ஆலய தரிப்பித்தல் பற்றி

தேவனிடமிருந்து உங்கள் தனிப்பட்ட வரம்

தலைவர் ரசல் எம். நெல்சன் நமக்கு நினைவூட்டினார், “ஒவ்வொரு நிகழ்ச்சியும், ஒவ்வொரு பாடமும், சபையில் நாம் செய்யும் அனைத்தும், கர்த்தரையும் அவருடைய பரிசுத்த வீட்டையும் சுட்டிக்காட்டுகின்றன. சுவிசேஷத்தை அறிவிப்பதற்கும், பரிசுத்தவான்களை பரிபூரணப்படுத்துவதற்கும், மரித்தவர்களை மீட்பதற்கும் நாம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் ஆலயத்திற்கு இட்டுச் செல்கின்றன. ஒவ்வொரு பரிசுத்த ஆலயமும் சபையில் நாம் அங்கம் வகிக்கும் அடையாளமாகவும், மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையில் நமது நம்பிக்கையின் அடையாளமாகவும், நமக்கும் நம் குடும்பங்களுக்கும் நித்திய மகிமையை நோக்கிய பரிசுத்தப் படியாகவும் உள்ளது. (“Personal Preparation for Temple Blessings,” Ensign, May 2001, 32; Liahona, July 2001, 37).

ஆலயத்தில் மட்டுமே நாம் தேவனுடைய ராஜ்யத்தில் நித்திய ஜீவனின் வாக்குறுதியை உள்ளடக்கிய பரிசுத்த உடன்படிக்கைகளை செய்ய முடியும், இது “தேவனின் அனைத்து வரங்களிலும் பெரியது” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 14:7). ஆலய நியமங்கள் மற்றும் உடன்படிக்கைகள் எப்போதும் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் ஒரு பகுதியாகும். அவை தெய்வீக உறவைப் பலப்படுத்தி, இரட்சகர், அவருடைய பாவநிவாரணம் மற்றும் அவரைப் பின்பற்றுவதற்கான நமது அர்ப்பணிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்த உதவுகின்றன.

உங்களது ஆலய தரிப்பித்தலைப் பெறுவது மிகவும் தனிப்பட்ட அனுபவம். அதற்கு ஆயத்தமாவது அதை மேலும் அர்த்தமுள்ளதாக்கும். சபையின் பல உறுப்பினர்கள் ஒரு ஊழியம் அல்லது திருமணத்திற்கு முன் தங்கள் தரிப்பித்தலைப் பெறுகிறார்கள். மற்றவர்களுக்கு உடன்படிக்கையின் பாதையில் முன்னேறுவதற்கான வலுவான ஆசை உள்ளது. ஆயர்கள் மற்றும் கிளைத் தலைவர்கள் தங்கள் தரிப்பித்தலைப் பெற விரும்பும் வயதுவந்த உறுப்பினர்களை ஊக்குவித்து ஆலோசனை வழங்க வேண்டும். உங்கள் தரிப்பித்தல் மற்றொரு படியை விட அதிகம் என்பதை அறிவது முக்கியம்; இது உங்கள் நித்திய பயணத்தின் இன்றியமையாத மற்றும் மகிமைமிகு பகுதியாகும்.

ஒரு தரிப்பித்தல் உண்மையாகவே “வரமாகும்.” இந்த நிலையில், ஆலய தரிப்பித்தல் என்பது நம் ஒவ்வொருவருக்கும் தேவனிடமிருந்து கிடைத்த பரிசுத்த ஆசீர்வாதமாகும். அவருடைய வழியிலும் அவருடைய பரிசுத்த ஆலயத்திலும் மட்டுமே தரிப்பித்தலைப் பெற முடியும். ஆலய தரிப்பித்தல் மூலம் நீங்கள் பெறும் சில வரங்கள்:

  1. கர்த்தரின் நோக்கங்கள் மற்றும் போதனைகள் பற்றிய அதிக அறிவு.

  2. தேவன் நாம் எதைச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறாரோ அதையெல்லாம் செய்யும் வல்லமை.

  3. நாம் கர்த்தருக்கும், நம் குடும்பங்களுக்கும், மற்றவர்களுக்கும் சேவை செய்யும்போது தெய்வீக வழிகாட்டலும் பாதுகாப்பும்.

  4. அதிகரித்த நம்பிக்கை, ஆறுதல் மற்றும் சமாதானம்.

