தனிப்பட்ட வெளிப்பாட்டிற்கான ஒரு கட்டமைப்பு
பரிசுத்த ஆவியானவர் செயல்படும் கட்டமைப்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் கட்டமைப்பிற்குள் செயல்படும்போது, பரிசுத்த ஆவியானவர் வியக்கத்தக்க உள்ளுணர்வை கட்டவிழ்த்துவிட முடியும்.
உங்களில் பலரைப் போலவே, நான் பல ஆண்டுகளாக மூப்பர் டியட்டர் எப். உக்டர்ப் மூலம் பெரிதும் செல்வாக்கடைந்துள்ளேன். நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை இது ஒரு பகுதியாக விளக்குகிறது.1 எனவே, அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் …
நன்கு பயிற்சி பெற்ற விமானிகள் தங்கள் விமானத்தின் திறனுக்குள் பறக்கிறார்கள் மற்றும் ஓடுபாதை பயன்பாடு மற்றும் விமானப் பாதை தொடர்பாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் வழிமுறைகளைப் பின்பற்றுகிறார்கள். எளிமையாகச் சொன்னால், விமானிகள் ஒரு கட்டமைப்பிற்குள் செயல்படுகிறார்கள். அவர்கள் எவ்வளவு புத்திசாலித்தனமாக இருந்தாலும் அல்லது திறமையானவர்களாக இருந்தாலும், இந்த கட்டமைப்பிற்குள் பறப்பதன் மூலம் மட்டுமே விமானிகள் அதன் அற்புதமான நோக்கங்களை நிறைவேற்ற ஒரு விமானத்தின் மகத்தான திறனை பாதுகாப்பாக கட்டவிழ்த்துவிட முடியும்.
இதைப் போன்ற வழியில், ஒரு கட்டமைப்பிற்குள் தனிப்பட்ட வெளிப்பாட்டைப் பெறுகிறோம். ஞானஸ்நானத்திற்குப் பின்பு, நமக்கு ஒரு கம்பீரமான ஆனால் நடைமுறை வரமாக, பரிசுத்த ஆவியின் வரம் வழங்கப்படுகிறது.2 நாம் உடன்படிக்கையின் பாதையில் நிலைத்திருக்க முயற்சி செய்யும்போது, 3 “பரிசுத்த ஆவியானவரான அவர் … [அது] [நாம்] செய்ய வேண்டிய அனைத்தையும் [நமக்கு] காண்பிக்கிறார்.”4 நமக்கு நிச்சயமில்லாமல் அல்லது சங்கடமாக இருக்கும்போது, தேவனிடம் நாம் உதவி கேட்கலாம்.5 இரட்சகரின் வாக்குறுதி இன்னும் தெளிவாக இருக்க முடியாது: “கேளுங்கள், அது உங்களுக்குக் கொடுக்கப்படும் … ஏனென்றால் கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்கிறான்.”6 பரிசுத்த ஆவியின் உதவியால் நம் தெய்வீக இயல்பை நமது நித்திய இலக்காக மாற்ற முடியும்.7
பரிசுத்த ஆவியின் மூலம் தனிப்பட்ட வெளிப்பாட்டின் வாக்குறுதி, பறக்கும் விமானம் போன்று பிரமிக்க வைக்கிறது. விமானிகளைப் போலவே, தனிப்பட்ட வெளிப்பாட்டை வழங்க பரிசுத்த ஆவியானவர் செயல்படும் கட்டமைப்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் கட்டமைப்பிற்குள் செயல்படும்போது, பரிசுத்த ஆவியானவர் வியக்கத்தக்க உள்ளுணர்வு, திசை மற்றும் ஆறுதல் ஆகியவற்றை கட்டவிழ்த்துவிட முடியும். இந்த கட்டமைப்பிற்கு வெளியே, நமது புத்திசாலித்தனம் அல்லது திறமை எதுவாக இருந்தாலும், நாம் ஏமாற்றப்பட்டு நொறுங்கி எரிந்து போகலாம்.
