வேதங்கள்
ஏத்தேர் 11


அதிகாரம் 11

யுத்தங்களும், பிரிவினைகளும், துன்மார்க்கமும் யாரேதியர்களின் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தின – மனந்திரும்பவில்லையெனில் யாரேதியர்கள் முழுவதுமாய் அழிக்கப்படுவார்களென்று தீர்க்கதரிசிகள் முன்னறிவித்தல் – ஜனங்கள் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைப் புறக்கணித்தல்.

1 அங்கே கோமின் நாட்களிலும் அநேக தீர்க்கதரிசிகள் வந்து, அந்தப் பெரிய ஜனம் மனந்திரும்பி, கர்த்தரிடத்தில் திரும்பி, தங்கள் கொலைகளையும், துன்மார்க்கத்தையும் விட்டுவிடவில்லையெனில் அழிந்துபோவார்களென்று தீர்க்கதரிசனமுரைத்தார்கள்.

2 அந்தப்படியே, தீர்க்கதரிசிகள் ஜனங்களால் புறக்கணிக்கப்பட்டார்கள். ஜனங்கள் அவர்களை அழிக்க வகைதேடியதால் அவர்கள் பாதுகாப்புக்காக கோமிடத்தில் ஓடினார்கள்.

3 அவர்கள் கோமிடத்தில் அநேக காரியங்களை தீர்க்கதரிசனமாய்ச் சொன்னார்கள்; அவன் தன் மீதிநாட்கள் எல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டான்.

4 அவன் நல்ல முதிர்வயது வரைக்கும் வாழ்ந்து, சிப்லோமைப் பெற்றான்; அவன் ஸ்தானத்தில் சிப்லோம் அரசாண்டான். சிப்லோமின் சகோதரன் அவனுக்கு விரோதமாய்க் கலகம் பண்ணினான். தேசம் முழுவதிலும் மிகப்பெரிய யுத்தம் இருக்கத் துவங்கியது.

5 அந்தப்படியே, ஜனங்களுடைய அழிவைக் குறித்து தீர்க்கதரிசனமுரைத்த சகல தீர்க்கதரிசிகளையும் மரணத்திற்குள்ளாக்கும்படி, சிப்லோமின் சகோதரன் செய்தான்.

6 அங்கே தேசமெங்கும் பெரும் சீரழிவு உண்டாயிருந்தது, ஜனங்கள் தங்கள் அக்கிரமத்திலிருந்து மனந்திரும்பவில்லையெனில், பூமியின் மேலும் அவர்கள் மேலும் பெரும் சாபம் வருமென்றும், பூமியின் பரப்பின் மேல் என்றுமே இராத அளவிற்கு அவர்களுக்குள்ளே ஒரு பெரும் அழிவு ஏற்படுமென்றும், தேசத்தின்மேல் மண்குவியல்களைப்போல அவர்களுடைய எலும்புகள் குவிக்கப்படுமென்றும் அவர்கள் சாட்சி கொடுத்தார்கள்.

7 அவர்கள் தங்களுடைய துன்மார்க்க சங்கங்களினிமித்தம் கர்த்தருடைய சத்தத்திற்கு செவிகொடுக்கவில்லை; ஆதலால் பூமியின் பரப்பின்மேல் என்றுமே இருந்திராத ஒரு பெரும் அழிவு அங்கே இருக்கத்தக்கதாக, தேசத்தின் மீதெங்கும் யுத்தங்களும், பிணக்குகளும், அநேக பஞ்சங்களும், வாதைகளும் உண்டாயிருந்தன. இவையெல்லாம் சிப்லோமின் நாட்களில் சம்பவித்தன.

8 ஜனங்கள் தங்கள் அக்கிரமங்களிலிருந்து மனந்திரும்பத் துவங்கினார்கள்; அவர்கள் செய்த அளவுக்கு, கர்த்தர் அவர்கள்மேல் இரங்கினார்.

9 அந்தப்படியே, சிப்லோம் கொல்லப்பட்டான். சேத் சிறைத்தனத்திற்குள்ளாகக் கொண்டுவரப்பட்டு, தன் நாட்களெல்லாம் சிறைத்தனத்திலே வாசம் பண்ணினான்.

10 அந்தப்படியே, அவனுடைய குமாரனான ஆகா ராஜ்யத்தைப் பெற்றான்; அவன் தன் நாட்கள் முழுவதும் ஜனங்கள்மீது ராஜரீகம் பண்ணினான். அவன் தன் நாட்களில் எல்லா விதமான அக்கிரமத்தையும் செய்து, அதினாலே அதிக இரத்தத்தைச் சிந்தினான். அவன் நாட்கள் கொஞ்சமாயிருந்தன.

