வேதங்கள்
ஆபிரகாம் 2


அதிகாரம் 2

ஆபிரகாம் கானானுக்குச் செல்ல ஊர் என்னுமிடத்தைவிட்டுச் செல்கிறான் – ஆரானில் யேகோவா அவனுக்குத் தரிசனமாகுகிறார் – சுவிசேஷத்தின் சகல ஆசீர்வாதங்களும் அவனுடைய சந்ததிக்கும் அவனுடைய சந்ததி மூலமாக யாவருக்கும் வாக்களிக்கப்பட்டது – அவன் கானானுக்குப் போய், எகிப்துக்குப் போகிறான்.

1 இப்பொழுது என்னுடைய சகோதரன் ஆரான் மரிக்கிற அளவுக்கு தேவனாகிய கர்த்தர் ஊர் தேசத்தில் மிகுந்த வேதனையைக் கொடுக்க பஞ்சத்தை வரவழைத்தார்; ஆனால் என்னுடைய தகப்பனான தேராகு, கல்தேயாவின் ஊர் தேசத்தில் இன்னமும் ஜீவித்தார்.

2 , ஆபிரகாமாகிய நான் சாராயை என் மனைவியாகக் கொண்டேன், ஆரானின் குமாரத்தியான மில்க்காளை என்னுடைய சகோதரன் நிகோர் மனைவியாகக் கொண்டான்.

3 இப்பொழுது கர்த்தர் ஆபிரகாமாகிய என்னிடம், உன்னுடைய தேசத்தையும், உன்னுடைய இனத்தையும், உன்னுடைய தகப்பனின் வீட்டையும் விட்டுப்புறப்பட்டு, நான் உனக்கு காண்பிக்கும் தேசத்துக்கு வா என்றார்.

4 ஆகவே கானான் தேசத்திற்குப் போகும்படியாக, நான் கல்தேயரின் ஊர் தேசத்தைவிட்டுப் புறப்பட்டேன், என்னுடைய சகோதரனின் குமாரனாகிய லோத்தையும், அவனுடைய மனைவியையும், என் மனைவியான சாராயையும் அழைத்துக் கொண்டு போனேன், ஆரான் என நாங்கள் பேரிட்ட தேசத்திற்கு என்னுடைய தகப்பனும் எனக்குப் பின்வந்தார்.

5 பஞ்சம் குறைந்தது; ஆரானில் அநேக மந்தைகளிருந்ததால் என்னுடைய தகப்பன் ஆரானில் தங்கியிருந்து அங்கே வாசம்செய்தார்; என்னுடைய தகப்பன் மீண்டும் தன்னுடைய விக்கிரகாராதனைக்கு திரும்பியதால், அவர் ஆரானிலிருந்தார்.

6 ஆனால் ஆபிரகாமாகிய நானும், என்னுடைய சகோதரனின் குமாரனான லோத்தும் கர்த்தரிடம் ஜெபித்தோம், கர்த்தர் எங்களுக்குத் தரிசனமாகி எனக்குச் சொன்னார், எழுந்து லோத்தை உன்னோடு அழைத்துக் கொண்டு போ; ஏனெனில் ஆரானுக்கு வெளியே உன்னை அழைத்துக் கொண்டு போகவும் அவர்கள் என்னுடைய சத்தத்திற்கு செவி கொடுக்கும்போது, உனக்குப் பிறகு உன்னுடைய சந்ததிக்கு என்றென்றுமாய் தரித்திருக்க நான் கொடுக்கப்போகிற ஒரு அந்நிய தேசத்திலே என்னுடைய நாமத்தை சாட்சியளிக்க உன்னை ஒரு ஊழியக்காரனாக்கவும் நான் நிர்ணயித்தேன்.

7 ஏனெனில் நானே உன்னுடைய தேவனாகிய கர்த்தர்; நான் பரலோகத்தில் வாசம் செய்கிறேன்; பூமி என்னுடைய பாதபடி; நான் என்னுடைய கைகளை சமுத்திரத்துக்கு மேலே நீட்டுகிறேன்; அது என்னுடைய சத்தத்திற்கு கீழ்ப்படிகிறது; காற்றையும் நெருப்பையும் என்னுடைய இரதமாயிருக்கச் செய்கிறேன்; இவ்விடத்திலிருந்து போவென மலைகளுக்கு நான் சொல்லுகிறேன், இதோ, இவைகள் ஒரு சூறாவளியால், உடனே திடீரென எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

8 என்னுடைய நாமம் யேகோவா, அந்தத்திலுள்ளவைகளை ஆதியிலிருந்து நான் அறிவேன்; ஆகவே என்னுடைய கை உன் மீதிருக்கும்.

