“இயேசு கிறிஸ்துவில் ஒற்றுமைக்கான ஒரு மாதிரி,” லியஹோனா,அக், 2024.
லியஹோனா மாதாந்திர செய்தி, அக்டோபர் 2024
இயேசு கிறிஸ்துவில் ஒற்றுமை க்கான ஒரு மாதிரி
4 நேபியில் உள்ள ஜனங்களைப் போல இயேசு கிறிஸ்துவில் நாம் ஒன்றிணையும்போது, ஒன்றாக இருக்க வேண்டும் என்ற நமது விருப்பம் நமது வேறுபாடுகளைக் கடந்து மகிழ்ச்சிக்கு வழிவகுக்கிறது
உலகம் முழுவதும் கருத்து வேறுபாடுகளும் விவாதங்களும் எழுச்சி பெற்று அலையாகப் பரவிவரும் ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். தொழில்நுட்பத்தின் உதவியுடனும், இதயம் உறைந்து போன மக்களின் துணையுடனும், இந்த பிளவுபடுத்தும் வல்லமைகள் நம் இதயங்களை வெறுப்பால் நிரப்பவும், நம்முடைய தொடர்புகளை பிணக்குகளால் கெடுக்கவும் நம்மை அச்சுறுத்துகின்றன. சமுதாய உறவுகள் முறிகின்றன. போர்கள் உக்கிரம் ஆகின்றன.
இந்த பின்னணியில், இயேசு கிறிஸ்துவை உண்மையாக பின்பற்றுபவர்கள் சமாதானத்திற்காக ஏங்குகிறார்கள், இயேசு கிறிஸ்துவின் போதனைகளின் அடிப்படையில் நிறுவப்பட்ட ஒரு வித்தியாசமான சமூகத்தை உருவாக்க தீவிரமாக முயல்கிறார்கள். இந்த நோக்கத்திற்காக, கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டார்: “ஒன்றாயிருங்கள்;நீங்கள் ஒன்றாயில்லாவிட்டால் நீங்கள் என்னுடையவர்களல்ல.”(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 38:27). உண்மையில், ஒற்றுமை என்பது இயேசு கிறிஸ்துவின் உண்மையான சபையின் அடையாளமாகும்.
பிரிவினை மற்றும் பிணக்கின் வல்லமைகளுக்கு எதிராக நாம் எவ்வாறு செயல்பட வேண்டும்? நாம் ஒற்றுமையை அடைவது எப்படி?
அதிர்ஷ்டவசமாக, மார்மன் புஸ்தகத்தில் 4 நேபி நமக்கு ஒரு உதாரணத்தைக் கொடுக்கின்றது. இரட்சகர் ஜனங்களை சந்தித்து, அவர்களுக்குப் போதித்து, அவர்கள் மத்தியில் தனது சபையை ஸ்தாபித்த பின்பு அவர்கள் வாழ்ந்த விதத்தை இந்த அதிகாரம் சுருக்கமாக பதிவு செய்கிறது. இந்த ஜனங்கள் எவ்வாறு ஆனந்தமான, அமைதியான ஒற்றுமையை அடைந்தார்கள் என்பதை இந்த விவரம் காட்டுகிறது, மேலும் இதே ஒற்றுமையை நாமும் அடைய நாம் பின்பற்றக்கூடிய ஒரு மாதிரியை இது வழங்குகிறது.
மனமாற்றம்
4 நேபி 1:1இல் நாம் வாசிக்கிறோம்: “இயேசுவின் சீஷர்கள் சுற்றிலுமுள்ள தேசங்கள் அனைத்திலும் கிறிஸ்துவின் சபையை ஸ்தாபித்தார்கள். அவர்களிடத்தில் வந்த அநேகர், தங்கள் பாவங்களிலிருந்து உண்மையாகவே மனந்திரும்பினார்கள்.”
கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவைச் சுற்றி நாம் ஒன்றிணைகிறோம். ஒவ்வொரு நபரும் இயேசு கிறிஸ்துவையும், அவரது சுவிசேஷத்தையும், அவரது சபையையும் பற்றி கற்றுக்கொள்ளும்போது, பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு நபரின் இருதயத்திற்கும் சத்தியத்தின் சாட்சியை அளிக்கிறார். நாம் ஒவ்வொருவரும் மனந்திரும்புவதன் மூலம், இரட்சகர் மேல் விசுவாசம் வைத்து அவரைப் பின்பற்ற அவர் நமக்கு விடுத்த அழைப்பை ஏற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு ஒரு தனிநபரின் மனமாற்றத்தின்— சுயநல மற்றும் பாவ ஆசைகளிலிருந்து விலகி இரட்சகரை நோக்கி பயணம் தொடங்குகிறது. அவரே நமது விசுவாசத்தின் அஸ்திபாரம். நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு எண்ணத்திலும் அவரை நோக்கிப் பார்க்கும்போது ( கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6:36ஐ பார்க்கவும்), அவர் நமது வாழ்வில் ஒன்றிணைக்கும் ஆற்றலாக மாறுகிறார்.
உடன்படிக்கைகள்
சபைக்கு வந்து தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பியவர்கள் “இயேசுவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார்கள்; அவர்கள் பரிசுத்த ஆவியானவரையும் பெற்றுக் கொண்டார்கள்.” என்பதையும் 4 நேபியின் பதிவு தெரிவிக்கின்றது. (4 நேபி 1:1). அவர்கள் தேவனுடன் ஒரு உடன்படிக்கைக்குள்—ஒரு விசேஷித்த, பிணைக்கும் உறவிற்குள்—பிரவேசித்திருந்தார்கள்.
நாம் உடன்படிக்கைகளைச் செய்து கைக்கொள்ளும்போது, கர்த்தரின் நாமத்தை தனிநபர்களாக நம்மீது தரித்துக்கொள்கிறோம். கூடுதலாக, ஜனங்களாவும் நாம் அவருடைய நாமத்தை எடுத்துக்கொள்கிறோம். உடன்படிக்கைகளைச் செய்து, அவற்றைக் கைக்கொள்ள முயற்சி செய்கிற அனைவரும் கர்த்தரின் ஜனங்களாக, அவருடைய விசேஷித்த பொக்கிஷமாக மாறுகிறார்கள் ( யாத்திராகமம் 19:5பார்க்கவும்). இவ்வாறு, நாம் உடன்படிக்கையின் பாதையில் தனித்தனியாகவும் கூட்டாகவும் பயணிக்கிறோம். தேவனுடனான நமது உடன்படிக்கை உறவு நமக்கு ஒரு பொதுவான காரணத்தையும் பொதுவான அடையாளத்தையும் கொடுக்கிறது. நாம் கர்த்தரோடு நம்மை பிணைத்துக் கொள்ளும்போது, அன்னியோனியத்திலே நம்முடைய இருதயங்கள் ஒன்றாய் பின்னப்படவும், ஒருவருக்கொருவர் அன்பாயிருக்கவும் ,அவர் நமக்கு உதவுகிறார்.(மோசியா 18:21).
நியாயம், சமத்துவம் மற்றும் ஏழைகளுக்கு உதவுதல்
4 நேபியில் உள்ள பதிவு தொடர்கிறது: “அவர்களுக்குள் எந்த பிணக்குகளும், வாக்குவாதங்களும் இல்லை. ஒவ்வொரு மனுஷனும் மற்றவனிடம் நியாயமாய் நடந்துகொண்டான்.