தனிப்பட்ட வெளிப்பாட்டிற்கான இந்த கட்டமைப்பின் முதல் மூலக்கூறாக வேதங்கள் அமைகின்றன.8 வேதங்களில் காணப்படும் கிறிஸ்துவின் வார்த்தைகளை ருசிப்பது தனிப்பட்ட வெளிப்பாட்டைத் தூண்டுகிறது. மூப்பர் ராபர்ட் டி. ஹேல்ஸ் சொன்னார்: “நாம் தேவனிடம் பேச விரும்பும்போது, நாம் ஜெபிக்கிறோம். அவர் நம்மிடம் பேச வேண்டும் என்று நாம் விரும்பும்போது, நாம் வேதங்களை தேடுகிறோம்.”9
தனிப்பட்ட வெளிப்பாட்டை எவ்வாறு பெறுவது என்பதையும் வேதங்கள் நமக்குக் கற்பிக்கின்றன10 எது சரியானது எது நல்லது என்று நாம் கேட்கிறோம்,11 எது தேவனுடைய சித்தத்திற்கு மாறானது என்றல்ல.12 நமது சொந்த நிகழ்ச்சி நிரலை விளம்பரப்படுத்த அல்லது நமது சொந்த மகிழ்ச்சியை நிறைவேற்றுவதற்காக தவறான நோக்கங்களுடன் “தவறாக” நாம் கேட்க மாட்டோம்.13 எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் பெறுவோம் என்ற நம்பிக்கையில்15, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பரலோக பிதாவைக் கேட்க வேண்டும்14.
கட்டமைப்பின் இரண்டாவது கூறு என்னவென்றால், நாம் தனிப்பட்ட வெளிப்பாட்டை நமது எல்லைக்குள் மட்டுமே பெறுகிறோம், மற்றவர்களின் முன்னுரிமைக்குள் அல்ல. வேறு வார்த்தைகளெனில், நாம் நமக்கு நியமிக்கப்பட்ட ஓடுபாதையில் புறப்பட்டு தரையிறங்குகிறோம். நன்கு வரையறுக்கப்பட்ட ஓடுபாதைகளின் முக்கியத்துவம் மறுஸ்தாபிதத்தின் வரலாற்றின் ஆரம்பத்தில் அறியப்பட்டது. மார்மன் புஸ்தகத்தின் எட்டு சாட்சிகளில் ஒருவரான ஹைரம் பேஜ், முழு சபைக்கும் வெளிப்பாடுகளைப் பெறுவதாகக் கூறினார். பல உறுப்பினர்கள் ஏமாற்றப்பட்டு தவறான செல்வாக்கு பெற்றனர்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக, “இந்த சபையில் என் ஊழியக்காரரான ஜோசப் ஸ்மித், தவிர, அவருக்குப் பதிலாக வேறொருவரை நான் நியமிக்கும் வரை16 வேறு யாரும் கட்டளைகளையும் வெளிப்பாடுகளையும் பெற நியமிக்கப்படமாட்டார்கள்” என்று கர்த்தர் வெளிப்படுத்தினார். சபைக்கான கோட்பாடு, கட்டளைகள் மற்றும் வெளிப்பாடுகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்து பெற்றுக்கொள்ளும் ஜீவனுள்ள தீர்க்கதரிசியின் முன்னுரிமை.17 அதுதான் தீர்க்கதரிசியின் ஓடுபாதை.
பல ஆண்டுகளுக்கு முன்பு, அத்துமீறி நுழைந்ததற்காக கைது செய்யப்பட்ட ஒரு நபரிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் உள்ளே நுழைய முயன்ற ஒரு கட்டிடத்தின் கீழ் தளத்தின் கீழ் கூடுதல் வேதம் புதைக்கப்பட்டிருப்பது அவருக்கு வெளிப்படுத்தப்பட்டதாக அவர் என்னிடம் கூறினார். அவர் கூடுதல் வேதத்தைப் பெற்றவுடன், அவர் மொழிபெயர்ப்பின் வரத்தைப் பெறுவார் என்றும், புதிய வேதத்தை கொண்டுவருவார் என்றும், சபையின் கோட்பாடு மற்றும் போக்கை வடிவமைப்பார் என்றும் அவர் கூறினார். அவர் தவறாகப் புரிந்துகொண்டார் என்று நான் அவரிடம் சொன்னேன், அதற்காக ஜெபிக்கும்படி அவர் என்னிடம் கெஞ்சினார். நான் மாட்டேன் என்று அவரிடம் சொன்னேன். அவர் தகாத வார்த்தைகளால் திட்டி தொலைபேசி அழைப்பை முடித்தார்.18
ஒரு எளிய ஆனால் ஆழமான காரணத்திற்காக இந்த வேண்டுகோளைப்பற்றி நான் ஜெபிக்க வேண்டிய அவசியமில்லை: தீர்க்கதரிசி மட்டுமே சபைக்கு வெளிப்பாட்டைப் பெறுகிறார். தீர்க்கதரிசியின் ஓடுபாதைக்கு சொந்தமான இத்தகைய வெளிப்பாட்டை மற்றவர்கள் பெறுவது “தேவனுடைய பொருளாதாரத்திற்கு எதிரானது”19.
