இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் அற்புதங்கள்
அவருடைய சுவிசேஷம் நமக்கு நம்பிக்கையையும், சமாதானத்தையும், மகிழ்ச்சியையும் தரும் என்பதையும் இப்போது மட்டுமல்ல, ஆனால் அது எதிர்கால சந்ததியினரில் எண்ணற்ற மற்றவர்களையும் ஆசீர்வதிக்கும் என்பதையும் நான் அறிவேன்.
மபுஹே! பிலிப்பைன்ஸின் அற்புதமான பரிசுத்தவான்களிடமிருந்து அன்பையும் அன்பான புன்னகையையும் நான் உங்களிடம் கொண்டு வருகிறேன். முதல் ஊழியக்காரர்கள் பிலிப்பைன்ஸ் தீவுகளுக்கு வந்து 60 ஆண்டுகள் ஆகிறது என்பதை இந்த ஆண்டு குறிக்கிறது. இன்று, 123 பிணையங்களில் 23 ஊழியங்கள் மற்றும் 800,000 க்கும் மேற்பட்ட சபை உறுப்பினர்கள் உள்ளனர். இப்போது ஏழு ஆலயங்கள் செயல்பாட்டில், கட்டுமானத்தில், அல்லது அறிவிக்கப்பட்டுள்ளன. இது உண்மையிலேயே ஒரு அற்புதம். 2 நேபி 10:21ல் உள்ள தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தை நாம் காண்கிறோம்: “சமுத்திரத்தின் தீவுகளில் இருப்பவர்களுக்கு கர்த்தரின் வாக்குத்தத்தங்கள் மகத்துவமானதாய் இருக்கிறது.”
இந்த அற்புதம் 1961ல் மணிலாவில் அப்போதைய மூப்பர் கார்டன் பி. ஹிங்க்லியால் ஜெபத்தில் கொடுக்கப்பட்ட தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலாகும். அந்த ஜெபத்தில் மூப்பர் ஹிங்க்லி உரைத்தார்: “அவர்கள் இங்கு வருபவர்களிடம் நட்பாகவும் விருந்தோம்பலாகவும் கனிவாகவும் கருணையுடனும் இருப்பார்கள் என இந்த மண்ணின் மக்கள் மீது உமது ஆசீர்வாதத்தை நாங்கள் வேண்டுகிறோம், மற்றும் பலர், ஆம் கர்த்தாவே, இந்த செய்தியைப் பெற்று அதன் மூலம் ஆசீர்வதிக்கப்பட [அநேக,] அநேக ஆயிரக்கணக்கானோர் இருக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். ஏற்றுக்கொள்ளும் மனங்களுடனும் புரிந்துகொள்ளும் இருதயங்களுடனும், விசுவாசத்துடனும், சுவிசேஷத்தின் கொள்கைகளின்படி வாழ தைரியத்துடனும் நீர் அவர்களை ஆசீர்வதிப்பீரா.” (dedicatory prayer at American War Memorial Cemetery, Philippines, Apr. 28, 1961).
பல ஆயிரக்கணக்கான விசுவாசமான பிற்காலப் பரிசுத்தவான்களைத் தாண்டி, சுவிசேஷம் நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. நான் இதற்கு ஜீவிக்கிற சாட்சி. எனது பெற்றோர் மிண்டானாவோவின் தெற்கு தீவில் உள்ள சபையில் சேர்ந்தபோது எனக்கு ஆறு வயது. அந்த நேரத்தில், முழு நாட்டிலும் ஒரே ஒரு ஊழியம் மட்டுமே இருந்தது, எந்த பிணையங்களும் இல்லை. இரட்சகரைப் பின்பற்ற என் பெற்றோரின் தைரியத்திற்கும், அர்ப்பணிப்பிற்கும் நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவர்களையும் பிலிப்பைன்ஸில் உள்ள சபையின் முன்னோடிகள் அனைவரையும் நான் மதிக்கிறேன். அடுத்தடுத்த தலைமுறைகள் ஆசீர்வதிக்கப்படுவதற்கு அவர்கள் வழி வகுத்தனர்.
