இரட்சகருக்கு நெருக்கமாய் வருதல்
இரட்சகரை அறியவும் நேசிக்கவும் முற்படுகையில், வித்தியாசமாக நம்பும் மற்றவர்களிடமிருந்து நம்மைத் தனிமைப்படுத்திக் கொள்ளாமல், வித்தியாசமான, அசாதாரணமான மற்றும் சிறப்பு வாய்ந்த தேவனுடனான உடன்படிக்கைகளின் மூலம் உலகத்திலிருந்து நம்மைப் பிரிக்கிறோம்.
எனக்கன்பான சகோதர சகோதரிகளே, இன்று மாலை நான் இயேசு கிறிஸ்துவின் தாழ்மையான, பக்தியுள்ள சீஷர்களிடம் பேசுகிறேன். இந்த நாட்டிலும் உலகெங்கிலும் உள்ள தேசங்களிலும் உங்கள் வாழ்க்கையின் நன்மையையும், இரட்சகரிடத்தில் நீங்கள் வைத்திருக்கும் விசுவாசத்தையும் நான் பார்க்கும்போது, நான் உங்களை அதிகமாக நேசிக்கிறேன்.
அவருடைய ஊழியத்தின் முடிவில், இயேசுவின் சீஷர்கள் “[அவருடைய இரண்டாவது] வருகை மற்றும் உலகத்தின் முடிவின் அடையாளத்தைப்பற்றி”1 அவர்களிடம் சொல்லும்படி அவரிடம் கேட்டார்கள்.
இயேசு தாம் திரும்பி வருவதற்கு முந்தைய நிலைமைகளைப்பற்றி அவர்களிடம் சொன்னார், மேலும் “இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது [நேரம்] நெருங்கிவிட்டதை நீங்கள் அறிவீர்கள்” என்று அறிவித்து முடித்தார்.”2
கடந்த பொது மாநாட்டில், தலைவர் ஹென்றி பி. ஐரிங்கின் வார்த்தைகளை நான் மிக உன்னிப்பாகக் கேட்டேன்: “நாம் ஒவ்வொருவரும்”, எங்கிருந்தாலும், நாம் பெருகி வரும் ஆபத்தான காலங்களில் வாழ்கிறோம் என்பதை அறிவோம். … காலத்தின் அடையாளங்களைக் காணக் கண்களும், தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேட்பதற்குக் காதுகளும் உள்ள எவருக்கும் அது உண்மை என்று தெரியும்”3 என்று அவர் கூறினார்
இரட்சகர் தனது வீரம் மிக்க சீஷர்களைப் பாராட்டினார்: “உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும் அவைகள் பாக்கியமுள்ளவைகள்.”4 இந்த மாநாட்டில் கர்த்தருடைய தீர்க்கதரிசிகள் மூலமும் மற்றவர்கள் மூலமும் சொன்ன கர்த்தருடைய வார்த்தைகளை நாம் கூர்ந்து கவனிக்கும்போது இந்த ஆசீர்வாதம் நமக்கு உண்டாகட்டும்.
கோதுமையும் பதரும்
அவர் திரும்பி வருவதற்கு முன் இந்த இறுதி நேரத்தில், “ராஜ்யத்தின் புத்திரர்” என்று அவர் விவரிக்கும் “கோதுமை”, 5 “களைகளுடன்” அல்லது தேவனை நேசிக்காதவர்களுடனும், அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாதவர்களுடன் அருகருகே வளரும் என கர்த்தர் விளக்கினார். அவை “இரண்டும் அருகருகே ஒன்றாக வளரும்” 6.
இரட்சகர் திரும்பும் வரை ஒவ்வொரு பக்கத்திலும் நன்மையும் தீமையும் அதிகமான இதுவே நமது உலகம், .7
நீங்கள் சில நேரங்களில் ஒரு வலுவான, முதிர்ந்த கோதுமை இழையாக உணராமல் இருக்கலாம். உங்களோடே பொறுமையாயிருங்கள்! கோதுமையுடன் சில மென்மையான இழைகள் துளிர்விடும் என்று கர்த்தர் கூறினார்.8 நாம் அவருடைய பிற்கால பரிசுத்தவான்கள், இன்னும் நாம் இருக்க விரும்புவதுபோல் எல்லாவற்றிலும் இல்லையென்றாலும், அவருடைய உண்மையான சீஷர்களாக இருக்க வேண்டும் என்ற விருப்பத்தில் தீவிரமாக இருக்கிறோம்.
