வேதங்கள்
மார்மன் 5


அதிகாரம் 5

மார்மன் மறுபடியும் நேபிய சேனைகளை இரத்தமும், சங்காரமுமான, யுத்தங்களுக்கு நடத்திச் செல்லுதல் – இயேசுவே, கிறிஸ்து என்று எல்லா இஸ்ரவேலரும் உணர்ந்துகொள்ளச் செய்ய மார்மன் புஸ்தகம் வரும் – அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தம், லாமானியர் சிதறடிக்கப்படுவார்கள். ஆவியானவர் அவர்களில் கிரியை செய்வதிலிருந்து நின்று விடுவார் – அவர்கள் புறஜாதிகளிடத்திலிருந்து சுவிசேஷத்தைப் பிற்காலங்களில் பெற்றுக்கொள்வர். ஏறக்குறைய கி.பி. 375–384.

1 அந்தப்படியே, நான் நேபியருக்குள்ளே போய், நான் அவர்களுக்கு இனி ஒருபோதும் உதவிசெய்வதில்லை, என்று நான் செய்துகொண்ட ஆணையிலிருந்து மனம் மாறினேன். அவர்கள் தங்கள் சேனைகளின் சேர்வையை எனக்கு மறுபடியும் தந்தார்கள். அவர்களுடைய உபத்திரவங்களிலிருந்து நான் அவர்களை விடுவிக்கக்கூடும் என, அவர்கள் என்னைப் பார்த்தார்கள்.

2 ஆனால் நான் நம்பிக்கையற்றிருந்தேன். ஏனெனில் அவர்கள் மேல் வரவிருக்கிற கர்த்தருடைய நியாயத்தீர்ப்புகளை நான் அறிந்திருந்தேன்; ஏனெனில் அவர்கள் தங்கள் அக்கிரமங்களுக்காக மனந்திரும்பாமல், தங்களைப் படைத்தவரை நோக்கி கூப்பிடாமல், தங்களுடைய ஜீவன்களுக்காகப் போராடினார்கள்.

3 அந்தப்படியே, நாங்கள் யோர்தான் பட்டணத்திற்கு ஓடினபோது லாமானியர் எங்களுக்கு விரோதமாய் வந்தார்கள்; ஆனால் அவர்கள் இதோ, அச்சமயத்தில் பட்டணத்தைக் கைப்பற்றக்கூடாமல் துரத்திவிடப்பட்டார்கள்.

4 அந்தப்படியே, அவர்கள் மறுபடியும் எங்களுக்கு விரோதமாய் வந்தார்கள். நாங்கள் பட்டணத்தைத் தற்காத்தோம். நேபியர்கள் தற்காத்து வந்த மற்ற பட்டணங்களும் உண்டு. அவர்கள் எங்களுக்கு முன்னேயிருக்கிற தேசத்துக்குள் வந்து, எங்கள் தேசத்தின் குடிகளை அழிக்க முடியாமல், அதிலிருக்கும் கொத்தளங்கள் அவர்களைத் தடுத்தன.

5 ஆனால், அந்தப்படியே, நாங்கள் கடந்து வந்த தேசங்கள் எதுவானாலும், அதின் குடிகள் எங்களோடு சேர்ந்து வரவில்லையெனில் அவர்கள் லாமானியரால் அழிக்கப்பட்டனர். அவர்களுடைய பட்டணங்கள், கிராமங்கள், நகரங்கள் ஆகியவை அக்கினிக்கு இரையாயின. இப்படியாக முன்னூற்றி எழுபத்தொன்பது வருஷங்கள் கடந்துபோயின.

6 அந்தப்படியே, முன்னூற்றி எண்பதாவது வருஷத்தில் லாமானியர் மறுபடியும் யுத்தத்திற்கென்று எங்களுக்கு விரோதமாக வந்தார்கள். நாங்கள் அவர்களுக்கு விரோதமாக தைரியமாய், நின்றோம். ஆனால் அதுவெல்லாம் வீணாய்ப்போயிற்று. ஏனெனில் அவர்களுடைய எண்ணிக்கை அதிகமாயிருந்தபடியால், அவர்கள் நேபிய ஜனங்களை தங்கள் கால்களுக்குக் கீழ் மிதித்துப் போட்டார்கள்.

7 அந்தப்படியே, நாங்கள் மறுபடியும் ஓடினோம். லாமானியரை விட வேகமாய் ஓடினவர்கள் தப்பித்துக் கொண்டார்கள். ஓட்டத்தில் லாமானியரை மிஞ்ச முடியாதவர்கள் வீழ்த்தப்பட்டு அழிக்கப்பட்டார்கள்.