  5. வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்கள் இப்போதும் என்றென்றும்.

குறைந்தபட்சம் 18 வயது நிரம்பிய சபை உறுப்பினர்கள் (இன்னும் உயர்நிலைப் பள்ளி அல்லது மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லாதவர்கள்) அவர்கள் விசுவாசமாகவும் தயாராகவும் இருந்தால், அவர்களின் ஆலய தரிப்பித்தலைப் பெறலாம். ஆலய நியமங்கள் மற்றும் உடன்படிக்கைகள் பரிசுத்தமானவை மற்றும் நித்திய முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால், அவற்றைப் பெற விரும்புவோருக்கு கர்த்தர் தரங்களை அமைத்துள்ளார். உறுப்பினர்கள் தேவனுடன் உடன்படிக்கை செய்யும்போது அவர்கள் ஏற்றுக்கொள்ளும் பரிசுத்தமான கடமைகளையும் புரிந்து கொள்ள வேண்டும்.

இயேசு கிறிஸ்துவின் போதனைகளைப் பின்பற்றுவதும், ஞானஸ்நானத்தினபோது நீங்கள் செய்த உடன்படிக்கைகளைக் கடைபிடிப்பதும் உங்கள் தரிப்பித்தலைப் பெற ஆயத்தமாவதில் அடங்கும். நீங்கள் ஒவ்வொரு முறையும் திருவிருந்தில் பங்குபெறும் போது அந்த உடன்படிக்கையை புதுப்பிக்கிறீர்கள். ஆலய பரிந்துரை நேர்காணலுக்காக உங்கள் ஆயரையும், பின்னர் உங்கள் பிணையத் தலைவரையும் சந்திக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். நேர்காணலின் போது கர்த்தரின் வீட்டிற்குள் பிரவேசிப்பதற்கான தரநிலைகள் விவாதிக்கப்படும். இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம், அவருடைய ஜீவிக்கும் தீர்க்கதரிசிகள் மற்றும் அவருடைய மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபை பற்றிய உங்கள் சாட்சியைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கும் கேள்விகளை அவர்கள் உங்களிடம் கேட்பார்கள். தேவனின் கட்டளைகளைக் கடைபிடிக்கவும் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றவும் நீங்கள் முயற்சி செய்கிறீர்கள் என்பதை உங்கள் பதில்கள் உறுதிப்படுத்தும். உங்கள் பிணையத் தலைவர் உங்களுக்கு ஒரு ஆலய பரிந்துரையை வழங்க முடியும், அது நீங்கள் ஆலயத்துக்குள் நுழைந்து உங்கள் தரிப்பித்தலைப் பெற அனுமதிக்கும்.

தரிப்பித்தல் பற்றிய கண்ணோட்டம்

நீங்கள் சபையில் சேர்ந்தபோது, நீங்கள் இரண்டு நியமங்களைப் பெற்றீர்கள்—ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தல். அதேபோல், ஆலய தரிப்பித்தலும் இரண்டு பகுதிகளாக பெறப்படுகிறது.

முதல் பகுதியில், நீங்கள் தனிப்பட்ட முறையில் மற்றும் தனித்தனியாக ஆயத்த நியமங்கள் என்று அழைக்கப்படுவதைப் பெறுவீர்கள். இந்த நியமங்களில் உங்கள் தெய்வீக பாரம்பரியம் மற்றும் திறமை பற்றிய சிறப்பு ஆசீர்வாதங்கள் அடங்கும். இந்த நியமங்களின் ஒரு பகுதியாக, பரிசுத்த ஆலய வஸ்திரம் அணிய உங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு, உங்கள் வாழ்நாள் முழுவதும் அதை அணிய அறிவுறுத்தப்படும்.

இரண்டாவது பகுதியில், குழு அமைப்பில் உங்களின் எஞ்சிய தரிப்பித்தலைப் பெறுவீர்கள். இது ஆலயத்துக்கு வரும் மற்றவர்களுடன் ஒரு அறிவுறுத்தல் அறையில் நடைபெறுகிறது. சில காணொளிகள் மூலமாகவும், சில ஆலய நிர்வாகிகளால் தரிப்பித்தலாக வழங்கப்படுகிறது. நியமத்தின் போது, இரட்சிப்பின் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் நிகழ்வுகள் வழங்கப்படுகின்றன. உலகின் சிருஷ்டிப்பு, ஆதாம் மற்றும் ஏவாளின் வீழ்ச்சி, இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி, மதமாறுபாடு மற்றும் மறுஸ்தாபிதம் ஆகியவை அடங்கும். எல்லா மக்களும் கர்த்தரின் பிரசன்னத்திற்குத் திரும்புவதற்கான வழியைப் பற்றியும் நீங்கள் மேலும் அறிந்து கொள்வீர்கள்.