பென்யமீன் இராஜா மார்மன் புஸ்தகத்தில் சொன்னான், “இப்படியிருக்க தன் தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்பவர்களின் ஆசீர்வாதமானதும், மகிழ்ச்சியானதுமான நிலையை நீங்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டுமென நான் விரும்புகிறேன். இதோ, ஆவிக்குரிய மற்றும் லௌகீக காரியங்கள் எல்லாவற்றிலும் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ”(மோசியா 2:41).
சுவிசேஷ கொள்கைகள் மற்றும் நியமங்களுக்கு நாம் கீழ்ப்படிந்து வாழும்போது, நாம் ஆசீர்வதிக்கப்பட்டு, மாற்றப்பட்டு, இயேசு கிறிஸ்துவைப் போல் மாறிக்கொண்டிருக்க மனமாற்றப்படுகிறோம். அப்படித்தான் என் குடும்பத்தையும் உள்ளடக்கி பிலிப்பைன்ஸ் பரிசுத்தவான்களை சுவிசேஷம் மாற்றியது, ஆசீர்வதித்தது. சுவிசேஷம் உண்மையிலேயே மகிழ்ச்சியான, நிறைவான வாழ்க்கைக்கு வழி.
சுவிசேஷத்தின் முதல் கொள்கை, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீதான விசுவாசமாகும். பல பிலிப்பின்ஸ் மக்கள் தேவன் மீது இயற்கையான நம்பிக்கையைக் கொண்டுள்ளனர். நாம் இயேசு கிறிஸ்துவை நம்புவது எளிது, நம் ஜெபங்களுக்கு நாம் பதில்களைப் பெற முடியும் என்பதை அறிவோம்.
ஒபெடோசா குடும்பம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். நான் இளைஞனாக இருந்தபோது சகோதரர் ஒபெடோசா எனது கிளைத் தலைவராக இருந்தார். மணிலா ஆலயத்தில் அவர்களது குடும்பம் முத்திரிக்கப்படுவது சகோதரர் மற்றும் சகோதரி ஒபெடோசாவின் மிகப்பெரிய ஆசை. அவர்கள் மணிலாவிலிருந்து 1,000 மைல்கள் (1,600 கி.மீ) தொலைவில் உள்ள ஜெனரல் சாண்டோஸ் நகரில் வசித்து வந்தனர். ஒன்பது பேர் கொண்ட குடும்பத்திற்கு, ஆலயப் பயணம் செய்வது சாத்தியமற்றதாகத் தோன்றியது. ஆனால், ஒரு விலையேறப்பெற்ற முத்துவை விலைக்கு வாங்க வேண்டி, அனைத்தையும் விற்றுச் சென்ற வணிகரைப் போல (மத்தேயு 13: 45–46 பார்க்கவும்), இந்த தம்பதி பயணத்திற்கு பணம் செலுத்த தங்கள் வீட்டை விற்க முடிவு செய்தது. சகோதரி ஒபெடோசா கவலைப்பட்டார், ஏனென்றால் திரும்பவரும்போது அவர்களுக்கு வீடு இருக்காது. ஆனால், தேவன் கொடுப்பார் என்று சகோதரர் ஒபெடோசா அவளுக்கு உறுதியளித்தார்.
அவர்கள் 1985ம் ஆண்டில் ஆலயத்தில் இக்காலத்திற்கும் எல்லா நித்தியத்திற்கும் ஒரு குடும்பமாக முத்திரிக்கப்பட்டனர். ஆலயத்தில் அவர்கள் அவர்களின் விலைமதிப்பற்ற முத்தான ஒப்பிடமுடியாததாக மகிழ்ச்சியை கண்டனர். சகோதரர் ஒபெடோசாவின் வார்த்தைகளுக்கு உண்மையாக, கர்த்தர் வழங்கினார். மணிலாவிலிருந்து திரும்பியவுடன், அன்பான அறிமுகமானவர்கள் தங்குவதற்கு இடங்களைக் கொடுத்தனர், இறுதியில் அவர்கள் சொந்த வீட்டைப் பெற்றனர். தம்மீது விசுவாசம் கொண்டவர்களை கர்த்தர் கவனித்து ஆசிர்வதிக்கிறார்.