இயேசு கிறிஸ்துவில் நமது விசுவாசத்தைப் பலப்படுத்துவோம்
உலகில் தீமை பெருகும்போது, நம்முடைய ஆவிக்குரிய உயிர்வாழ்வும், நாம் நேசிப்பவர்களின் ஆவிக்குரிய உயிர்வாழ்வும், இயேசு கிறிஸ்துவில் உள்ள நம்முடைய விசுவாசத்தின் வேர்களை இன்னும் முழுமையாக வளர்த்து, பாதுகாத்து, பலப்படுத்த வேண்டும் என்பதை நாம் உணர்கிறோம். அப்போஸ்தலனாகிய பவுல், இரட்சகருக்கான நமது அன்பிலும், அவரைப் பின்பற்றுவதற்கான நமது உறுதியிலும் வேரூன்றி,9 அடித்தளமாக, 10 நிலைபெறும்படி அறிவுரை கூறினான். இன்றும் வரவிருக்கும் நாட்களிலும் திசைதிருப்பல்கள், கவனக்குறைவு மற்றும் அலட்சியம் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கப்பட்டு, அதிக கவனம் மற்றும் ஒருமுகப்படுத்தப்பட்ட முயற்சி தேவை.11
ஆனால், நம்மைச் சுற்றி உலக செல்வாக்குகள் அதிகரித்து வருவதாலும், நாம் பயப்படத் தேவையில்லை. கர்த்தர் தம்முடைய உடன்படிக்கை மக்களை ஒருபோதும் கைவிடமாட்டார். ஆவிக்குரிய வரங்களின் ஈடுசெய்யும் வல்லமையும் நீதிமான்களுக்கான தெய்வீக வழிகாட்டுதலும் உள்ளது.12 எவ்வாறாயினும், ஆவிக்குரிய வல்லமையின் இந்த கூடுதல் ஆசீர்வாதம், நாம் இந்த தலைமுறையின் ஒரு பகுதியாக இருப்பதால் நம்மீது படியாது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்தி, அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது, அவரை அறிந்து அவரை நேசிக்கும்போது அது வருகிறது. “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்” என்று இயேசு ஜெபித்தார்.”13
நாம் மிக நன்றாக அறிந்ததைப்போல, இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீஷராக இருப்பதும், அவர்மீது விசுவாசம் வைப்பதும் என்பது ஒரு முறை எடுத்த முடிவை விட மேலானது, ஒரு முறை நிகழ்வதை விட அதிகமானது. இது ஒரு பரிசுத்தமான செயல்முறையாகும், அது நம் வாழ்வின் பருவங்களில் வளர்ந்து விரிவடைகிறது, நாம் அவருடைய பாதத்தில் மண்டியிடும் வரையும் அதற்கு அப்பாலும் தொடர்கிறது.
உலகில் உள்ள களைகளுக்கு மத்தியில் கோதுமை வளர்ந்து வருவதால், வரும் நாட்களில் இரட்சகருக்கான நமது உறுதிப்பாட்டை நாம் எவ்வாறு ஆழப்படுத்தி பலப்படுத்தலாம்?