கில்பர்ட் அரிசோனா ஆலயம், தரிப்பித்தல் அறை

ஆசீர்வாத நியமத்தின் போது, தேவனுடன் சில உடன்படிக்கைகளைச் செய்ய நீங்கள் அழைக்கப்படுவீர்கள். இந்த உடன்படிக்கைகள்:

  • கீழ்ப்படிதல் நியாயப்பிரமாணம், இதில் தேவனின் கட்டளைகளைக் கடைப்பிடிக்க முயற்சி செய்வதும் அடங்கும்.

  • தியாகத்தின் நியாயப்பிரமாணம், அதாவது கர்த்தரின் பணியை ஆதரிப்பதற்கு நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வது மற்றும் நொருங்குண்ட இருதயத்துடனும் நருங்குண்ட ஆவியுடனும் மனந்திரும்புதல்.

  • சுவிசேஷத்தின் நியாயப்பிரமாணம், இது அவர் பூமியில் இருந்தபோது போதித்த உயர்ந்த நியாயப்பிரமாணம்.

  • கற்புடைமை நியாயப்பிரமாணம், அதாவது தேவனின் நியாயப்பிரமாணத்தின்படி நியாயப்பூர்வமாகவும் சட்டப்பூர்வமாகவும் திருமணம் செய்துகொண்ட நபருடன் மட்டுமே நாம் உடலுறவு கொள்கிறோம்.

  • பரிசுத்தப்படுத்தும் நியாயப்பிரமாணம், அதாவது பூமியில் இயேசு கிறிஸ்துவின் சபையை கட்டியெழுப்ப நமது நேரம், திறமைகள் மற்றும் கர்த்தர் நமக்கு அருளிய அனைத்தையும் அர்ப்பணிப்பது.

தேவனுடனான அனைத்து உடன்படிக்கைகளும் பிணைக்கப்பட வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டவை. நீங்கள் உங்கள் உடன்படிக்கைகளைக் கடைபிடித்து, உங்கள் குறைபாடுகளிலிருந்து மனந்திரும்பும்போது, அவருடனான உங்கள் உறவு பலப்படுத்தப்படுகிறது, மேலும் அவர் உங்களை முழுமையாக ஆசீர்வதிப்பார். இரட்சகருடனான உங்கள் உறவும் நெருக்கமாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாறும். உடன்படிக்கையைக் கடைப்பிடிப்பவர்கள் தேவனின் வல்லமையையும், நிலையான அன்பு, சமாதானம், ஆறுதல் மற்றும் மகிழ்ச்சியையும் பெற அதிகமாக அணுகுகிறார்கள். தங்களுடைய உடன்படிக்கைகளைக் கடைபிடிப்பவர்கள் அவருடன் என்றென்றும் வாழத் திரும்புவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள் என்று தேவன் வாக்குறுதி அளிக்கிறார்.

தலைவர் ரசல் எம். நெல்சன் விளக்குகிறார், “தேவனுடன் ஒரு உடன்படிக்கை செய்வது அவருடனான நமது உறவை என்றென்றும் மாற்றுகிறது. இது கூடுதல் அளவு அன்பு மற்றும் இரக்கத்துடன் நம்மை ஆசீர்வதிக்கிறது. இது நாம் யார் என்பதையும், நாம் என்னவாக முடியுமோ அதுவாக மாறுவதற்கு தேவன் நமக்கு எப்படி உதவுவார் என்பதையும் பாதிக்கிறது.” தம்முடன் உடன்படிக்கை செய்தவர்களுக்கான தேவனின் அன்பின் காரணமாக, “அவர் அவர்களை நேசிப்பார். அவர் அவர்களுடன் தொடர்ந்து ஊழியம்செய்வார் மாறுவதற்கான வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்குவார். அவர்கள் மனந்திரும்பும்போது அவர்களை அவர் மன்னிப்பார். அவர்கள் வழிதவறிச் சென்றால், தம்மிடம் திரும்பி வருவதற்கு அவர் அவர்களுக்கு உதவுவார்” (“The Everlasting Covenant,” Liahona, October 2022).

