வேதங்கள்
யாக்கோபு 3


அதிகாரம் 3

பிரியமான தேவனுடைய வார்த்தையை இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பெறுகிறார்கள் – லாமானியர்களின் நீதி நேபியர்களுடையதைக் காட்டிலும் மிஞ்சியிருத்தல் – வேசித்தனம், காமவிகாரம் மற்றும் ஒவ்வொரு பாவத்திற்கும் விரோதமாய் யாக்கோபு எச்சரித்தல். ஏறக்குறைய கி.மு. 544–421.

1 ஆனால் இதோ, யாக்கோபாகிய நான் உங்களில் இருதயத்திலே சுத்தமுள்ளவர்களிடத்தில் பேசுகிறேன். மனஉறுதியுடனேகூட தேவனை நோக்கிப்பாருங்கள். அதிக விசுவாசத்துடனே அவரிடம் ஜெபம் செய்யுங்கள். உங்கள் உபத்திரவத்திலே உங்களை அவர் தேற்றுவார். உங்களுக்காக அவர் பரிந்துபேசுகிறவராய் இருந்து உங்கள் அழிவைத் தேடுபவர்களின் மீது நியாயத்தை அனுப்புவார்.

2 இருதயத்திலே சுத்தமுள்ளவர்களே, நீங்கள் எல்லோரும், உங்கள் மனம் திடமனதாய் என்றென்றைக்கும் இருக்குமேயானால், உங்கள் தலைகளை உயர்த்தி தேவனுடைய பிரியமான வார்த்தையைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவரின் அன்பை ருசித்துப் பாருங்கள்.

3 ஆனால் இந்நாளிலே தேவனுக்கு முன்பாக அசுத்தமாயிருக்கிற, இருதயத்தில் சுத்தமில்லாதவர்களாகிய, உங்களுக்கு ஐயோ; நீங்கள் மனந்திரும்பாவிட்டால் உங்களினிமித்தம் தேசம் சபிக்கப்பட்டிருக்கும். உங்களைப்போல அசுத்தமாய் அல்லாத லாமானியர்கள், தாங்கள் ஒரு கொடிய சாபத்தால் சபிக்கப்பட்டிருந்தும் கூட, நீங்கள் அழிந்துபோகும்பொருட்டு சவுக்கால் அடிப்பார்கள்.

4 நீங்கள் மனந்திரும்பாவிட்டால், உங்கள் சுதந்திர தேசத்தை அவர்கள் ஆட்கொள்ளும் காலம் சீக்கிரமாய் வருகிறது. கர்த்தராகிய தேவன் உங்களிலிருந்து நீதிமான்களை வெளியே நடத்திச் செல்வார்.

5 இதோ, அவர்களின் அசுசித் தன்மையாலும், அவர்களது சருமத்தின் மீது வந்திருக்கிற சாபத்தினாலும், உங்களால் வெறுக்கப்படுகிற உங்கள் சகோதரராகிய லாமானியர்கள், உங்களைவிட அதிக நீதியுள்ளவர்களாய் இருக்கிறார்கள், ஏனெனில் ஒரு மனையாட்டியை வைத்திருக்க வேண்டுமென்றும், மறுமனையாட்டிகள் ஒருவரையும் அவர்கள் வைத்திருக்கக்கூடாதென்றும், அவர்கள் மத்தியில் விபச்சாரங்கள் நடக்கக்கூடாதென்றும், நம் தகப்பனுக்குக் கொடுக்கப்பட்ட கர்த்தரின் கட்டளையை அவர்கள் மறந்துபோகவில்லை.

6 இப்பொழுது இந்தக் கட்டளையை கைக்கொண்டு ஆசரித்தார்கள்; ஆகையால் இந்தக் கட்டளையை ஆசரிப்பதனிமித்தம், தேவனாகிய கர்த்தர் அவர்களை அழிக்காமல், அவர்களிடத்தில் இரக்கமாயிருப்பார். ஒரு நாளிலே அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்ட ஜனமாவார்கள்.