8 இப்பொழுதும் இதோ, மார்மனாகிய நான் என் கண்களுக்கு முன்னிருந்த அந்த பயங்கரமான இரத்தமும், சங்காரமுமுள்ள காட்சியை மனுஷர் முன் வைத்து அவர்களுடைய ஆத்துமாக்களை வேதனைக்குள்ளாக்க வேண்டுமென்பது என் வாஞ்சை அல்ல. இக்காரியங்கள் கண்டிப்பாக அறிவிக்கப்படுமென்றும், மறைக்கப்பட்ட சகலமும் வீடுகளின் கூரைகளின்மேல் வெளிப்படுத்தப்படுமென்றும், அறிந்து,

9 இவைகளைக் குறித்த ஞானம் இந்த ஜனங்களினுடைய மீதியானோருக்கும், இந்த ஜனங்களை சிதறடிக்கப்பண்ணுவார்கள் என்று கர்த்தர் சொன்ன புறஜாதிகளுக்கும் வருமென்ற விவரம் தெரியவேண்டும் என்றும், இந்த ஜனங்கள் அவர்களுக்குள் துச்சமாக எண்ணப்படுவார்கள் என்றும், நான் பெற்றுக்கொண்ட கட்டளையினிமித்தமும், இந்த ஜனங்களின் துன்மார்க்கத்தினால் உங்களுக்கு பெரும் துக்கம் ஏற்படக்கூடாதென்பதற்காகவும், நான் கண்டவைகளைக் குறித்த முழுத்தொகுப்பைக் கொடுக்கத் துணியாமல், சிறு சுருக்கத்தையே எழுதுகிறேன்.

10 இப்பொழுதும் இதோ, நான் அவர்களுடைய சந்ததிக்காகவும், அவர்களுடைய ஆசீர்வாதங்கள் எங்கிருந்து வருகிறதென்று உணர்ந்து தெரிந்துகொள்கிற, இஸ்ரவேலின் வீட்டாரில் அக்கறை கொண்டிருக்கிற, புறஜாதிகளுக்காகவும் இதைச் சொல்லுகிறேன்.

11 அப்படிப்பட்டவர்களே இஸ்ரவேலின் வீட்டாரின் பேராபத்துகளுக்காக துக்கிப்பார்கள் என்று நான் அறிவேன்; ஆம், அவர்கள் இந்த ஜனத்தின் அழிவிற்காக துக்கிப்பார்கள். இயேசுவின் கரங்களால் அரவணைக்கப்பட்டிருக்க, இந்த ஜனம் மனந்திரும்பவில்லையே என்றும் அவர்கள் துக்கிப்பார்கள்.

12 இப்பொழுது இவைகள் யாக்கோபின் வீட்டாருடைய மீதியானோருக்கு எழுதப்பட்டிருக்கிறது; துன்மார்க்கம் அவைகளை அவர்களிடத்திற்குக் கொண்டு செல்லாது என்று தேவன் அறிந்திருப்பதாலே, அவைகள் இவ்விதமாய் எழுதப்பட்டிருக்கிறது; அவைகள் கர்த்தருடைய சொந்த ஏற்ற காலத்தில் வரும்படிக்கு அவருக்குள்ளாக மறைக்கப்பட வேண்டும்.

13 நான் பெற்றுக்கொண்ட கட்டளை இதுவே; இதோ, கர்த்தர் தம்முடைய ஞானத்தில் சரியென்று காணும்போது, அவருடைய கட்டளையின்படியே அவை வெளிவரும்.

14 இதோ, அவை யூதர்களின் அவிசுவாசிகளுக்குள்ளே போகும், அவை போகிற நோக்கம் என்னவெனில், இயேசுவே ஜீவிக்கிற தேவனின் குமாரனாகிய கிறிஸ்து என்று அவர்களுக்கு உணர்த்தவும், யூதர்கள் அல்லது இஸ்ரவேல் வீட்டாரெல்லாரும் தேவனாகிய அவர்களின் கர்த்தர் அவர்களுக்குக் கொடுத்த உடன்படிக்கையை நிறைவேற்றும்படிக்கு, அவர்களுடைய சுதந்திர தேசத்திற்குள் திரும்பச் சேர்க்கப்படும்படியான தம்முடைய பெரிதும், நித்தியமுமான திட்டத்தை தமக்கு மிகவும் பிரியமானவரின் மூலம் பிதா நிறைவேற்றவும்,

