வேதங்கள்
மோசே 5


அதிகாரம் 5

(ஜூன் – அக்டோபர் 1830)

ஆதாமும் ஏவாளும் பிள்ளைகளைப் பெற்றார்கள் – ஆதாம் பலி செலுத்தி தேவனுக்கு ஆராதனை செய்தான் – காயீனும் ஆபேலும் பிறந்தார்கள் – காயீன் கலகம் செய்து தேவனைவிட சாத்தானை அதிகமாய் நேசித்து, கேடானான் – கொலையும் துன்மார்க்கமும் பரவியது – ஆரம்பத்திலிருந்தே சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது.

1 கர்த்தராகிய நான் அவனுக்கு கட்டளையிட்டதைப்போல, சகல நாட்டு மிருகங்கள் மேல் ஆளுகை செலுத்தவும், தன்னுடைய நெற்றி வேர்வையால் தன்னுடைய அப்பத்தைப் புசிக்கவும் ஆதாம் மண்ணைப் பண்படுத்த ஆரம்பிக்கும்படிக்கு, தேவனாகிய கர்த்தராகிய நான் அவர்களை துரத்திவிட்டேன், அவனுடைய மனைவியான ஏவாளும் அவனுடன் பிரயாசப்பட்டாள்.

2 ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான், அவள் அவனுக்கு குமாரர்களையும் குமாரத்திகளையும் பெற்றாள், அவர்கள் பூமியில் பலுகிப் பெருகினார்கள்.

3 அதுமுதல் நிலத்தைப் பண்படுத்தவும் மந்தைகளை மேய்க்கவும் ஆதாமின் குமாரர்களும் குமாரத்திகளும் தேசத்தில் இரண்டு இரண்டாகப் பிரிந்தார்கள், அவர்களும் குமாரர்களையும் குமாரத்திகளையும் பெற்றார்கள்.

4 ஆதாமும் அவனுடைய மனைவியான ஏவாளும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு ஏதேன் தோட்டத்திற்கு போகும் வழியிலிருந்து அவர்களோடு பேசிக்கொண்டிருந்த கர்த்தரின் சத்தத்தை அவர்கள் கேட்டார்கள், அவரை அவர்கள் காணவில்லை, ஏனெனில் அவருடைய பிரசன்னத்திலிருந்து அவர்கள் தடுக்கப்பட்டிருந்தார்கள்.

5 தங்களுடைய தேவனாகிய கர்த்தரை தொழுது கொள்ள வேண்டுமென்றும், தங்களுடைய மந்தைகளின் முதற்பலன்களை கர்த்தருக்கு காணிக்கையாக பலி செலுத்தவேண்டுமெனவும் அவர்களுக்கு அவர் கட்டளைகளைக் கொடுத்தார். ஆதாம் கர்த்தரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தான்.

6 அநேக நாட்களுக்குப் பின் கர்த்தரின் தூதன் ஆதாமுக்குத் தோன்றி சொன்னான்: நீ ஏன் கர்த்தருக்கு பலிகளைச் செலுத்துகிறாய்? ஆதாம் அவனுக்குச் சொன்னான்: கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டதைத்தவிர வேறெதையும் நான் அறியேன்.

7 பின்னர், இந்தக் காரியம் கிருபையும் சத்தியமும் நிறைந்த பிதாவின் ஒரேபேறானவரின் பலிக்கு ஒத்ததாயிருக்கிறது எனச் சொல்லி தூதன் பேசினான்.

8 ஆகவே, நீ செய்கிற காரியம் யாவையும் குமாரனின் நாமத்தில் நீ செய்வாயாக, நீ மனந்திரும்பி, என்றென்றைக்குமாக குமாரனின் நாமத்தில் தேவனை தொழுது கொள்வாயாக.

9 ஆரம்பத்திலிருந்தும் அதுமுதலும் என்றென்றைக்கும் நீயும், முழுமனுக்குலமும், அநேகரும் விழும்போது மீட்கப்பட நானே, பிதாவின் ஒரேபேறானவர் எனச் சொல்லி பிதாவையும் குமாரனையும் சாட்சி கொடுக்கிற பரிசுத்த ஆவி அந்த நாளில் ஆதாமின்மீது இறங்கியது.