7 இதோ, அவர்களின் புருஷர்கள் தங்கள் மனைவிகளை நேசிக்கிறார்கள். அவர்களின் மனைவிகள் தங்கள் புருஷர்களை நேசிக்கிறார்கள். அவர்களின் புருஷர்களும், அவர்களின் மனைவிகளும் தங்கள் பிள்ளைகளை நேசிக்கிறார்கள். உங்கள் மீது அவர்களுடைய அவநம்பிக்கையும், வெறுப்பும், அவர்களது பிதாக்களின் அக்கிரமத்தின் நிமித்தமே. ஆதலால் உங்களின் மகா சிருஷ்டிகரின் பார்வையில், அவர்களைக் காட்டிலும் நீங்கள் எவ்வளவு சிறந்தவர்களாயிருக்கிறீர்கள்?

8 என் சகோதரரே, உங்கள் பாவங்களிலிருந்து நீங்கள் மனந்திரும்பாவிட்டால், தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக அவர்களோடு நீங்களும் கொண்டுவரப்படுகையில், அவர்களுடைய சருமம் உங்களுடையவைகளை விட வெண்மையாக இருக்குமே, என்று அஞ்சுகிறேன்.

9 ஆதலால், அவர்களுடைய சருமங்களின் கருமையான தன்மையின் நிமித்தமும், அவர்களுடைய அசுசியினிமித்தமும், அவர்களுக்கு விரோதமாய் இனி ஒருபோதும் நீங்கள் இகழாமல், இருப்பீர்களாக, என்று தேவனுடைய வார்த்தையான, இந்தக் கட்டளையை உங்களுக்கு நான் கொடுக்கிறேன். உங்களுடைய சுய அசுசியை நினைவுகூர்ந்து, அவர்களின் அசுசி, அவர்களின் பிதாக்களின் நிமித்தம் வந்தது, என நினைவுகூருங்கள்.

10 ஆகையால் உங்கள் பிள்ளைகளுக்கு முன்பாக நீங்கள் ஏற்படுத்தின முன்மாதிரியின் நிமித்தம், அவர்களுடைய இருதயங்களை எவ்வளவாய் துக்கப்படுத்தினீர்கள் என்பதை நினைவுகூருங்கள். மேலும் உங்கள் அசுசியின் நிமித்தம், உங்கள் பிள்ளைகளை அழிவிற்குள்ளாக நீங்கள் கொண்டுவரக்கூடும் என்றும், கடைசி நாளிலே உங்கள் சிரசுகள் மீது அவர்களின் பாவங்கள் குவிக்கப்படும், என்பதையும் நினைவுகூருங்கள்.

11 என் சகோதரரே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்கள் ஆத்துமாக்களின் புலன்களை எழுப்புங்கள். மரணத்தின் நித்திரையிலிருந்து விழிக்கும்படியாய் குலுங்கி, இரண்டாவது மரணமான கந்தகக் கடலும், அக்கினியுமான ஏரியில் தள்ளப்படுவதற்கு, நீங்கள் பிசாசின் தூதர்களாகாமல், பாதாளத்தின் வேதனைகளிலிருந்து உங்களை விடுதலையாக்குங்கள்.

12 இப்பொழுது, யாக்கோபாகிய நான், நேபியின் ஜனங்களை வேசித்தனம், காமவிகாரம் மற்றும் ஒவ்வொரு வகையான பாவத்திற்கு விரோதமாய் எச்சரித்து, அவைகளின் பயங்கரமான விளைவுகளை அவர்களுக்குச் சொல்லி, அநேகக் காரியங்களைப் பேசினேன்.

13 இந்த ஜனங்களுடைய எண்ணிறைந்ததாகத் தொடங்கிய நடவடிக்கைகளின், நூற்றில் ஒரு பங்கைக்கூட இந்தத் தகடுகளின்மீது எழுத இயலாதிருப்பினும், அவர்களின் அநேக நடவடிக்கைகளும், யுத்தங்களும், பிணக்குகளும் அவர்களுடைய ராஜாக்களின் ஆளுகைகளும் பெரிய தகடுகள் மீது எழுதப்பட்டிருக்கிறது.

14 இந்தத் தகடுகள் யாக்கோபின் தகடுகள் என அழைக்கப்படுகின்றன. அவைகள் நேபியின் கரத்தால் செய்யப்பட்டவை. நான் இந்த வார்த்தைகளைப் பேசுவதை முடிக்கிறேன்.