இங்கே மூன்று சிந்தனைங்கள் உள்ளன:
இயேசுவின் வாழ்வில் நம்மை மூழ்கடிப்போம்
முதலாவதாக, இயேசுவின் வாழ்க்கை, அவருடைய போதனைகள், அவருடைய மகத்துவம், அவருடைய வல்லமை மற்றும் அவருடைய பாவநிவாரண பலி ஆகியவற்றில் நாம் முழுமையாக மூழ்கிவிடலாம். இரட்சகர் சொன்னார், “ஒவ்வொரு எண்ணத்திலும் என்னை நோக்கிப்பார்.”14 “அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்பு கூருகிறோம்”15 என யோவான் நமக்கு நினைவூட்டினான். அவருடைய அன்பை நாம் சிறப்பாக அனுபவிக்கும்போது, நாம் அவரை இன்னும் அதிகமாக நேசிக்கிறோம், மேலும் இயற்கையாகவே, தேவைப்படுபவர்களை நேசிப்பதிலும் கவனித்துக்கொள்வதிலும் கிறிஸ்துவின் முன்மாதிரியை சிறப்பாகப் பின்பற்றுகிறோம். அவரை நோக்கி ஒவ்வொரு நீதியான இயக்கத்திலும், நாம் அவரை இன்னும் தெளிவாகக் காண்கிறோம்.16 நாம் அவரை வணங்குகிறோம், அவரைப் பின்பற்றுவதற்கு நமது சிறிய வழிகளில் முயற்சி செய்கிறோம்.17
கர்த்தருடன் உடன்படிக்கைகளை செய்வோம்.
அடுத்ததாக, இரட்சகரை நாம் நன்கு அறிந்து நேசிப்பதால், நம்முடைய விசுவாசத்தையும் நம்பிக்கையையும் அவருக்கு உறுதியளிக்க இன்னும் அதிகமாக விரும்புகிறோம். நாம் அவருடன் உடன்படிக்கைகளைச் செய்கிறோம். ஞானஸ்நானத்தில் நமது வாக்குறுதிகளுடன் தொடங்குகிறோம், நாம் தினமும் மனந்திரும்பும்போதும், மன்னிப்புக் கேட்கும்போதும், ஒவ்வொரு வாரமும் திருவிருந்தைப் பெறுவதை ஆவலுடன் எதிர்பார்க்கும்போதும் இந்த வாக்குறுதிகளையும் மற்றவற்றையும் உறுதிப்படுத்துகிறோம். “எப்போதும் அவரை நினைவுகூருவோம், அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவோம்”18 என்று உறுதியளிக்கிறோம்
நாம் ஆயத்தமானதும், ஆலயத்தின் நியமங்களையும் உடன்படிக்கைகளையும் தழுவிக்கொள்கிறோம். கர்த்தருடைய வீட்டில் நம்முடைய பரிசுத்தமான, அமைதியான தருணங்களில் நித்தியத்தின் செல்வாக்கை உணர்ந்து, மகிழ்ச்சியுடன் தேவனுடன் உடன்படிக்கைகளை செய்து, அவற்றைக் கடைப்பிடிப்பதற்கான நமது தீர்மானத்தை பலப்படுத்துகிறோம்.
உடன்படிக்கைகளை செய்வதும் கடைப்பிடிப்பதும் இரட்சகரின் அன்பு நம் இருதயத்தில் இன்னும் ஆழமாக பதிய அனுமதிக்கிறது. இந்த மாத லியஹோனாவில், தலைவர் நெல்சன் கூறினார்: “[நமது] உடன்படிக்கை(கள்) நம்மை அவருக்கு நெருக்கமாகவும் மிக நெருக்கமாகவும் வழிநடத்தும். தம்முடன் அத்தகைய பிணைப்பை ஏற்படுத்தியவர்களுடனான தனது உறவை தேவன் கைவிடமாட்டார்.”19 இந்த காலை நேரத்தில் தலைவர் நெல்சன் மிக அழகாக சொன்னதைப்போல, “ஒவ்வொரு புதிய ஆலயத்தின் பிரதிஷ்டையுடன், நம்மைப் பலப்படுத்தவும், சத்துருவின் தீவிரமான முயற்சிகளை முறியடிக்கவும் கூடுதலான தெய்வீக வல்லமை உலகில் வருகிறது.”20
கர்த்தருடைய வீடுகளை நமக்கு நெருக்கமாகக் கொண்டுவரும்படியும், அவருடைய வீட்டில் அடிக்கடி இருக்க அனுமதிக்கும்படியும் கர்த்தர் தம் தீர்க்கதரிசியை ஏன் வழிநடத்துகிறார் என்பதை நாம் பார்க்கலாமா?