10 தேவனின் நாமம் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக, ஏனெனில் என்னுடைய மீறுதலினிமித்தம் என்னுடைய கண்கள் திறக்கப்பட்டன, இம்மையில் எனக்கு சந்தோஷம் உண்டாயிருந்து மீண்டும் மாம்சத்தில் நான் தேவனைக் காண்பேன் எனச் சொல்லி அந்த நாளில் ஆதாம் தேவனை ஸ்தோத்தரித்து, நிறைக்கப்பட்டு, பூமியின் சகல குடும்பங்களைக் குறித்து தீர்க்கதரிசனமுரைக்க ஆரம்பித்தான்.

11 அவனுடைய மனைவியான ஏவாள் இந்தக் காரியங்கள் எல்லாவற்றையும் குறித்து கேள்விப்பட்டு சந்தோஷப்பட்டுச் சொன்னாள்: எங்களுடைய மீறுதல் இல்லாமல் இருந்திருந்தால் எங்களுக்கு ஒருபோதும் ஒரு சந்ததி இருந்திருக்காது, நன்மை தீமையை நாங்கள் ஒருபோதும் அறிந்திருக்கமாட்டோம், எங்களுடைய மீட்பின் சந்தோஷத்தையும், கீழ்ப்படிபவர்கள் யாவருக்கும் தேவன் கொடுக்கிற நித்திய ஜீவனையும் அறிந்திருக்கமாட்டோம்.

12 ஆதாமும் ஏவாளும் தேவனின் நாமத்தை ஸ்தோத்தரித்தார்கள், சகல காரியங்களையும் தங்களுடைய குமாரர்களும் குமாரத்திகளும் அறிந்து கொள்ளும்படிச் செய்தார்கள்.

13 நானும் தேவனின் ஒரு குமாரனே எனச் சொல்லிக்கொண்டு சாத்தான் அவர்களுக்கு மத்தியிலே வந்தான்; நம்பாதேயுங்கள் எனச்சொல்லி அவர்களுக்கு அவன் கட்டளையிட்டான், அவர்கள் அதை நம்பாதிருந்து தேவனைவிட சாத்தானை அவர்கள் நேசித்தார்கள். அந்த நேரத்திலிருந்து மனுஷர்கள் மாம்ச சிந்தையுடையவராயும், ஜென்ம சுபாவத்தினராயும், பேய்க்குணம் படைத்தவர்களுமானார்கள்.

14 பரிசுத்த ஆவியினால் எங்கிலுமுள்ள மனுஷர்களை தேவனாகிய கர்த்தர் அழைத்து, அவர்கள் மனந்திரும்பவேண்டுமென அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார்;

15 அநேகர் குமாரனில் நம்பிக்கை வைக்கிற அளவில் தங்களுடைய பாவங்களுக்காக மனந்திரும்புகிற அவர்கள் இரட்சிக்கப்படவேண்டும்; அநேகர் குமாரனில் நம்பிக்கை வைக்காதிருந்து மனந்திரும்பாதிருக்கிற அளவில் ஆக்கினைக்குள்ளாவார்கள்; உறுதியான கட்டளையில் தேவனின் வாயிலிருந்து வார்த்தைகள் வெளியே வந்தன; ஆகவே அவைகள் நிறைவேற்றப்படவேண்டும்.

16 ஆதாமும் அவனுடைய மனைவியாகிய ஏவாளும் தேவனைத் தொழுது கொள்வதை நிறுத்தவில்லை. ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான், அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள்; ஆகவே அவன் அவருடைய வார்த்தைகளைத் தள்ளமாட்டான். ஆனால் இதோ, காயீன், அவரை நான் அறிந்துகொள்ளவேண்டுமென்கிற கர்த்தர் யார் எனச் சொல்லி செவிகொடுக்கவில்லை.

17 பின்பு அவள் அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள். ஆபேல் கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடுத்தான். ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான்.

18 தேவனைவிட சாத்தானை காயீன் அதிகமாய் நேசித்தான். கர்த்தருக்கு ஒரு பலியைச் செலுத்து எனச் சொல்லி சாத்தான் அவனுக்குக் கட்டளையிட்டான்.

19 சிலநாள் சென்றபின்பு, காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான்.

20 ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளில் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டு வந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கீகரித்தார்;

21 காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கீகரிக்கவில்லை. இப்பொழுது சாத்தான் இதை அறிந்தான், அது அவனை சந்தோஷப்படுத்தியது. அப்பொழுது காயீனுக்கு எரிச்சல் உண்டாகி, அவன் முகநாடி வேறுபட்டது.