தனிப்பட்ட வெளிப்பாடு சரியான முறையில் தனிநபர்களுக்கு சொந்தமானது. நீங்கள் வெளிப்பாட்டை பெறலாம், உதாரணமாக, எங்கு வாழ்வது, என்ன தொழில் பாதையை பின்பற்றுவது அல்லது யாரை திருமணம் செய்வது.20 சபைத் தலைவர்கள் கோட்பாட்டைக் கற்பிக்கலாம் மற்றும் உணர்த்தப்பட்ட ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்ளலாம், ஆனால் இந்த தீர்மானங்களுக்கான பொறுப்பு உங்களுக்கே உள்ளது. அதுவே நீங்கள் பெறுவதற்கான வெளிப்பாடு; அது உங்கள் ஓடுபாதை.
கட்டமைப்பின் மூன்றாவது அம்சம் என்னவென்றால், தனிப்பட்ட வெளிப்பாடு தேவனின் கட்டளைகளுக்கும் அவருடன் நாம் செய்த உடன்படிக்கைகளுக்கும் இசைவாக இருக்கும். இது போன்ற ஒரு ஜெபத்தைக் கருத்தில் கொள்ளுங்கள்: “பரலோக பிதாவே, சபை சேவைகள் சலிப்பை ஏற்படுத்துகின்றன. நான் ஓய்வுநாளில் மலையிலோ அல்லது கடற்கரையிலோ உம்மை தொழுது கொள்ளலாமா? சபைக்குச் செல்வதிலிருந்தும், திருவிருந்தில் பங்குகொள்வதிலிருந்தும் நான் மன்னிக்கப்படலாமா, ஆனால் ஓய்வுநாளைப் பரிசுத்தமாகக் கைக்கொள்வதற்கான வாக்குறுதியளிக்கப்பட்ட ஆசீர்வாதங்கள் இன்னும் எனக்குக் கிடைக்குமா?” 21 அத்தகைய ஜெபத்திற்கு பதிலளிக்கும் விதமாக, தேவனின் பதிலை நாம் எதிர்பார்க்கலாம்: “என் பிள்ளையே, ஓய்வுநாளைப்பற்றிய என் விருப்பத்தை நான் ஏற்கனவே வெளிப்படுத்தியிருக்கிறேன்.”
தேவன் ஏற்கனவே தெளிவான வழிகாட்டுதலைக் கொடுத்திருப்பதைப்பற்றிய ஏதோ வெளிப்பாட்டைக் கேட்கும்போது, நம் உணர்வுகளை தவறாகப் புரிந்துகொள்வதற்கும், நாம் கேட்க விரும்புவதைக் கேட்பதற்கும் நம்மைத் திறக்கிறோம். ஒரு மனிதன் குடும்பத்தின் நிதி நிலைமையை நிலைநிறுத்துவதற்கான தனது போராட்டங்களைப்பற்றி ஒருமுறை என்னிடம் கூறினார். ஒரு தீர்வாக நிதியை அபகரிக்கும் எண்ணம் அவருக்கு இருந்தது, அதைப்பற்றி அவர் ஜெபித்தார், மேலும் அவ்வாறு செய்வதற்கான உறுதியான வெளிப்பாட்டைப் பெற்றதாக உணர்ந்தார். அவர் தேவனின் கட்டளைக்கு மாறாக வெளிப்பாட்டை நாடியதால் அவர் ஏமாற்றப்பட்டதை நான் அறிந்தேன். தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் எச்சரித்தார், “மனுப்புத்திரர்கள் தேவனுடைய ஆவியைக் கொண்டிருப்பதாக அவர்கள் நினைக்கும் போது, தவறான ஆவியின் செல்வாக்கின் கீழ் இருப்பதை விட பெரிய தீங்கு எதுவும் இல்லை.”22
லாபானைக் கொன்றபோது நேபி ஒரு கட்டளையை மீறியதாக சிலர் சுட்டிக்காட்டலாம். இருப்பினும், இந்த விதிவிலக்கு தனிப்பட்ட வெளிப்பாடு தேவனின் கட்டளைகளுக்கு இசைவாக இருக்கும் என்ற விதியை மறுக்கவில்லை, . எளிமையான விளக்கம் எதுவும் இந்த பாகத்தில் முழு திருப்திகரமாக இல்லை, ஆனால் நான் சில உண்மைகளை முன்னிலைப்படுத்துகிறேன். லாபானைக் கொல்ல முடியுமா என்று நேபி கேட்பதில் பாகம் தொடங்கவில்லை. அது அவன் செய்ய விரும்பிய ஒன்றல்ல. லாபானைக் கொன்றது நேபியின் தனிப்பட்ட நலனுக்காக அல்ல, மாறாக எதிர்கால தேசத்திற்கும் உடன்படிக்கை மக்களுக்கும் வேதவசனங்களை வழங்குவதற்காகவுமே. மேலும் இது ஒரு வெளிப்பாடு என்பதில் நேபி உறுதியாக இருந்தான், உண்மையில், இந்த விஷயத்தில், இது தேவனிடமிருந்து வந்த கட்டளை.23