11 ஆகாக்கினுடைய சந்ததியானாகிய ஏத்தேம் ராஜ்யத்தைப் பெற்றான்; அவனும் தன் நாட்களில் துன்மார்க்கமானதைச் செய்தான்.

12 அந்தப்படியே, ஏத்தேமின் நாட்களில் அநேக தீர்க்கதரிசிகள் வந்து ஜனங்களுக்கு மறுபடியும் தீர்க்கதரிசனமுரைத்தார்கள்; ஆம், அவர்கள் தங்கள் அக்கிரமங்களிலிருந்து மனந்திரும்பாவிடில், கர்த்தர் அவர்களை பூமியின் பரப்பின்மேலிருந்து முழுவதுமாய் அழியப்பண்ணுவார், என்று தீர்க்கதரிசனமுரைத்தார்கள்.

13 அந்தப்படியே, ஜனங்கள் தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தி, அவர்களுடைய வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கவில்லை; தீர்க்கதரிசிகள் துக்கித்து, ஜனங்களிடமிருந்து பின்வாங்கினார்கள்.

14 அந்தப்படியே, ஏத்தேம் தன் நாட்கள் முழுவதிலும் துன்மார்க்கமாய் நியாயம் விசாரித்து வந்தான்; அவன் மோரானைப் பெற்றான். அந்தப்படியே, அவன் ஸ்தானத்தில் மோரான் ராஜ்ஜியபாரம் பண்ணினான். மோரான் கர்த்தருக்கு முன்பாக பொல்லாப்பானதைச் செய்தான்.

15 அந்தப்படியே, வல்லமையையும், லாபத்தையும் பெறக் கட்டப்பட்ட அந்த இரகசிய சங்கத்தினிமித்தம் ஜனங்களுக்குள்ளே ஒரு கலகம் உண்டாயிற்று; அவர்களுக்குள்ளே அக்கிரமம் செய்வதில் பலசாலியான ஒருவன் எழும்பி, மோரானிடத்தில் போர் தொடுத்தான். அதிலே அவன் ராஜ்யத்தின் பாதியை வீழ்த்தி, அநேக வருஷங்களாக அந்தப் பாதியை பாதுகாத்து வந்தான்.

16 அந்தப்படியே, மோரான் அவனை வீழ்த்தி, ராஜ்யத்தை மறுபடியும் பெற்றான்.

17 அந்தப்படியே, அங்கே மற்றொரு பலசாலி எழும்பினான்; அவன் யாரேதின் சகோதரனின் சந்ததியான்.

18 அந்தப்படியே, அவன் மோரானை வீழ்த்தி, ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டான். ஆதலால் மோரான் தன் மீதியான நாட்கள் எல்லாம் சிறைத்தனத்திலே வாசம் பண்ணினான்; அவன் கொரியாந்தரைப் பெற்றான்.

19 அந்தப்படியே, கொரியாந்தர் தன் நாட்களெல்லாம் சிறைத்தனத்தில் வாசம் பண்ணினான்.

20 கொரியாந்தரின் நாட்களில், அங்கே அநேக தீர்க்கதரிசிகள் வந்து, பெரிதும் அற்புதமுமான காரியங்களைக் குறித்து தீர்க்கதரிசனமுரைத்து, ஜனங்களுக்கு மனந்திரும்புதலை அறிவித்து, அவர்கள் மனந்திரும்பாவிட்டால், அவர்களின் முழுவதுமான அழிவுக்கு ஏதுவாய் தேவனாகிய கர்த்தர் நியாயம் விசாரிப்பார் என்றும்,

21 தேவனாகிய கர்த்தர் அவர்களுடைய பிதாக்களைக் கொண்டுவந்த விதத்தின்படியே, தம்முடைய வல்லமையாலே மற்ற ஜனங்களை சுதந்தரிக்க அனுப்பவோ அல்லது கொண்டுவரவோ செய்வார், என்றார்கள்.

22 அவர்கள் தங்களுடைய இரகசிய சமுதாயம், துன்மார்க்க அருவருப்புகள் ஆகியவைகளினிமித்தம், தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் அனைத்தையும் மறுதலித்தார்கள்.

23 அந்தப்படியே, கொரியாந்தர் ஏத்தேரைப் பெற்று, தன் நாட்கள் அனைத்திலும் சிறைத்தனத்திலே வாசம்பண்ணி மரித்துப்போனான்.