9 நான் உன்னை பெரிய ஜாதியாக்கி, உன்னை அளவுக்கதிகமாக ஆசீர்வதிப்பேன், சகல ஜாதிகளுக்கும் மத்தியிலே உன் பேரைப் பெருமைப்படுத்துவேன், அவர்களுடைய கைகளில் சகல தேசங்களுக்கும் இந்த ஊழியத்தையும் ஆசாரியத்துவத்தையும் அவர்கள் பகிர்ந்துகொள்ளும்படியாக உனக்குப் பின் உன் சந்ததிக்குள்ளே நீ ஒரு ஆசீர்வாதமாயிருப்பாய்;

10 என்னுடைய நாமத்தின் மூலமாக அவர்களை நான் ஆசீர்வதிப்பேன்; ஏனெனில் இந்த சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்கிற அனைவரும் உன்னுடைய நாமத்தில் அழைக்கப்படுவார்கள், உன்னுடைய சந்ததியாக கணக்கிடப்பட்டு எழுந்து அவர்களுடைய தகப்பனாக உன்னை ஆசீர்வதிப்பார்கள்;

11 உன்னிலும் (அதாவது உன்னுடைய ஆசாரியத்துவத்திலிருப்பவர்கள்) உன்னுடைய சந்ததியிலும் (அதாவது உன்னுடைய ஆசாரியத்துவத்திலிருப்பவர்கள்), உன்னை ஆசீர்வதிப்பவர்களை நான் ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவர்களைச் சபிப்பேன், ஏனெனில் இரட்சிப்பின் மற்றும் நித்திய ஜீவன்களின் ஆசீர்வாதங்களான சுவிசேஷத்தின் ஆசீர்வாதங்களுடனும் பூமியில் சகல குடும்பங்களும் ஆசீர்வதிக்கப்பட, இந்த உரிமை உன்னிலும் உனக்குப் பின் உன்னுடைய சந்ததியிலும் (அதாவது, நேரடி சந்ததி அல்லது மாம்சத்தின் சந்ததி) தொடரும்படியாக உனக்கு நான் ஒரு வாக்குத்தத்தத்தைக் கொடுக்கிறேன்.

12 இப்பொழுது, என்னுடன் பேசுவதிலிருந்து கர்த்தர் பின்வாங்கி, அவருடைய முகத்தையும் என்னிடமிருந்து மறைத்தபிறகு, உம்முடைய ஊழியக்காரன் உம்மை கருத்தாய் தேடினான் என நான் இருதயத்தில் சொன்னேன்; இப்பொழுது நான் உம்மைக் கண்டேன்;

13 எல்கெனாவின் கடவுள்களிடமிருந்து என்னை விடுவிக்க உம்முடைய தூதனை நீர் அனுப்பினீர், உம்முடைய சத்தத்திற்கு செவிகொடுப்பது எனக்கு நலமாயிருக்கும், ஆகவே உம்முடைய ஊழியக்காரன் எழுந்து சமாதானத்தில் போகவிடுவீராக.

14 ஆகவே கர்த்தர் எனக்குச் சொன்னதைப்போல ஆபிரகாமாகிய நான் புறப்பட்டுப் போனேன், லோத்து என்னோடிருந்தான்; ஆரானிலிருந்து நான் புறப்பட்டுப் போனபோது ஆபிரகாமாகிய எனக்கு அறுபத்திரண்டு வயதாயிருந்தது.