நாம் கர்த்தருடைய வீட்டிற்குள் பிரவேசிக்கும்போது, நம் வாழ்வின் நோக்கத்தையும், நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மூலமாக நமக்கு அளிக்கப்படும் நித்திய வரங்களையும் அறிந்துகொள்ளும்போது, நமக்கு எதிராகக் குவிந்திருக்கும் உலகத் தாக்கங்களிலிருந்து நாம் விடுபடுகிறோம்.
பரிசுத்த ஆவியின் வரத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்
இறுதியாக, எனது மூன்றாவது சிந்தனை: இந்த பரிசுத்தமான தேடலில், பரிசுத்த ஆவியின் வரத்தை நாம் பொக்கிஷப்படுத்தி, பாதுகாத்து, காப்பாற்றி, காக்கிறோம். முன்பு, தலைவர் எம். ரசல் பல்லார்டும் சில நிமிடங்களுக்கு முன்பு மூப்பர் கெவின் டபிள்யூ. பியர்சன்னும் தலைவர் நெல்சனின் தீர்க்கதரிசன எச்சரிக்கையைப்பற்றி சொன்னார்கள், நான் மீண்டும் சொல்கிறேன்: “பரிசுத்த ஆவியின் வழிநடத்துதல், வழிகாட்டுதல், ஆறுதல் மற்றும் நிலையான செல்வாக்கு இல்லாமல் ஆவிக்குரிய ரீதியில் உயிர்வாழ்வது சாத்தியமில்லை.”21 இது கிரயத்திற்கு அப்பாற்பட்ட வரம். பரிசுத்த ஆவியின் செல்வாக்கு நம்முடன் இருக்கும்படியாக நமது அன்றாட அனுபவங்களைப் பாதுகாக்க நம்மால் முடிந்த அனைத்தையும் நாம் செய்கிறோம். நாம் உலகிற்கு ஒரு வெளிச்சம், தேவைப்படும்போது, மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக இருக்க விரும்புகிறோம். தலைவர் டாலின் எச். ஓக்ஸ் சமீபத்தில் இளம் வயது வந்தவரைக் கேட்டார்: “வித்தியாசமாக இருக்க உங்களுக்கு தைரியமிருக்கிறதா? உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் செய்யும் தேர்ந்தெடுப்புகள் [குறிப்பாக] முக்கியமானவை. … உலகின் எதிர்ப்பை எதிர்த்து நீங்கள் முன்னேறிச் செல்கிறீர்களா?”22
உலகத்திலிருந்து வித்தியாசமாக இருக்க தேர்ந்தெடுங்கள்
சமீபத்திய சமூக ஊடக இடுகையில், உலகத்திலிருந்து வேறுபட்டவர்களாக இருக்க, சக சீஷர்கள் செய்த தேர்ந்தெடுப்புகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு அவர்களிடம் கேட்டுக் கொண்டேன். நூற்றுக்கணக்கான பதில்களை நான் பெற்றேன்.23 ஒரு சில இங்கே:
அமன்டா: நான் உள்ளூர் சிறையில் பணிபுரியும் நர்ஸ். நான் கிறிஸ்துவைப் போல் கைதிகளை பராமரிக்க முயற்சி செய்கிறேன்.
ரேச்சல்: நான் ஒரு ஓபரா பாடகி, அடக்கத்தைப் பொருட்படுத்தாமல், எனக்குக் கொடுக்கப்பட்ட எந்த உடையையும் அணிவேன் என பொதுவாக கருதப்படுகிறது. [நான் தரிப்பிக்கப்பட்டவளாயிருப்பதால்,] நான் [தயாரிப்பாளர்களிடம்] ஆடை [அடக்கமாக] இருக்க வேண்டும் என்று கூறினேன். அவர்கள் மகிழ்ச்சியடையவில்லை … ஆனால் தயக்கத்துடன் மாற்றங்களைச் செய்தார்கள். எல்லா நேரங்களிலும் கிறிஸ்துவின் சாட்சியாக நிற்பதால் வரும் சமாதானத்தை நான் வர்த்தகம் செய்ய மாட்டேன்.
