வேதங்கள்
மார்மனின் வார்த்தைகள் 1


மார்மனின் வார்த்தைகள்

அதிகாரம் 1

மார்மன், நேபியின் பெரிய தகடுகளைச் சுருக்குதல் – அவன் சிறிய தகடுகளை மற்ற தகடுகளுடன் சேர்த்தல் – பென்யமீன் ராஜா தேசத்திலே சமாதானத்தை ஏற்படுத்தல். ஏறக்குறைய கி.பி. 385.

1 இப்பொழுது, மார்மனாகிய நான் எழுதிக்கொண்டிருந்த பதிவேட்டை என் குமாரனாகிய, மரோனியின் கரங்களில் ஒப்படைக்க இருக்கும்போது, இதோ, நேபியர்களாகிய என் ஜனங்கள், ஏறக்குறைய முழுவதுமாய் அழிந்துபோவதை நான் கண்டிருக்கிறேன்.

2 கிறிஸ்துவினுடைய வருகையின் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப்பின், இந்தப் பதிவேடுகளை என் குமாரனின் கைகளில் ஒப்புவிக்கிறேன்; அவன் என் ஜனத்தின் முழு அழிவையும் காண்பான் என்று அனுமானிக்கிறேன். அவன் அவர்களுக்குப்பின் பிழைத்திருந்து, சற்றே அவர்களைக் குறித்தும், கிறிஸ்துவைக் குறித்தும் எழுதும்படியாயும், என்றாவது அது அவர்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்படிக்கு தேவன் அருளுவாராக.

3 இப்பொழுது, நான் எழுதியவற்றைக் குறித்து சற்றே பேசுகிறேன்; ஏனெனில் அமலேக்கியினால் பேசப்பட்ட இந்தப் பென்யமீன் ராஜாவினுடைய ஆளுகைவரைக்கும், நேபியின் தகடுகளிலிருந்து ஒரு சுருக்கத்தை நான் செய்துமுடித்த பின்னர், என் கரங்களிலே ஒப்படைக்கப்பட்ட பதிவேடுகளை ஆராய்ந்து, யாக்கோபுவிலிருந்து இந்த பென்யமீன் ராஜாவின் ஆளுகை வரைக்கும் இருந்த தீர்க்கதரிசிகளைப்பற்றிய ஒரு சிறிய விவரத்தையும், நேபியின் அநேக வார்த்தைகளையும் கொண்டிருக்கிற இந்தத் தகடுகளைக் கண்டேன்.

4 இந்தத் தகடுகளின் மீது இருக்கிற காரியங்கள் கிறிஸ்துவினுடைய வருகையைக் குறித்த தீர்க்கதரிசனங்களாதலால் எனக்குப் பிரியமானவையாய் இருக்கின்றன, அவைகளில் அநேகம் நிறைவேறியது, என்று என் பிதாக்கள் அறிந்திருந்தார்கள். ஆம், இந்த நாள்வரைக்கும் எங்களைக் குறித்து தீர்க்கதரிசனமாய் உரைத்த அநேகக் காரியங்கள் நிறைவேறின என்றும், இந்த நாளுக்குப் பின்னர் உரைக்கப்படும் அநேகமும், மெய்யாகவே சம்பவிக்கும் என்றும், நானும் அறிந்திருக்கிறேன்.

5 ஆகையால் என் பதிவேட்டினை இந்தக் காரியங்களுடன் முடிக்க இவைகளைத் தேர்ந்தெடுத்தேன். என் பதிவேடுகளில் மீதியானவற்றை நேபியின் தகடுகளிலிருந்து எடுப்பேன்; என் ஜனத்தினுடைய காரியங்களில் நூற்றில் ஒரு பங்கைக் கூட என்னால் எழுதமுடியவில்லை.

6 ஆனால் இதோ, இந்தத் தகடுகளில் அடங்கியிருக்கிற இந்தத் தீர்க்கதரிசனங்களும், வெளிப்படுத்தல்களும் எனக்கு சிறப்பாய் இருக்கிறபடியாலே, அவைகளை எடுத்து, என் பதிவேட்டின் மீதியானவற்றுடன் சேர்ப்பேன். அவைகள் என் சகோதரருக்கும் சிறப்பாய் இருக்குமென அறிந்திருக்கிறேன்.

7 ஒரு ஞானமான நோக்கத்திற்காக இதைச் செய்கிறேன், ஏனெனில், எனக்குள் இருக்கிற கர்த்தருடைய ஆவியானவரின் கிரியைகளின்படியே, இவ்வாறாக என்னிடம் மெல்லிய குரலில் உரைக்கிறது. இப்பொழுது, நான் அனைத்துக் காரியங்களையும் அறியேன். ஆனால் வரப்போகிற அனைத்துக் காரியங்களையும் கர்த்தர் அறிந்திருக்கிறார்; ஆகையால் தன் சித்தத்தின்படியே செய்ய, எனக்குள் அவர் கிரியை செய்கிறார்.

8 என் சகோதரர்கள் மீண்டும் விரும்பத்தக்க ஜனமாயிருந்து, தேவனுடைய அறிவிற்கும், ஆம், கிறிஸ்துவினுடைய மீட்புக்கும், மீண்டும் அவர்கள் வரவேண்டுமென்பதே தேவனிடத்தில் அவர்களைக் குறித்த என் ஜெபமாயிருக்கிறது.

