத உறுப்பினர்களுக்கு சபைத் தலைவர்கள் உதவுகிறார்கள்.

ஐக்கியம், ஆரோக்கியமான சமூக அனுபவங்கள் மற்றும் ஆவிக்குரிய வளர்ச்சிக்கான வாய்ப்புகளைப் பெற இந்த உறுப்பினர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் தலைவர்கள் உதவுகிறார்கள்.

2.3

வீட்டிற்கும் சபைக்கும் இடையிலான உறவு

இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலின் பணி, வீட்டை மையமாகக்கொண்டு சபையால் ஆதரிக்கப்படுகிறது. வீட்டிற்கும் சபைக்கும் இடையிலான உறவில் பின்வரும் கொள்கைகள் பொருந்தும்.

  • தலைவர்களும் ஆசிரியர்களும் பெற்றோரின் பங்கை மதித்து அவர்களுக்கு உதவுகிறார்கள்.

  • ஒவ்வொரு தொகுதி அல்லது கிளையிலும் சில சபைக் கூட்டங்கள் அத்தியாவசியம். இதில் திருவிருந்துக் கூட்டம், வகுப்புகள், மற்றும் ஓய்வுநாளில் நடத்தும் குழுமக் கூட்டங்கள் ஆகியவை அடங்கும். வேறு பல கூட்டங்கள், செயல்பாடுகள் மற்றும் நிகழ்ச்சிகள் அத்தியாவசியம் இல்லை.

  • சபை சேவை மற்றும் பங்கேற்பு ஒரு அளவு தியாகத்தை உள்ளடக்கியது. உறுப்பினர்கள் அவர்களுடைய சபையில் சேவை செய்து தியாகம் செய்யும்போது கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பார். இருப்பினும், சபை சேவைக்கு வழங்கப்படும் நேரம், வீட்டில், வேலையில் மற்றும் பிற இடங்களில் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றும் உறுப்பினர்களின் திறனைக் குறைக்கக்கூடாது.