அவர்களுக்குள் எல்லாமும் பொதுவாயிருந்தன; ஆதலால் அவர்களுக்குள் ஐஸ்வரியவான்களும் இல்லை, தரித்திரருமில்லை, அடிமைப்பட்டவர்களும் இல்லை, சுயாதீனர்களும் இல்லை. அவர்கள் யாவரும் சுயாதீனர்களாக்கப்பட்டு, பரலோக ஈவைப் புசிக்கிறவர்களாக இருந்தார்கள்.”(4 நேபி1:2–3).
நம்முடைய உலகப்பிரகாரமான கொடுக்கல் வாங்கல்களில், நாம் ஒருவருக்கொருவர் நியாயமாகவும் நீதியாகவும் இருக்க வேண்டும் என்றும், ஒருவரையொருவர் ஏமாற்றவோ அல்லது பயன்படுத்திக் கொள்ளவோ கூடாது என்றும் கர்த்தர் விரும்புகிறார் ( 1 தெசலோனிக்கேயர் 4:6) பார்க்கவும்). நாம் கர்த்தரிடம் நெருங்கி வளரும்போது, நாம் “ஒருவருக்கொருவர் காயப்படுத்திக்கொள்ள மனமில்லாதவர்களாய், சமாதானமாய் ஜீவித்து, ஒவ்வொரு மனுஷனுக்கும் அவனுக்குரியதைக்” கொடுக்க மனதுள்ளவர்களாய் இருப்போம்(மோசியா 4:13).
ஏழை எளியவர்களை கவனித்துக்கொள்ளவும் கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறார். நாம் அவர்களை நியாயந்தீர்க்காமல், நமது திறனுக்கு ஏற்ப உதவ “[நமது] பொருளை ஒருவருக்கொருவர் கொடுக்க” வேண்டும் ( மோசியா 4:21–27பார்க்கவும்).
ஒவ்வொருவரும் “தன்னைப்போலவே தனது சகோதரனை கனம் பண்ண” வேண்டும் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 38:24). நாம் கர்த்தருடைய ஜனங்களாக ஒன்றுபட்டிருக்க வேண்டுமானால், நாம் ஒருவரையொருவர் சமமாக நடத்துவது மட்டுமல்லாமல், நாம் ஒருவரையொருவர் உண்மையிலேயே சமமானவர்களாகக் காண வேண்டும் மேலும் நம் இருதயங்களில் நாம் சமமானவர்கள்—தேவனுக்கு முன்பாக சமமானவர்கள், சமமான மதிப்பு மற்றும் சமமான திறன் கொண்டவர்கள் என்றும் காண வேண்டும்.
கீழ்ப்படிதல்
4 நேபியிலிருந்து அடுத்த பாடம் இந்த எளிய சொற்றொடரில் வருகிறது: “அவர்கள் தங்கள் கர்த்தரும் தேவனுமானவரிடத்திலிருந்து பெற்றுக்கொண்ட கட்டளைகளின்படியே நடந்தார்கள்.” (4 நேபி 1:12).
கர்த்தர் இந்த ஜனங்களுக்கு தம்முடைய கோட்பாடுகளைப் போதித்து, அவர்களுக்குக் கட்டளைகளைக் கொடுத்து, அவர்களை நிர்வகிக்க ஊழியக்காரர்களை அழைத்தார். இதைச் செய்வதன் மூலம் அவருடைய நோக்கங்களில் ஒன்று, அவர்களுக்குள் எந்த வாக்குவாதமும் இருக்காது என்பதை உறுதி செய்வதாகும் ( 3 நேபி 11:28–29; 18:34பார்க்கவும்).
கர்த்தர் மற்றும் அவரது ஊழியர்களின் போதனைகளுக்கு நமது கீழ்ப்படிதல் நாம் ஒன்றிணைவதற்கு அவசியமானதாகும். நாம் குறைவுபடும்போதெல்லாம் மனந்திரும்புவது, ஒருவருக்கொருவர் உதவுவது, நம் செயலிலும் மேலும் ஒவ்வொருநாளும் மேம்படுவது போன்ற அனைத்துக் கட்டளைகளுக்கும் கீழப்படியும் நம் அர்ப்பணிப்பு இதில் அடங்கும்.