கிறிஸ்: நான் ஒரு குடிகாரன் (மீண்டு வந்து), ஆலயத்திற்கு தகுதியானவன், சபையின் உறுப்பினர். அடிமைத்தனம் மற்றும் [இயேசு கிறிஸ்துவின்] பாவநிவர்த்தியின் சாட்சியத்தைப் பெறுவதில் எனது அனுபவங்களைப்பற்றி நான் அமைதியாக இல்லை.
லாரன்: நான் உயர்நிலைப் பள்ளியில் என் வகுப்பு தோழர்களுடன் ஒரு சிறுகதை எழுதும் பணியில் ஈடுபட்டிருந்தேன். என்னுடைய அமைதியான, ஒதுக்கப்பட்ட பாத்திரம் திடீரென்று அவதூறுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். அவர்கள் என்னை தொடர்ந்து வற்புறுத்தினார்கள், ஆனால் நான் மறுத்து என் நிலைப்பாட்டை தக்க வைத்தேன்.
ஆடம்: நான் கற்புடைமை நியாயப்பிரமாணத்தை கடைப்பிடிக்கிறேன், ஆபாசப் படங்களைத் தவிர்க்கிறேன் என்று சொன்னால் நிறைய பேர் நம்பவில்லை. அது எனக்குக் கொடுக்கும் மகிழ்ச்சி மற்றும் மன அமைதியின் நன்மையை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
எல்லா: என் தந்தை LGBTQ சமூகத்தைச் சேர்ந்தவர். கிறிஸ்துவின் சாட்சியாக நின்று நான் நம்புவதற்கு உண்மையாக இருக்கும் போது மற்றவர்களின் உணர்வுகளை எப்போதும் கருத்தில் கொள்ள முயற்சிக்கிறேன்.
ஆன்ட்ரேட்: எனது குடும்பம் இனி செல்ல வேண்டாம் என்று முடிவு செய்தபோது நான் தொடர்ந்து சபைக்கு செல்ல முடிவு செய்தேன்.
இறுதியாக ஷெர்ரியிடமிருந்து: நாங்கள் ஆளுனர் மாளிகையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தோம். அவர்கள் “டோஸ்ட்”க்காக ஷாம்பெயின் கொடுக்க ஆரம்பித்தனர். அது அவமானகரமானதாக இருக்கும் என்று ஊழியர்கள் கூறினாலும், தண்ணீர் தர வேண்டும் என நான் வலியுறுத்தினேன். நாங்கள் ஆளுனருக்கு டோஸ்ட் கொடுத்தோம், நான் என் தண்ணீர் கிண்ணத்தை உயர்த்தினேன்! ஆளுனர் புண்படவில்லை
தலைவர் நெல்சன் கூறினார், “ஆம், நீங்கள் உலகில் வாழ்கிறீர்கள், ஆனால் உலகின் கறையைத் தவிர்க்க உங்களுக்கு உதவும் வகையில் உலகத்திலிருந்து வேறுபட்ட தரநிலைகள் உங்களிடம் உள்ளன.”24
உக்ரைனில் உள்ள இளம் தாயான அனஸ்டாசியா, கடந்த பிப்ரவரியில் கீவில் குண்டுவெடிப்பு தொடங்கியபோது, ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து மருத்துவமனையில் இருந்தார். ஒரு நர்ஸ் மருத்துவமனை அறைக் கதவைத் திறந்து, அவசரக் குரலில், “உன் குழந்தையை எடுத்துக்கொண்டு, போர்வையில் போர்த்திவிட்டு, ஹாலுக்குப் போ, இப்போதே!” என்றாள்.
பின்னர், அனஸ்தேசியா கருத்து தெரிவித்தார்:
“எனது தாய்மையின் முதல் நாட்கள் மிகவும் கடினமாக இருக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை, ஆனால் நான் பார்த்த ஆசீர்வாதங்களில் அற்புதங்களில் கவனம் செலுத்துகிறேன்.