கட்டமைப்பின் நான்காவது கூறு, தேவன் ஏற்கனவே உங்களுக்கு தனிப்பட்ட முறையில் வெளிப்படுத்தியதை அடையாளங் காண்பதாகும், அதே நேரத்தில் அவரிடமிருந்து மேலும் வெளிப்பாட்டிற்கு திறந்திருப்பது. தேவன் ஒரு கேள்விக்கு பதிலளித்து, சூழ்நிலைகள் மாறவில்லை என்றால், பதில் வித்தியாசமாக இருக்கும் என்று நாம் ஏன் எதிர்பார்க்க வேண்டும்? ஜோசப் ஸ்மித் 1828 ல் இந்த சிக்கலான சூழ்நிலையில் தடுமாறினார். மார்மன் புஸ்தகத்தின் முதல் பகுதி மொழிபெயர்க்கப்பட்டது, ஒரு பயனாளியும் ஆரம்பகால எழுத்தருமான மார்ட்டின் ஹாரிஸ், மொழிபெயர்க்கப்பட்ட பக்கங்களை எடுத்து தனது மனைவிக்குக் காட்ட ஜோசப்பிடம் அனுமதி கேட்டார். என்ன செய்வதென்று தெரியாமல், ஜோசப் வழிநடத்துதலுக்காக ஜெபித்தார். பக்கங்களை மார்ட்டின் எடுக்க விடாதீர்கள் என்று கர்த்தர் அவரிடம் சொன்னார்.
ஜோசப் மீண்டும் தேவனிடம் கேட்கும்படி மார்ட்டின் கேட்டுக் கொண்டார். ஜோசப் அவ்வாறு செய்தார், பதில் ஆச்சரியப்படுவதற்கில்லாமல் அதேதான். ஆனால் மார்ட்டின் ஜோசப்பிடம் மூன்றாவது முறை கேட்கும்படி கெஞ்சினார், ஜோசப் அவ்வாறு செய்தார். இந்த முறை தேவன், “இல்லை” என்று சொல்லவில்லை. மாறாக, தேவன் சொன்னது போல் இருந்தது, “ஜோசப், இதைப்பற்றி நான் எப்படி உணர்கிறேன் என்று உனக்குத் தெரியும், ஆனால் நீ தேர்ந்தெடுக்க உனக்கு சுயாதீனம் உள்ளது.” தடையிலிருந்து விடுபட்ட ஜோசப், 116 கையெழுத்துப் பக்கங்களை எடுத்து சில குடும்ப உறுப்பினர்களுக்குக் காட்ட மார்ட்டினை அனுமதிக்க முடிவு செய்தார். மொழிபெயர்க்கப்பட்ட பக்கங்கள் தொலைந்துவிட்டன, மீட்கப்படவில்லை. கர்த்தர் ஜோசப்பைக் கடுமையாகக் கடிந்துகொண்டார்.24
மார்மன் புஸ்தக தீர்க்கதரிசி யாக்கோபு கற்பித்தது போல் ஜோசப் கற்றுக்கொண்டார்: “கர்த்தருக்கு ஆலோசனை கூற நாடாமல், அவரின் கரத்திலிருந்து ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளத் தொடங்குங்கள். ஏனெனில் … அவர் ஞானத்தில் ஆலோசிக்கிறார்.”25 நாம் கேட்கக்கூடாதவற்றைக் கேட்கும்போது துரதிர்ஷ்டவசமான காரியங்கள் நடக்கும் என்று யாக்கோபு எச்சரித்தான். எருசலேமில் உள்ள மக்கள் “அவர்களால் [புரிந்து கொள்ள முடியாத] காரியங்களையே நாடுகிறார்கள்,” “குறிக்கு அப்பால்” பார்ப்பார்கள், மேலும் உலக இரட்சகரைக் கண்டும் காணாமல் இருப்பார்கள் என்று அவர் முன்னறிவித்தார்.26 அவர்கள் கேட்காததையும் புரிந்து கொள்ள முடியாததையும் கேட்டதால் அவர்கள் தடுமாறினர்.