ஒன்றாக சந்தித்தல்
மேலும், 4 நேபியில் உள்ள ஜனங்கள் “உபவாசத்திலும் ஜெபத்திலும் [தரித்திருந்து], ஜெபிக்கவும், கர்த்தருடைய வார்த்தையைக் கேட்கவும் அடிக்கடி ஏகமாய்க் கூடி வந்தார்கள்,”(4 நேபி 1:12) என நாம் கற்றுக்கொள்கிறோம்.
நாம் ஒன்று கூடி சந்திக்க வேண்டும். நம்முடைய வாராந்திர ஆராதனைக் கூட்டங்கள் நம்முடைய பலத்தை தனித்தனியாகவும் கூட்டாகவும் கண்டறியும் ஒரு முக்கியமான வாய்ப்பாகும். நாம் திருவிருந்தில் பங்கேற்கிறோம், கற்றுக்கொள்கிறோம், ஜெபிக்கிறோம், ஒன்றாக பாடுகிறோம், ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கிறோம். பிற கூட்டங்களும் ஒரு அரவணைப்பின் உணர்வையும், நட்பையும் மேலும் ஒரு பொதுவான நோக்கத்தையும் வளர்க்க உதவுகின்றன.
அன்பு
4 நேபியில் உள்ள பதிவு இவை அனைத்திலும் மகத்தான திறவுகோலாகக் கருதப்படக்கூடிய ஒன்றை நமக்குத் தருகிறது—இது இல்லாமல் உண்மையான ஒற்றுமையை அடைய முடியாது: “ஜனங்களுடைய இருதயங்களில் வாசமாயிருந்த தேவ அன்பினிமித்தம் தேசத்தில் எந்த பிணக்கும் இல்லாமலிருந்தது.” (4 நேபி 1:15).
தாழ்மையுடன் கீழ்ப்படிதலுடன் தேவனை உண்மையாக நேசிக்கும்போது தனிப்பட்ட சமாதானத்தை அடையமுடிகிறது. இதுவே முதன்மையான பெரிய கட்டளை. தேவனை, யாரையும் விட அல்லது எதையும்விட அதிகமாக நேசிப்பதே உண்மையான சமாதானத்தையும், ஆறுதலையும், நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் தருகிறது. தேவன் மீதும் இயேசு கிறிஸ்துவின் மீதும் நாம் அன்பை வளர்த்துக் கொள்ளும்போது, குடும்பம் மற்றும் அயலார் மீதான அன்பு இயல்பாகவே பின்தொடரும்.
தேவன் மீதும் அவருடைய எல்லா பிள்ளைகள் மீதும் அன்பினால் நாம் நுகரப்படும்போதுதான் நம்மால் அனுபவிக்க முடிந்த மிகப்பெரிய சந்தோஷம் ஏற்படுகிறது.
தயாளத்துவம், கிறிஸ்துவின் தூய்மையான அன்பு, அதுதான் பிணக்குகளுக்கு மாற்று மருந்து. இயேசு கிறிஸ்துவை உண்மையாகப் பின்பற்றுபவர்களின் முக்கியப் பண்பு இதுவே. நாம் தேவனுக்கு முன்பாக நம்மைத் தாழ்த்தி, நமது இருதயத்தின் முழு ஊக்கத்தோடும் ஜெபிக்கும்போது, அவர் நமக்கு தயாளத்தை அருளுவார் ( மரோனி 7:48 பார்க்கவும்).
நாம் அனைவரும் தேவனின் அன்பு நம் இருதயங்களில் வாசம் செய்ய நாடும்போது, ஒற்றுமையின் அற்புதம் நமக்கு முற்றிலும் இயல்பானதாகத் தோன்றும்.