“இப்போது, … இவ்வளவு அழிவு மற்றும் தீங்கு விளைவித்தவர்களை மன்னிக்க முடியாது என்று தோன்றலாம்…, ஆனால் கிறிஸ்துவின் சீஷராக, என்னால் [மன்னிக்க] முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
“எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது, ஆனால் நமது உடன்படிக்கைகளைக் கடைப்பிடிப்பது, கடினமான காலங்களில் கூட மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் உணர அனுமதித்து, ஆவியானவர் நம்முடன் தொடர்ந்து இருக்க அனுமதிக்கும் என்பதை நான் அறிவேன்.”25
நித்திய ஜீவனின் செலஸ்டியல் மகிமையின் வாக்களிப்பு
எனக்கன்பான சகோதர சகோதரிகளே, நம்முடைய அன்பான இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பை மிகுதியாகப் பெறுவதற்கு நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன். அவர் ஜீவிக்கிறார் என்றும் அவருடைய பரிசுத்த பணியை வழிநடத்துகிறார் என்றும் நான் அறிவேன். அவர் மீதுள்ள அன்பை தெரிவிக்க என்னிடம் முழுமையாக வார்த்தைகளில்லை.
நம்முடைய கர்த்தரும் இரட்சகருமானவரின் மகிமையான வருகைக்காக காத்திருக்கிற நாம் அனைவரும் “உடன்படிக்கையின் பிள்ளைகள்”, ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள தேசங்கள் மற்றும் கலாச்சாரங்களில் பூமி முழுவதும் பரவி, மில்லியன் கணக்கான எண்ணிக்கையிலிருக்கிறோம். நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஒளியாக பிரகாசிக்கிறோம், நம் ஆசைகள், எண்ணங்கள், தேர்ந்தெடுப்புகள் மற்றும் செயல்களை உணர்வுபூர்வமாக வடிவமைக்கிறோம். இரட்சகரை அறியவும் நேசிக்கவும் முழு மனதுடன் முயல்கிறோம், வித்தியாசமாக நம்பும் உலகில் உள்ள மற்றவர்களிடமிருந்து நம்மைத் தனிமைப்படுத்தாமல், அவரையும் அவருடைய போதனைகளையும் மதிக்கும்போது, தனித்துவமாகவும், அசாதாரணமாகவும், சிறப்புடையவர்களாகவும், தேவனுடனான உடன்படிக்கைகளின் மூலம் உலகத்திலிருந்து நம்மைப் பிரிக்கிறோம்.
களைகளுக்கு மத்தியில் கோதுமையாய் இருப்பது ஒரு அற்புதமான பயணம், சில சமயங்களில் மனவேதனை நிறைந்தது, ஆனால் நமது விசுவாசத்தின் முதிர்ச்சி மற்றும் உறுதியளிப்பதன் மூலம் எப்போதும் அமைதியாக இருக்கும். இரட்சகர் மீதான உங்கள் அன்பும், அவருடைய உங்கள் மீதான அன்பும் உங்கள் இருதயத்தில் ஆழமாக பதிய நீங்கள் அனுமதிக்கும்போது, உங்கள் வாழ்க்கையின் சவால்களைச் சந்திப்பதில் நம்பிக்கையையும் சமாதானத்தையும் சேர்த்துக்கொண்டதாக நான் உறுதியளிக்கிறேன். இரட்சகர் நமக்கு வாக்களிக்கிறார்: “ஆகவே, கோதுமை மற்றும் பதரின் உவமையின்படி, நித்திய ஜீவனை சுதந்தரித்துக்கொள்ள கோதுமையை களஞ்சியங்களில் சேர்க்கும்படியாகவும், சிலஸ்டியல் மகிமையுடன் கிரீடம் சூட்டப்படவும், நான் என்னுடைய ஜனங்களை கூட்டிச் சேர்க்கவேண்டும்.”26 இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.