உங்கள் காரியத்திற்கு ஏற்றவாறு தனிப்பட்ட வெளிப்பாட்டை நீங்கள் பெற்றிருந்தால், மற்றும் சூழ்நிலைகள் மாறவில்லை என்றால், தேவன் உங்கள் கேள்விக்கு ஏற்கனவே பதிலளித்துள்ளார்.27 உதாரணமாக, சில சமயங்களில் நாம் மன்னிக்கப்பட்டுவிட்டோம் என்ற உறுதியை மீண்டும் மீண்டும் கேட்கிறோம். நாம் மனந்திரும்பி, மனசாட்சியின் மகிழ்ச்சியினாலும், மனசாட்சியின் சமாதானத்தாலும் நிரப்பப்பட்டு, நம்முடைய பாவங்களின் மன்னிப்பைப் பெற்றிருந்தால், நாம் மீண்டும் கேட்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் தேவன் ஏற்கனவே அளித்த பதிலை நம்பலாம்.28
தேவன் முந்தைய பதில்களை நாம் நம்பினாலும், மேலும் தனிப்பட்ட வெளிப்பாட்டிற்கு நாம் திறந்திருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, வாழ்க்கையின் சில இடங்கள் நிறுத்தப்படாத விமானம் மூலம் அடையப்படுகின்றன. தனிப்பட்ட வெளிப்பாடு “வரிக்கு வரி மற்றும் கட்டளையின் மீது கட்டளையாக” பெறப்படலாம் என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும்,”29 வெளிப்படுத்தப்பட்ட திசையானது மற்றும் அடிக்கடி அதிகரிக்கலாம்.30
தனிப்பட்ட வெளிப்பாட்டிற்கான கட்டமைப்பின் கூறுகள் ஒன்றுக்கு மேல் ஒன்றாக மற்றும் ஒன்றுக்கொன்று வலுவூட்டுகின்றன. ஆனால் அந்த கட்டமைப்பிற்குள், உடன்படிக்கை பாதையில் நாம் உயரவும் வேகத்தை தக்கவைக்கவும் தேவையான அனைத்தையும் பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்த முடியும். இவ்வாறு பரலோக பிதா நாம் என்னவாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறாரோ அதுவாக ஆக இயேசு கிறிஸ்துவின் வல்லமையால் நாம் ஆசீர்வதிக்கப்படலாம். தேவன் வெளிப்படுத்தியதைப் புரிந்துகொண்டு, தம்முடைய நியமிக்கப்பட்ட தீர்க்கதரிசிகள் மூலம் அவர் வழங்கிய வேதங்கள் மற்றும் கட்டளைகளுக்கு இணங்க, உங்கள் சொந்த வரம்பு மற்றும் சுயாதீனத்திற்கு உட்பட்டு, உங்களுக்காக தனிப்பட்ட வெளிப்பாட்டைக் கோருவதற்கான நம்பிக்கையைப் பெற உங்களை அழைக்கிறேன். நீங்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குக் காட்டுவார், என்பதை நான் அறிவேன்.31 இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.