15 இந்த ஜனத்தினுடைய சந்ததியார், புறஜாதிகளிடத்திலிருந்து தங்களிடத்தில் வரவிருக்கிற அவருடைய சுவிசேஷத்தை பூரணமாய் விசுவாசிக்கும்படிக்கும், நமக்குள் இருக்கிற லாமானியர் மத்தியிலே கூட என்றுமே இருந்திராத, நம் மத்தியிலும் இருந்திராத, விவரிப்பதற்கு அப்பாற்பட்டு, இந்த ஜனங்கள் சிதறடிக்கப்பட்டு, கருமையானவர்களாயும், அசுசியுள்ளவர்களாயும், அருவருக்கத்தக்கவர்களாயும் இருப்பார்கள். இது அவர்களுடைய அவிசுவாசத்தினாலும், விக்கிரக ஆராதனையினிமித்தமுமே.

16 ஏனெனில் இதோ, கர்த்தருடைய ஆவி அவர்களுடைய பிதாக்களிடம் கிரியை செய்வதிலிருந்து ஏற்கனவே நின்றுவிட்டது; அவர்கள் உலகில் கிறிஸ்துவும் தேவனுமில்லாதிருக்கிறார்கள், அவர்கள் காற்றினால் பறக்கடிக்கப்படுகிற பதரைப்போல துரத்தப்படுகிறார்கள்.

17 அவர்கள் ஒரு காலத்தில் விரும்பத்தக்க ஜனமாய் இருந்தார்கள்; அவர்கள் கிறிஸ்துவை தங்கள் மேய்ப்பராக வைத்திருந்தார்கள்; ஆம், அவர்கள் பிதாவாகிய தேவனாலேயே வழிநடத்தப்பட்டார்கள்.

18 காற்றினால் பறக்கடிக்கப்படுகிற பதரைப் போலவோ அல்லது துடுப்போ, நங்கூரமோ, திசை மாற்றுவதற்கு ஒன்றுமே இல்லாமல் அலைகளின் மேல் அலைக்கழிக்கப்படுகிற ஓடத்தைப் போலவோ, அவர்கள் சாத்தானால் வழிநடத்தப்படுகிறார்கள்; அதைப் போலவே அவர்களும் இருக்கிறார்கள்.

19 இதோ, அவர்கள் தேசத்தில் பெற்றிருக்கவேண்டிய அவர்களுடைய ஆசீர்வாதங்களை, கர்த்தர் தேசத்தை சுதந்தரிக்கப் போகும் புறஜாதியாருக்காக வைத்திருக்கிறார்.

20 ஆனால் இதோ, அவர்கள் புறஜாதிகளால் துரத்தப்பட்டு, சிதறடிக்கப்படுவார்கள்; அவர்கள் புறஜாதிகளால் துரத்தப்பட்டு, சிதறடிக்கப்பட்ட பின்பு, இதோ, கர்த்தர் தாம் ஆபிரகாமினிடத்திலும், இஸ்ரவேல் வீட்டார் எல்லாருடனும் செய்துகொண்ட உடன்படிக்கையை நினைவுகூருவார்.

21 அவர்களுக்காக தன்னிடத்தில் விண்ணப்பம் பண்ணப்பட்ட, நீதிமான்களின் ஜெபங்களையும் கர்த்தர் நினைவுகூருவார்.

22 அப்படியானால், புறஜாதியாரே, நீங்கள் மனந்திரும்பி, உங்களுடைய பொல்லாத வழிகளிலிருந்து திரும்பாமல், தேவ வல்லமைக்கு முன்பாக நீங்கள் எப்படி நிற்க முடியும்?

23 நீங்கள் தேவ கரங்களிலிருக்கிறீர்கள் என்று நீங்கள் அறிந்திருக்கவில்லையா? அவருக்கு எல்லா வல்லமையும் உண்டென்றும், அவருடைய மகா கட்டளையினால், பூமி ஒரு புஸ்தகச் சுருளைப்போல சுருட்டப்படும் என்றும் நீங்கள் அறியீர்களா?

24 ஆதலால் அவர் உங்களுக்கு விரோதமாய் நியாயம் விசாரிக்க வராதபடிக்கும், யாக்கோபின் சந்ததியின் மீதியானோர் உங்களுக்குள் ஒரு சிங்கத்தைப்போல வந்து, உங்களைத் துண்டுதுண்டாகக் கிழித்துப் போடாதபடிக்கும், நீங்கள் மனந்திரும்பி, அவருக்கு முன்பாக உங்களையே தாழ்த்துங்கள். உங்களை விடுவிக்க அங்கே ஒருவருமில்லை.