22 அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது?

23 நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ, நீ நன்மை செய்யாதிருந்தால் பாவம் வாசற்படியிலே படுத்திருக்கும், சாத்தானின் ஆசை உன்னப் பற்றியிருக்கும், என்னுடைய கட்டளைகளுக்கு நீ செவிகொடுத்தால் மட்டுமே, நான் உன்னை விடுவிப்பேன், அவனுடைய ஆசையின்படி அது உனக்கிருக்கும். நீ அவனை ஆண்டுகொள்வாய் என்றார்;

24 ஏனெனில், இந்த நேரத்திலிருந்து நீ பொய்களின் தகப்பனாயிருப்பாய்; நீ கேடானவன் என அழைக்கப்படுவாய்; ஏனெனில் நீயும்கூட உலகத் தோற்றத்திற்கு முன்பேயிருந்தாய்.

25 இந்த அருவருப்புகள் காயீனிடமிருந்து வந்தன என வரப்போகிற நேரத்தில் சொல்லப்படும்; ஏனெனில் தேவனிடமிருந்து வந்த மகத்தான ஆலோசனையை அவன் மறுத்தான்; நீ மனந்திரும்பாதவரை நான் உனக்குக் கொடுக்கிற இது ஒரு சாபமாயிருக்கும்.

26 காயீன் எரிச்சலடைந்து இனியும் கர்த்தரின் சத்தத்திற்கோ, கர்த்தருக்கு முன்பாக பரிசுத்தத்தில் நடந்த அவனுடைய சகோதரனாகிய ஆபேலுடைய சத்தத்திற்கோ செவிகொடுக்கவில்லை.

27 காயீனுக்காகவும் அவனுடைய சகோதரருக்காகவும் கர்த்தருக்கு முன்பாக ஆதாமும் அவனுடைய மனைவியும் துக்கித்தார்கள்.

28 அவனுடைய சகோதரரின் குமாரத்திகளில் ஒருத்தியை காயீன் தனது மனைவியாக்கிக்கொண்டு தேவனைவிட சாத்தானை அவர்கள் அதிகமாய் நேசித்தார்கள்.

29 சாத்தான் காயீனிடம் சொன்னான்: உன்னுடைய தொண்டையினால் எனக்கு ஆணையிட்டுக்கொடு, நீ அதைச் சொன்னால் நீ சாவாய்; அவர்கள் கூறாதிருக்கும்படியாக, ஜீவிக்கிற தேவனால் உன்னுடைய சகோதரர் தங்களுடைய தலைகள்மேல் ஆணையிடுகிறார்கள்; ஏனெனில் அதை அவர்கள் கூறினால் அவர்கள் சாகவே சாவார்கள்; இதை உன்னுடைய தகப்பன் அறியாதிருப்பானாக; இந்த நாளில் உன்னுடைய சகோதரனாகிய ஆபேலை உன்னுடைய கைகளில் ஒப்படைப்பேன்.

30 தன்னுடைய கட்டளைகளின்படி அவன் செய்யவேண்டுமென சாத்தான் காயீனுக்கு ஆணையிட்டுக் கொடுத்தான். இந்தக் காரியங்கள் அனைத்தும் இரகசியமாக செய்யப்பட்டது.

31 காயீன் சொன்னான்: நான் கொலை செய்து பலனடையும்படியாக இந்த பெரும் இரகசியத்திற்கு அதிபதியான நான் உண்மையிலே மாஹன். ஆகவே காயீன், மாஹனின் எஜமானன் என்றழைக்கப்பட்டு, அவனுடைய துன்மார்க்கத்தில் அவன் மேட்டிமையடைந்தான்.

32 காயீன் வயல்வெளிக்குச் சென்று, தன் சகோதரனாகிய ஆபேலோடே பேசினான். அவர்கள் வயல்வெளியில் இருக்கும் சமயத்தில், காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி, அவனைக் கொலை செய்தான்.

33 நான் சுதந்தரவாளி, என்னுடைய சகோதரனின் மந்தை நிச்சயமாக என்னுடைய கைகளில் விழுந்தது எனச் சொல்லி அவன் செய்ததில் காயீன் பெருமைப்பட்டான்.

34 கர்த்தர் காயீனை நோக்கி: உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்றார்; அதற்கு அவன் நான் அறியேன்; என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்றான்.