15 கல்தேயாவின் ஊரில் நானிருந்தபோது நான் மனைவியாகக்கொண்ட சாராயையும், என்னுடைய சகோதரனின் குமாரனாகிய லோத்தையும் நாங்கள் சம்பாதித்திருந்த எங்களுடைய சம்பத்தெல்லாவற்றையும், ஆரானில் நாங்கள் ஜெயம்கொண்ட ஆத்துமாக்களையும் நான் கூட்டிக்கொண்டு, கானானுக்குப் போகும் வழியில் வந்தோம், எங்கள் வழியில் நாங்கள் வந்தபோது கூடாரங்களில் வசித்தோம்

16 ஆகவே, கானான் தேசத்திற்கு வர ஆரானிலிருந்து எருசோன் வழியாக நாங்கள் பயணப்பட்டபோது, நித்தியம் எங்களுடைய முக்காடாகவும், எங்களுடைய கன்மலையாகவும் எங்களுடைய இரட்சிப்பாகவுமிருந்தது.

17 இப்பொழுது ஆபிரகாமாகிய நான் எருசோன் தேசத்தில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருக்கு ஒரு காணிக்கையைச் செலுத்தினேன், அவர்கள் அழிக்கப்படாமலிருக்க என்னுடைய தகப்பனின் வீட்டிலிருந்து பஞ்சம் நீங்கும்படியாக ஜெபித்தேன்.

18 பின்னர், அந்தத் தேசத்திலே சுற்றித்திரிந்து சேச்சம் என்ற இடத்திற்கு எருசோன் தேசத்திலிருந்து வந்தோம்; அது மோரே சமவெளிகளில் அமைந்திருந்தது, கானானியர்களின் எல்லைவரை நாங்கள் ஏற்கனவே வந்துவிட்டோம், மோரே சமவெளிகளில் நான் பலி செலுத்தினேன், நாங்கள் ஏற்கனவே விக்கிரகாராதனையுள்ள இந்த தேசத்திற்குள் வந்துவிட்டதால் கர்த்தரை பயபக்தியோடு பணிந்துகொண்டோம்.

19 என்னுடைய ஜெபத்திற்குப் பதிலாக கர்த்தர் எனக்குத் தரிசனமாகி எனக்குச் சொன்னார்: உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன்.

20 ஆபிரகாமாகிய நான் கர்த்தருக்கு கட்டிய பலிபீடத்திலிருந்து எழுந்து அவ்விடம் விட்டுப் பெயர்ந்து, பெத்தேலுக்குக் கிழக்கே இருக்கும் மலைக்குப்போய், பெத்தேல் தனக்கு மேற்காகவும் ஆயீ கிழக்காகவும் இருக்க கூடாரம்போட்டு அங்கே கர்த்தருக்கு மற்றொரு பலிபீடத்தைக்கட்டி கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டேன்.

21 அதன்பின் ஆபிரகாமாகிய நான் புறப்பட்டு, தெற்கே பிரயாணம் பண்ணிக்கொண்டு போனேன்; தேசத்தில் தொடர்ந்து பஞ்சம் உண்டாயிருந்தது; பஞ்சம் கொடியதாயிருந்தபடியால் ஆபிரகாமாகிய நான் எகிப்து தேசத்திலே தங்கும்படியாக அங்கே போக தீர்மானித்தேன்.

22 நான் எகிப்துக்குச் சமீபமாய் வந்தபோது கர்த்தர் எனக்குச் சொன்னார், உன்னுடைய மனைவியான சாராய் பார்வைக்கு அழகுள்ள ஸ்திரீயாயிருக்கிறாள்;

23 ஆகவே எகிப்தியர் அவளைக் காணும்போது, இவள் அவனுடைய மனைவி என்று சொல்லி உன்னைக் கொன்றுபோட்டு அவளை உயிரோடே வைப்பார்கள்; ஆகவே இந்தப் பிரகாரம் நீ செய்யப் பார்த்துக்கொள்:

24 உன்னுடைய உயிர் பிழைக்கும்படியாக அவள் உன்னுடைய சகோதரியென எகிப்தியர்களுக்கு அவள் சொல்லட்டும்.

25 கர்த்தர் எனக்குச் சொன்ன எல்லாவற்றையும் ஆபிரகாமாகிய நான் என்னுடைய மனைவியாகிய சாராயிடம் சொன்னேன், ஆகையால், உன்னிமித்தம் எனக்கு நன்மை உண்டாகும்படிக்கும், உன்னாலே என் உயிர் பிழைக்கும்படிக்கும் நீ உன்னை என் சகோதரி என்று சொல் என்றேன்.