சுவிசேஷத்தின் இரண்டாவது கொள்கை மனந்திரும்புதல். மனந்திரும்புதல் பாவத்திலிருந்து விலகி, மன்னிப்புக்காக தேவனிடம் திரும்புவதாகும். அது மனம் மற்றும் இருதயத்தின் மாற்றம் ஆகும். தலைவர் ரசல் எம். நெல்சன் கற்பிப்பது போல், “ஒவ்வொரு நாளும் கொஞ்சம் சிறப்பாக செய்வதும் இருப்பதுமாகும்.”(“We Can Do Better and Be Better,” Liahona, May 2019, 67).
மனந்திரும்புதல் அதிகமாக சோப்பு போன்றது. இளம் வேதியியல் பொறியாளராக, நான் பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு சோப்பு தொழிற்சாலையில் வேலை செய்தேன். நான் சோப்பை எப்படி செய்வது மற்றும் அது எப்படி வேலை செய்கிறது என்ற செயல்முறையையும் கற்றுக்கொண்டேன். நீங்கள் கார ஆதாரத்துடன் எண்ணெய்களைக் கலந்து, பாக்டீரியா எதிர்ப்பு பொருட்களைச் சேர்க்கும்போது, அது பாக்டீரியா மற்றும் வைரஸ்களை அகற்றக்கூடிய சக்திவாய்ந்த பொருளை உருவாக்குகிறது. சோப்பைப் போலவே, மனந்திரும்புதலும் ஒரு சுத்திகரிக்கும் முகவர். இது நமது அசுத்தங்கள் மற்றும் நமது பழைய குப்பைகளை அகற்றுவதற்கான வாய்ப்பை நமக்கு வழங்குகிறது, எனவே நாம் தேவனுடன் இருக்க தகுதியானவர்கள், ஏனென்றால் “எந்த அசுத்தமான காரியமும் [தேவனின்] ராஜ்யத்தை சுதந்தரிக்க முடியாது” (ஆல்மா 11:37).
மனந்திரும்புதலின் மூலம் நாம் இயேசு கிறிஸ்துவின் சுத்திகரிக்கும், பரிசுத்தப்படுத்தும் வல்லமையைப் பெறுகிறோம். அப்படியாக, மனந்திரும்புதலே மனமாற்ற செயல்முறையின் ஒரு முக்கிய பகுதியாகும். மார்மன் புஸ்தகத்தில் உள்ள அந்தி-நேபி-லேகியர்ளுக்கு நேர்ந்தது இதுதான். அவர்கள் லாமானியர்களாக இருந்தனர், அவர்கள் “மீண்டும் ஒருபோதும் வீழ்ச்சியடையாத” அளவுக்கு முற்றிலும் மாற்றப்பட்டனர் (ஆல்மா 23:6–8 பார்க்கவும்). அவர்கள் தங்கள் போர் ஆயுதங்களை புதைத்து வைத்தனர், அவற்றை மீண்டும் ஒருபோதும் எடுக்கவில்லை. அந்த உடன்படிக்கையை மீறுவதை விட அவர்கள் இறந்துவிடுவார்கள். மேலும் அவர்கள் அதை நிரூபித்தனர். அவர்களின் தியாகம், அற்புதங்களைக் கொண்டுவந்தது என்பதை நாம் அறிவோம்; அவர்களுக்கு எதிராக போராடிய ஆயிரக்கணக்கானோர் தங்கள் ஆயுதங்களை கீழே வீசி மனம் மாற்றப்பட்டனர். பல வருடங்களுக்குப் பிறகு, துடிப்பான போராளிகள் என்று நமக்குத் தெரிந்த அவர்களின் மகன்கள், நம்பமுடியாத முரண்பாடுகளுக்கு எதிரான போரில் பாதுகாக்கப்பட்டனர்!
