ஊழிய அழைப்புகள்
அத்தியாயம் 3: ஞானஸ்நானம் பெறவும் திடப்படுத்தப்படவும் அழைப்பு


“அத்தியாயம் 3: ஞானஸ்நானம் பெறவும் திடப்படுத்தப்படவும் அழைப்பு” என்னுடைய சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்: இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ளுவதற்கான வழிகாட்டி (2023)

“ஞானஸ்நானம் பெறவும் திடப்படுத்தப்படவும் அழைப்பு,” என்னுடைய சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்

அத்தியாயம் 3

ஞானஸ்நானம் பெறவும் திடப்படுத்தப்படவும் அழைப்பு

படம்
கர்த்தரின் மந்தையினுள் வாருங்கள்,‑ வால்ட்டர் ரானே

கோட்பாட்டு அஸ்திபாரம்

நாம் அனைவரும் பரலோக பிதாவின் பிள்ளைகள். நாம் அவருடைய பிரசன்னத்திற்கு திரும்ப முடியும்படிக்கு நாம் கற்றுக் கொள்ளவும், வளரவும், மேலும் அவரைப் போல ஆகவும் வாய்ப்பு பெற பூமிக்கு வந்துள்ளோம் (மோசே 1:39 ஐப் பார்க்கவும்). தெய்வீக உதவியின்றி நாம் அவரைப் போல் ஆகவோ அல்லது அவரிடம் திரும்பவோ முடியாது. நமக்காகப் பாவநிவர்த்தி செய்யவும், மரணத்தின் கட்டுகளை உடைக்கவும் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை நம்முடைய பரலோக பிதா அனுப்பினார்.( 3 நேபி 27:13-22 பார்க்கவும்).

மனந்திரும்புவதற்கு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதன் மூலமும், ஞானஸ்நானம் பெற்று, திடப்படுத்தப்பட்டு, பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெற்று, இறுதிபரியந்தம் நிலைத்திருப்பதன் மூலமும் கிறிஸ்துவின் மீட்பின் வல்லமையை நாம் பெறுகிறோம். பரிசுத்த ஆவியானவர் நம்மைச் சுத்திகரிக்கவும், பலப்படுத்தவும், மேலும் சிறப்பாக நமது இயல்பை மாற்றும்படிக்கு, ஞானஸ்நான உடன்படிக்கையைக் கடைப்பிடிப்பது, நம்மை தேவனுடன் பிணைப்பதற்கான முதல் படியாகும். இந்த பரிசுத்தப்படுத்தும் செல்வாக்கை அனுபவிப்பது ஆவிக்குரிய மறுபிறப்பு என்று அழைக்கப்படுகிறது. (2 நேபி 31:7, 13–14, 20–21; மோசியா 5:1–7; 18; 27:24; 3 நேபி 27:20; யோவான் 3:5 பார்க்கவும்.)

நாம் தண்ணீர் மற்றும் ஆவியானவரால் ஞானஸ்நானம் பெறும்போது ஆவிக்குரிய மறுபிறப்பு தொடங்குகிறது. ஞானஸ்நானம் ஒரு மகிழ்ச்சியான மற்றும் நம்பிக்கை மிகுந்த நியமம். நாம் நொறுங்குண்ட இருதயத்துடனும், நருங்குண்ட ஆவியுடனும் ஞானஸ்நானம் பெறும்போது, தேவனின் தாங்கும் வல்லமையுடன் வாழ்க்கையைப் புதிதாகத் தொடங்குகிறோம். நாம் ஞானஸ்நானம் பெற்று திடப்படுத்தப்பட்ட பிறகு, திருவிருந்தில் தகுதியுடன் பங்குகொள்வதன் மூலம் நாம் தொடர்ந்து பலப்படுத்தப்படலாம். (2 நேபி 31:13; மோசியா 18:7–16; மரோனி 6:2; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:37 பார்க்கவும்.)

அழைப்பு கொடுத்தல்

நீங்கள் ஆவியானவரால் வழிநடத்தப்படுவதை உணரும்போது, ஞானஸ்நானம் பெறவும் திடப்படுத்தப்படவும் மக்களை அழைக்கவும். எந்தவொரு பாடத்தின் போதும் இது நிகழலாம்.

ஞானஸ்நானத்தின் கோட்பாட்டைக் கற்றுக் கொடுங்கள் மற்றும் கிறிஸ்துவின் கோட்பாட்டைப் புரிந்துகொள்ள மக்களுக்கு உதவுங்கள் (பாடம் 3 ஐப் பார்க்கவும்). ஞானஸ்நான உடன்படிக்கையின் முக்கியத்துவம் மற்றும் மகிழ்ச்சி, பாவ மன்னிப்பைப் பெறுதல் மற்றும் திடப்படுத்தப்படுவதன் மூலம் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுதல் ஆகியவற்றைப் பற்றி கற்பிக்கவும்.