தரிப்பித்தலின் முடிவில், பங்கேற்பாளர்கள் சிலஸ்டியல் அறைக்குள் நுழையும்போது அடையாளமாக கர்த்தரின் பிரசன்னத்திற்குத் திரும்புகிறார்கள். அங்கு நீங்கள் சிந்திக்கவும், ஜெபிக்கவும், வேதவசனங்களைப் படிக்கவும் அல்லது அமைதியாக உங்கள் எண்ணங்களை குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளவும் நேரம் எடுக்கலாம். இது சமாதானத்தின் இடமாகும், அங்கு நீங்கள் ஆறுதலையும் தெய்வீக வழிகாட்டுதலையும் காணலாம்.

தரிப்பித்தல் சடங்கில் பங்கேற்கும் அனைவரும் கற்பிக்கப்படுவதில் கவனம் செலுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள். பரிசுத்த ஆவியால் கற்பிக்கப்படும் நோக்கத்துடன் நீங்கள் செல்லும்போது உங்கள் அனுபவம் மிகவும் நிறைவாக இருக்கும். எல்லாவற்றையும் முதல்முறையாக நினைவில் வைத்துக்கொள்வது அல்லது புரிந்துகொள்வது பற்றி கவலைப்பட வேண்டாம். ஆலயப் பணியாளர்கள் உங்களுக்கு உதவவும் துணைநிற்கவும் எப்போதும் இருப்பார்கள். இது ஒரு சோதனை அல்ல, ஆனால் பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவுடன் நெருக்கமாக உணர ஒரு வாய்ப்பு. கர்த்தரின் வீட்டில் இருப்பதன் மகிழ்ச்சி மற்றும் நீங்கள் பெறும் ஆவிக்குரிய எண்ணங்கள் மீது கவனம் செலுத்துங்கள்.

போர்ட் லாடர்டேல் புளோரிடா ஆலயம், தரிப்பித்தல் அறை

கர்த்தரிடம் நெருங்கி வாருங்கள்

ஆலய தரிப்பித்தல் என்பது இரட்சிப்பு மற்றும் பரலோக பிதாவிடம் திரும்புவதற்கு அவசியமான ஒரு படியாகும். இது இயேசு கிறிஸ்துவை நெருங்கி வருவதற்கான ஒரு நேரமாகும்—அவரை நன்றாக அறிந்து கொள்ளவும், அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றவும். நிச்சயமாக, தரிப்பித்தலின் வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்கள் அனைத்தும் நம் விசுவாசத்தைப் பொறுத்தது.

உங்கள் சொந்த தரிப்பித்தலைப் பெற்ற பிறகு, உங்களால் முடிந்தவரை அடிக்கடி ஆலயத்துக்கு திரும்புங்கள். நீங்கள் அவ்வாறு செய்யும்போது, முன்னோர்கள் மற்றும் மறைந்த பிறருக்கான ஆயத்தம் மற்றும் தரிப்பித்தல் நியமங்களில் பங்கேற்கலாம். ஆலயத்தில் செய்யப்படும் மற்ற எல்லா நியமங்களைப் போலவே, இறந்தவர்களுக்கும் உங்கள் சேவை தெரியும், மேலும் நீங்கள் அவர்களுக்குச் செய்ததை ஏற்கலாமா வேண்டாமா என்பதைத் தேர்வு செய்யலாம்.

உங்கள் பங்கேற்பு ஆசீர்வாதங்கள், அறிவுறுத்தல்கள் மற்றும் உடன்படிக்கைகளை மீண்டும் கேட்க உங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. நீங்கள் ஆலயம் செல்லும்போது, இரட்சிப்பின் திட்டத்துடன் தொடர்புடைய தரிப்பித்தலின் பல வழிகளையும் மற்றும் உங்கள் வாழ்க்கையை ஆசீர்வதிப்பதையும்நீங்கள் கவனிப்பீர்கள் நீங்கள் கற்றுக்கொள்வதும் உணருவதும் காலப்போக்கில் உங்களுக்கு தெளிவாகவும் மதிப்புமிக்கதாகவும் மாறும். நீங்கள் செல்லும்போது, தேவனின் அன்பை நீங்கள் உணர்வீர்கள், மேலும் முக்கியமானவற்றை நினைவுபடுத்தப்படுவீர்கள்.