என் குடும்பம் மற்றும் பல பிலிப்பைன்ஸ் பரிசுத்தவான்கள் இதேபோன்ற மனமாற்ற செயல்முறையை அனுபவித்தனர். நாங்கள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை ஏற்று சபையில் இணைந்தபோது, சுவிசேஷத்தோடு ஒத்துப்போகும் வகையில் எங்கள் வழிகளையும் பண்பாட்டையும் மாற்றினோம். தவறான மரபுகளை நாம் விட்டுவிட வேண்டும். அவர் சுவிசேஷத்தைக் கற்றுக்கொண்டு மனந்திரும்பியபோது என் தகப்பனிடம் இதை நான் பார்த்தேன். அவர் கடுமையான புகைப்பிடிப்பவராக இருந்தார், ஆனால் அவர் தனது சிகரெட்டை தூக்கி எறிந்தார், மீண்டும் ஒருபோதும் அதைத் தொடவில்லை. மாறுவதற்கான அவரது முடிவின் காரணமாக, அவரிலிருந்து நான்கு தலைமுறைகள் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளன.
மனந்திரும்புதலானது பரிசுத்தமான நியமங்களின் மூலம் உடன்படிக்கைகளை செய்து காத்துக்கொள்ள நம்மை நடத்துகிறது. இரட்சிப்பு மற்றும் மேன்மைப்படுதலுக்கான முதல் நியமம் பாவங்களின் மீட்பிற்காக மூழ்குவதன் மூலம் ஞானஸ்நானம் ஆகும். பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறவும் கர்த்தருடன் ஒரு உடன்படிக்கைக்குள் நுழையவும் ஞானஸ்நானம் நம்மை அனுமதிக்கிறது. நாம் திருவிருந்தை எடுக்கும்போது ஒவ்வொரு வாரமும் இந்த ஞானஸ்நான உடன்படிக்கையை புதுப்பிக்க முடியும். இதுவும் ஒரு அற்புதம்!
சகோதர சகோதரிகளே, இந்த அற்புதத்தை உங்கள் வாழ்க்கையில் கொண்டு வர நான் உங்களை அழைக்கிறேன். இயேசு கிறிஸ்துவிடம் வந்து, அவரிடம் உங்கள் விசுவாசத்தைப் பிரயோகிக்கத் தேர்ந்தெடுத்து, மனந்திரும்பி, இரட்சிப்பு மற்றும் மேன்மைப்படுதல் ஆகிய விதிமுறைகளில் காணப்பட்ட உடன்படிக்கைகளை செய்து காத்துக்கொள்ளுங்கள். இது, உங்களை கிறிஸ்துவுடன் இணைத்துக்கொள்ளவும் தேவனின் வல்லமையையும் ஆசீர்வாதங்களையும் பெறவும் அனுமதிக்கும் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:20 பார்க்கவும்).
இயேசு கிறிஸ்து இருப்பதைக் குறித்தும் அவர் ஜீவிக்கிறார் மற்றும் நம் ஒவ்வொருவரையும் நேசிக்கிறார் என்றும் நான் சாட்சியமளிக்கிறேன். அவருடைய சுவிசேஷம் நமக்கு நம்பிக்கையையும், சமாதானத்தையும், மகிழ்ச்சியையும் தரும் என்பதை நான் அறிவேன், இப்போது மட்டுமல்ல, ஆனால் அது எதிர்கால சந்ததியினரில் எண்ணற்ற மற்றவர்களை ஆசீர்வதிக்கும். பிலிப்பைன்ஸ் பரிசுத்தவான்களின் அழகான மற்றும் அன்பான புன்னகைக்கு அதுதான் காரணம். இது சுவிசேஷத்தின் அற்புதம் மற்றும் கிறிஸ்துவின் கோட்பாடு. இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் இதை நான் சாட்சியமளிக்கிறேன், ஆமென்.