9 இப்பொழுது மார்மனாகிய நான், நேபியின் தகடுகளிலிருந்து எடுக்கிற என் பதிவேட்டை முடிக்கப் போகிறேன். தேவனால் எனக்குக் கொடுக்கப்பட்ட ஞானத்தினாலும், விவேகத்தின்படியேயும் அதைச் செய்கிறேன்.

10 ஆனபடியால், பென்யமீன் ராஜாவின் கரங்களுக்குள் அமலேக்கி இந்தப் பதிவேடுகளை ஒப்படைத்த பின்னர், பென்யமீன் ராஜாவின் காலம் வரைக்கும், தலைமுறை தலைமுறையாக ராஜாக்களால் கொடுக்கப்பட்ட, பதிவேடுகளைக் கொண்ட, மற்ற தகடுகளுடன், அவன் அதை எடுத்துச் சேர்த்தான்.

11 என் கரங்களுக்குள் அவை வரும்வரைக்கும், தலைமுறை தலைமுறையாக, பென்யமீன் ராஜாவிடமிருந்து அவைகள் கொடுக்கப்பட்டன. மார்மனாகிய நான், இந்தக் காலம் முதற்கொண்டு, அவை பாதுகாக்கப்படவேண்டும், என்று தேவனிடத்தில் ஜெபிக்கிறேன். அவை பாதுகாக்கப்படுமென நான் அறிவேன்; ஏனெனில் அவைகளில் எழுதப்பட்டிருக்கிற மகத்துவமான காரியங்களிலிருந்து, என் ஜனமும் அவர்களின் சகோதரர்களும், எழுதப்பட்டிருக்கிற தேவனுடைய வார்த்தையின்படியே, அந்த பெரிதும் இறுதியுமான நாளிலே நியாயந்தீர்க்கப்படுவார்கள்.

12 இப்பொழுது இந்த பென்யமீன் ராஜாவைக்குறித்து, அவன் சொந்த ஜனத்தின் மத்தியிலே பிணக்குகள் சற்றே இருந்துவந்தன.

13 அந்தப்படியே, அவன் ஜனத்திற்கு விரோதமாய்ப் போரிட நேபியின் தேசத்திலிருந்து, லாமானியர்களின் சேனைகள் வந்தன. ஆனால் இதோ, பென்யமீன் ராஜா தன் சேனைகளை ஒன்றாய்த் திரட்டி, அவர்களை எதிர்த்து நின்றான். தன் சொந்த புயத்தின் ஆற்றலோடு, லாபானுடைய பட்டயத்தைக் கொண்டு சண்டையிட்டான்.

14 ஆயிரக்கணக்கான லாமானியர்களை அவர்கள் கொன்றுபோடும்வரைக்கும் தங்களின் விரோதிகளுக்கு எதிராய், கர்த்தருடைய பெலத்தில் போராடினார்கள். அந்தப்படியே, தங்களின் எல்லா சுதந்தர தேசங்களிலிருந்தும் லாமானியர்களைத் துரத்தும்வரைக்கும் அவர்களுக்கு விரோதமாய்ப் போராடினார்கள்.

15 அந்தப்படியே, கள்ளக் கிறிஸ்துக்கள் இருந்து, அவர்களின் வாய்கள் அடைக்கப்பட்டு, அவர்களின் குற்றங்களுக்குத் தக்கதாக தண்டிக்கப்பட்ட பின்னரும்,

16 ஜனங்கள் மத்தியிலே கள்ளத் தீர்க்கதரிசிகள், கள்ளப் பிரசங்கிகள், மற்றும் ஆசிரியர்களிருந்து, அவர்கள் அனைவரும் தங்களின் குற்றங்களின்படியே தண்டிக்கப்பட்ட பின்னரும், லாமானியர்களிடம், அதிக அளவிலே பிணக்கும், பிரிவினையுமிருந்தும், அதிகமானோர் பிரிந்த பின்பு, இதோ, அந்தப்படியே, பென்யமீன் ராஜா தன் ஜனங்கள் மத்தியிலிருந்த பரிசுத்த தீர்க்கதரிசிகளின் உதவியுடன்,

17 இதோ, பென்யமீன் ராஜா ஒரு பரிசுத்த மனுஷனாயிருந்தான். அவன் தன் ஜனங்களை நீதியிலே ராஜரீகம் பண்ணினான். அந்தத் தேசத்திலே அநேக பரிசுத்தவான்கள் இருந்தார்கள், அவர்கள் தேவனுடைய வார்த்தையை வல்லமையோடும் அதிகாரத்தோடும் பேசினார்கள். ஜனத்தினுடைய வணங்காக்கழுத்தின் நிமித்தம் அதிகக் கடுமையை உபயோகித்தார்கள்.

18 ஆகவே, இவர்களது உதவியுடன், தன் சரீரத்தின் சகல ஊக்கத்தோடும், தன் முழு ஆத்துமாவின் திறத்தாலும், பென்யமீன் ராஜாவும், தீர்க்கதரிசிகளும் பாடுபட்டு, மீண்டும் தேசத்திலே சமாதானத்தை ஸ்தாபித்தார்கள்.