தெய்வீக அடையாளம்
இறுதியாக, 4 நேபியில் உள்ள ஜனங்கள் நமது கவனத்திற்கு தகுதியான ஒற்றுமையின் அடையாளத்தை வெளிப்படுத்தினர்: “திருடர்களோ, கொலைகாரர்களோ, லாமானியரோ அல்லது எந்தப் பிரிவும் இல்லை, அவர்கள் கிறிஸ்துவினுடைய பிள்ளைகளாய் ஒன்றாயும், தேவ ராஜ்யத்திற்கு சுதந்தரவாளிகளாயும் இருந்தார்கள்” (4 நேபி 1:17).
பல நூறு ஆண்டுகளாக மக்களைப் பிரித்து வைத்திருந்த அடையாளங்கள் அதிகமாய் நிலைத்திருக்கக் கூடிய மற்றும் உன்னதமான அடையாளத்தின் முன் பின்வாங்கின. பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவுடனான உறவுக்கு ஏற்ப அவர்கள் தங்களையும் மற்ற ஒவ்வொருவரையும் பார்த்தார்கள்.
வேற்றுமைகள் மற்றும் வேறுபாடுகள் நமக்கு நல்லது மற்றும் முக்கியமானவை. ஆனால் நமது மிக முக்கியமான அடையாளங்கள் நமது தெய்வீக தோற்றத்துடனும் நோக்கத்துடனும் தொடர்புடையவை.
முதலாவதாக, நாம் ஒவ்வொருவரும் தேவனின் பிள்ளைகள். இரண்டாவதாக, சபையின் அங்கத்தினராக, நாம் ஒவ்வொருவரும் உடன்படிக்கையின் பிள்ளை. மூன்றாவதாக, நாம் ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள். வேறு எந்த அடையாளங்காட்டியைக் கொண்டும் “இந்த மூன்று நிலையான பதவிகளை இடமாற்றம் செய்யவோ, மாற்றவோ அல்லது முன்னுரிமை படுத்தவோ” அனுமதிக்க வேண்டாம் என்று நம் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
ஒன்றாக இருங்கள்
தேவன் அனைவரையும் தம்மிடம் வரும்படி அழைத்திருக்கிறார். அனைவருக்கும் இடம் உண்டு. நமது கலாச்சாரங்கள், அரசியல், இனங்கள், ரசனைகள் மற்றும் பல வழிகளில் நாம் வேறுபடலாம். ஆனால் இயேசு கிறிஸ்துவில் நாம் ஒன்றிணையும்போது, அத்தகைய வேறுபாடுகள் அவற்றின் முக்கியத்துவத்தில் மங்கி, ஒன்றாக இருப்பதற்கான நமது அதிகப்படியான விருப்பத்தால் மாற்றப்படுகின்றன— இதனால் நாம் அவருடையவர்களாக இருக்கலாம்.
4 நேபியில் கற்பிக்கப்பட்ட பாடங்களை இருதயத்தில் எடுத்துக்கொள்ளுங்கள் ஒற்றுமையின் இந்த அத்தியாவசிய கூறுகளை நமது வாழ்க்கையில் இணைக்க நாம் ஒவ்வொருவரும் முயற்சிக்கும்போது, அவர்களைப் போலவே நம்மைக் குறித்தும், “தேவ கரத்தால் சிருஷ்டிக்கப்பட்ட ஜனங்கள் எல்லாருக்குள்ளும், இவர்களைக் காட்டிலும் மிகுந்த மகிழ்ச்சியான ஜனம் நிச்சயமாய் இருந்திருக்க முடியாது” (4 நேபி 1:16) என்று சொல்லப்படலாம்.
© 2024 by Intellectual Reserve, Inc. All rights reserved. அ.ஐ.நாட்டில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. மாதாந்திர லியஹோனா செய்தி, அக்டோபர் 2024. மொழிபெயர்ப்பு. Tamil. 19359 418