35 அதற்கு கர்த்தர், நீ என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது.

36 இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலிருந்து வாங்கிக்கொள்ள தன் வாயைத் திறந்த இந்தப் பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய்.

37 நீ நிலத்தைப் பயிரிடும்போது, அது தன் பலனை இனி உனக்குக் கொடாது. நீ பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பாய் என்றார்.

38 அப்பொழுது காயீன் கர்த்தரை நோக்கி: என்னுடைய சகோதரனின் மந்தையினிமித்தம் சாத்தான் என்னை சோதித்தான். நான் எரிச்சலோடிருந்தேன்; ஏனெனில் அவனுடைய காணிக்கையை நீர் அங்கீகரித்தீர், என்னுடையதையல்ல; எனக்கு இட்ட தண்டனை என்னால் சகிக்க முடியாத அளவிற்கு அதிகமாயிருக்கிறது.

39 இன்று என்னை இந்தத் தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர், நான் உமது சமுகத்துக்கு விலகி மறைந்து, பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பேன்; என்னைக் கண்டுபிடிக்கிறவன் என்னுடைய அக்கிரமங்களினிமித்தம் என்னைக் கொன்றுபோடுவானே, ஏனெனில் இந்தக்காரியங்கள் கர்த்தரிடமிருந்து மறைக்கப்படவில்லை என்றான்.

40 அப்பொழுது கர்த்தராகிய நான் அவனை நோக்கி: காயீனைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும் என்று சொல்லி, காயீனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக் கொன்றுபோடாதபடிக்குக் கர்த்தர் அவன்மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார்.

41 காயீன், கர்த்தரின் சந்நிதியை விட்டு தள்ளப்பட்டு, தன்னுடைய மனைவியோடும், தன்னுடைய அநேக சகோதரர்களோடும் ஏதேனுக்குக் கிழக்கான நோத் என்னும் தேசத்திலே குடியிருந்தான்.

42 காயீன் தன் மனைவியை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றாள், அவன் அநேக குமாரர்களையும் குமாரத்திகளையும் பெற்றான். அப்பொழுது அவன் ஒரு பட்டணத்தைக் கட்டி, அந்தப் பட்டணத்துக்குத் தன் குமாரனாகிய ஏனோக்குடைய பேரை இட்டான்.

43 ஏனோக்குக்கு ஈராத்தும் பிற குமாரர்களும் குமாரத்திகளும் பிறந்தார்கள். ஈராத் மெகுயவேலையும் பிற குமாரர்களையும் குமாரத்திகளையும் பெற்றான். மெகுயவேல் மெத்தூசவேலையும் பிற குமாரர்களையும் குமாரத்திகளையும் பெற்றான். மெத்தூசவேல் லாமேக்கைப் பெற்றான்.

44 லாமேக்கு இரண்டு ஸ்திரீகளை விவாகம் பண்ணினான்; ஒருத்திக்கு ஆதாள் என்று பேர், மற்றொருத்திக்குச் சில்லாள் என்று பேர்.

45 ஆதாள் யாபாலைப் பெற்றாள்; அவன் கூடாரங்களில் வாசம்பண்ணுகிறவர்களுக்கும் மந்தை மேய்க்கிறவர்களுக்கும் தகப்பனானான், அவன் சகோதரனுடைய பேர் யூபால், அவன் கின்னரக்காரர், நாகசுரக்காரர் யாவருக்கும் தகப்பனானான்.

46 சில்லாளும், தூபால் காயீனைப் பெற்றாள், அவன் பித்தளை இரும்பு முதலியவற்றின் தொழிலாளர் யாவருக்கும் ஆசாரியனானான். தூபால் காயீனுடைய சகோதரி நாமாள்.

47 லாமேக்கு தன் மனைவிகளைப் பார்த்து ஆதாளே, சில்லாளே, நான் சொல்வதைக் கேளுங்கள்; லாமேக்கின் மனைவிகளே, என் சத்தத்துக்குச் செவிகொடுங்கள்; எனக்குக் காயமுண்டாக ஒரு மனுஷனைக் கொன்றேன்; எனக்குத் தழும்புண்டாக ஒரு வாலிபனைக் கொலை செய்தேன்.

48 காயீனுக்கு ஏழு பழி சுமருமானால், லாமேக்குக்கு எழுபத்தேழு பழி சுமரும் என்றான்.