நீங்கள் கற்பித்ததையும் அவர்கள் செய்யப்போகும் உடன்படிக்கையையும் அவர்கள் புரிந்துகொள்வதை உறுதிசெய்து ஞானஸ்நான அழைப்பிற்கு மக்களை ஆயத்தப்படுத்துங்கள். ஞானஸ்நான உடன்படிக்கை பின்வருவது போன்றதாகும்:

  • கிறிஸ்துவின் நாமத்தை நம் மீது தரித்துக்கொள்ள சித்தமாயிருத்தல்.

  • தேவனின் கட்டளைகளைக் கைக்கொள்ளுதல்

  • தேவனுக்கும் பிறருக்கும் சேவை செய்தல்.

  • இறுதிபரியந்தம் நிலைத்திருத்தல் (பாடம் 4 பார்க்கவும்.)

பின்வருவனவற்றை நீங்கள் பகிரலாம்:

“ நாம் ஞானஸ்நானம் பெறும்போது, ‘[நாம்] [தேவனைச்] சேவித்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவோம், என்று அவரோடு கூட [நாம்] உடன்படிக்கையினுள் பிரவேசித்ததாக, அவருக்கு முன்பாய் சாட்சி சொல்கிறோம்.’ நாம் இந்த உடன்படிக்கையைச் செய்யும்போது, அவர் ‘தம் ஆவியை [நம்] மீது நிறைவாய் ஊற்றுவதாக அவர் வாக்களிக்கிறார்’ (மோசியா 18:10) .

ஞானஸ்நானம் பெறுவதற்கான உங்கள் அழைப்பு குறிப்பானதாகவும் நேரடியாகவும் இருக்க வேண்டும். நீங்கள் சொல்லலாம்:

“இந்த நியமத்தை நிறைவேற்ற நியமிக்கப்பட்ட ஒருவரால் ஞானஸ்நானம் பெறுவதன் மூலம் நீங்கள் இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றுவீர்களா? ஞானஸ்நானத்திற்கு தயாராவதற்கு நாங்கள் உங்களுக்கு உதவுவோம். நீங்கள் [தேதியில்] தயாராக இருக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். அந்த தேதியில் ஞானஸ்நானம் பெற நீங்கள் தயாராவீர்களா?”

நீங்கள் வழங்கும் எந்த அழைப்பையும் போலவே, ஞானஸ்நானம் பெறுவதற்கான அழைப்பை ஏற்று, அதனுடன் தொடர்புடைய உடன்படிக்கைகளைக் கடைப்பிடிக்கும்போது, மக்கள் பெரும் ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள் என்று வாக்களிக்கவும். இந்த ஆசீர்வாதங்களைப்பற்றிய உங்களுடைய சாட்சியத்தைப் பகிரவும்.

ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தல் ஆகியவை இறுதி இலக்கு அல்ல என்று கற்பிக்கவும். மாறாக, அவை நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் தேவ வல்லமையை ஒரு நபரின் வாழ்க்கையில் முழுமையாகக் கொண்டுவரும் மனமாற்றத்தின் பாதையில் ஒரு புள்ளியாகும் (மோசியா 27:25–26 பார்க்கவும்). மக்கள் ஞானஸ்நானம் பெற்று திடப்படுத்தப்பட்ட பிறகு, அவர்கள் உடன்படிக்கையின் பாதையில் முன்னேறும்போது அவர்கள் ஆவியானவரால் பரிசுத்தமாக்கப்படுவதை எதிர்நோக்கலாம்.

முடிந்தால், நீங்கள் கற்பிப்பவர்களை ஒரு ஞானஸ்நான ஆராதனையிலும், யாரோ ஒருவர் திடப்படுத்தப்படும் ஒரு திருவிருந்து கூட்டத்திலும் கலந்துகொள்ள அழைக்கவும்.

ஞானஸ்நானம் பெறுவதற்கான அழைப்பிற்கான யோசனைகள்

இயேசு ஞானஸ்நானம் பெற்றதைப் பற்றிய வேத விவரத்தை வாசிப்பதைக் கருத்தில் கொள்ளவும் (மத்தேயு 3:13–17 பார்க்கவும்). இரட்சகரின் ஞானஸ்நானத்தை சித்தரிக்கும் வேதாகம காணொளிகள் அல்லது இரட்சகரின் சீடர்கள் ஞானஸ்நானம் கொடுப்பது பற்றிய மார்மன் புஸ்தக காணொளியையோ நீங்கள் காட்டலாம்.

இயேசுவின் ஞானஸ்நானம் பற்றிய நேபியின் விவரத்தையும் நீங்கள் வாசிக்கலாம் (2 நேபி 31:4–12 பார்க்கவும்). இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானம் பற்றிய குறிப்புகளைப் படித்தல், கற்பிக்கப்படுபவர்களை பலப்படுத்த முடியும்.

வேதப் படிப்பு

பின்வரும் வேதங்ளைப் படிக்கவும்:

நீங்கள் கற்றுக்கொண்டவற்றின் சுருக்கத்தை எழுதுங்கள்.