49 ஏனெனில் சாத்தானால் காயீனுக்கு நிர்வகிக்கப்பட்ட அந்த மகா இரகசியத்தின் எஜமானனான மாஹன், எஜமானனாக அவன் மாறிய காயீனின் வழக்கப்படி சாத்தானுடன் லாமேக்கு ஒரு உடன்படிக்கைக்குள் பிரவேசித்தான். அவர்களுடைய இரகசியத்தை அறிந்துகொண்டதில் ஏனோக்கின் குமாரனான ஈராத் அதை ஆதாமின் குமாரர்களுக்கு வெளிப்படுத்த ஆரம்பித்தான்;

50 ஆகவே லாமேக்கு கோபமடைந்தவனாய், பலனடைவதினிமித்தம் அவனுடைய சகோதரனாகிய ஆபேலைக் கொன்ற காயீனைப் போலல்லாமல், ஆணையினிமித்தம் அவனைக் கொன்றான்.

51 ஏனெனில் காயீனின் நாட்களிலிருந்து ஒரு இரகசிய சங்கமிருந்தது, அவர்களின் கிரியைகள் அந்தகாரத்திலிருந்தது, ஒவ்வொரு மனுஷனும் அவனுடைய சகோதரனென அவர்கள் அறிந்திருந்தார்கள்.

52 ஆகவே லாமேக்கையும் அவனுடைய வீட்டையும், சாத்தானுடன் உடன்படிக்கை செய்த அவர்கள் யாவரையும் கர்த்தர் சபித்தார்; ஏனெனில் அவர்கள் தேவனின் கட்டளைகளைக் கைக்கொள்ளவில்லை, அது தேவனுக்கு பிரியமாயிருக்கவில்லை, அவர் அவர்களுக்கு பணிவிடை செய்யவில்லை, அவர்களுடைய கிரியைகள் அருவருக்கத்தக்கதாக இருந்து, மனுபுத்திரர்கள் யாவருக்கும் மத்தியில் பரவ ஆரம்பித்தன. அது மனுபுத்திரர்களுக்கு மத்தியிலிருந்தது.

53 லாமேக்கு ரகசியத்தை தன்னுடைய மனைவிமார்களிடத்தில் பேசினான், அவர்கள் அவனுக்கு விரோதமாக கலகம் செய்து, இரக்கமில்லாமல் இந்தக் காரியங்களை வெளியில் அறிவித்ததால், மனுஷகுமாரத்திகளுக்கு மத்தியில் இந்த காரியங்கள் பேசப்படவில்லை;

54 ஆகவே லாமேக்கு அவமதிக்கப்பட்டு, துரத்தப்பட்டு, அவன் சாகாதிருக்கும்படியாக மனுபுத்திரர்களுக்கு மத்தியிலே வராதிருந்தான்.

55 அப்படியாக அந்தகாரத்தின் கிரியைகள் மனுபுத்திரர்களுக்கு மத்தியிலே மேற்கொள்ள ஆரம்பித்தன.

56 ஒரு கொடிய சாபத்தால் பூமியை தேவன் சபித்தார், துன்மார்க்கருடனும், அவர் உண்டாக்கின மனுபுத்திரர்கள் யாவர்மேலும் கோபமாயிருந்தார்;

57 ஏனெனில் அவருடைய சத்தத்திற்கு அவர்கள் செவிகொடுக்கவில்லை, உலகத்தோற்றத்திற்கு முன்பாகவே ஆயத்தம் செய்யப்பட்ட, காலத்தின் மத்தியிலே வருவேன் என்று அறிவித்தவருமான அவருடைய ஒரேபேறான குமாரனை அவர்கள் நம்பவில்லை.

58 இப்படியாக, ஆரம்பத்திலிருந்து, தேவ பிரசன்னத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த தூதர்களாலும், அவருடைய சொந்தக் குரலாலும், பரிசுத்த ஆவியின் வரத்தாலும் அறிவிக்கப்பட்டு சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட ஆரம்பமானது.

59 இப்படியாக ஒரு பரிசுத்த நியமத்தால் சகல காரியங்களும் ஆதாமுக்கு திடப்படுத்தப்பட்டன, சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டது, அதன் முடிவுவரை அது உலகத்திலிருக்கவேண்டுமென்ற ஒரு கட்டளை அனுப்பப்பட்டது; இது அப்படியே ஆயிற்று. ஆமென்.