வேதங்கள்
முன்னுரை


முன்னுரை

மார்மன் புஸ்தகம், வேதாகமத்திற்கு ஒப்பிடத்தக்க பரிசுத்த வேதமாகிய ஒரு புஸ்தகம். அது அமெரிக்காவின் பூர்வகுடியினருடன் தேவனின் நடப்பித்தல்களின் குறிப்பு, மற்றும் நித்திய சுவிசேஷத்தின் முழுமையைக் கொண்டுள்ளது.

இந்தப் புஸ்தகம் பல பூர்வகால தீர்க்கதரிசிகளால் தீர்க்கதரிசனம் மற்றும் வெளிப்பாட்டு ஆவியால் எழுதப்பட்டது. தங்கத் தகடுகள்மீது எழுதப்பட்ட அவர்களின் வார்த்தைகள், மார்மன் என்ற பெயருடைய தீர்க்கதரிசி மற்றும் சரித்திர ஆசிரியனால் மேற்கோள் காட்டப்பட்டு, சுருக்கப்பட்டன. இரண்டு பெரும் நாகரீகங்களைப்பற்றிய ஒரு விவரத்தையும் அந்த குறிப்பு கொடுக்கிறது. ஒன்று எருசலேமிலிருந்து கி.மு 600வது வருஷத்தில் வந்து, பின்னர் நேபியர் மற்றும் லாமானியர் எனப்பட்ட இரண்டு தேசங்களாகப் பிரிந்தது. மற்றொன்று அதிக முன்னரே பாபேல் கோபுரத்தில் கர்த்தர் பாஷைகளைத் தாறுமாறாக்கினபொழுது வந்தது. இந்தக் கூட்டத்தினர் யாரேதியர் எனப்பட்டனர். ஆயிரமாயிரம் வருஷங்களுக்குப் பின்னர் லாமானியர் தவிர எல்லோரும் அழிக்கப்பட்டனர். அவர்களே அமெரிக்க பழங்குடியினரின் முன்னோர்கள் மத்தியில் உள்ளனர்.

அவருடைய உயிர்த்தெழுதலுக்குப்பின்னர், உடனே நேபியர் மத்தியில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தனிப்பட்ட ஊழியம், மார்மன் புஸ்தகத்தில் பதிவு செய்யப்பட்ட தலையாய நிகழ்ச்சியாகும். அது சுவிசேஷத்தின் கோட்பாடுகளை முன் வைத்து, இரட்சிப்பின் திட்டத்தை வரையறுத்து, மனுஷர்களுக்கு இந்த வாழ்க்கையில் சமாதானத்தையும், இனி வரவிருக்கிற வாழ்வில் நித்திய இரட்சிப்பையும் பெற அவர்கள் என்ன செய்யவேண்டும் என்று சொல்கின்றது.

மார்மன் தான் எழுதியவைகளை முடித்த பின்பு, அவன் விவரங்களைத் தன்னுடைய குமாரனான மரோனியிடத்தில் ஒப்படைத்தான். மரோனி தன்னுடைய சொந்த வார்த்தைகளில் கொஞ்சம் சேர்த்துத் தகடுகளைக் குமோரா குன்றில் மறைத்து வைத்தான். செப்டம்பர் 21, 1823 அன்று, அதே மரோனி அப்போது மகிமை பெற்ற, உயிர்த்தெழுந்தவனாக, தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்குத் தோன்றி, பூர்வகால பதிவைப்பற்றியும், ஆங்கில மொழிக்கு அதனுடைய மொழிபெயர்ப்புக்கான நோக்கம் சம்பந்தமானவற்றையும் அவனுக்குப் போதித்தான்.

ஏற்ற காலத்தில் அந்தத் தகடுகள் ஜோசப் ஸ்மித்திடம் ஒப்படைக்கப்பட்டன. அவர் அதைத் தேவனின் வரத்தாலும், வல்லமையாலும் மொழிபெயர்த்தார். அந்த பதிவு இப்போது பல பாஷைகளில் இயேசு கிறிஸ்துதான் ஜீவிக்கிற தேவனின் குமாரனெனவும், அவரிடத்தில் வந்து, அவரது சுவிசேஷத்தின் நியாயப்பிரமாணங்களுக்கும், நியமங்களுக்கும் கீழ்ப்படிகிற எல்லோரும் இரட்சிக்கப்படலாம் என்று ஒரு புதிய கூடுதல் சாட்சியாக இப்போது பிரசுரம் பண்ணப்பட்டுள்ளது.

இந்தக் பதிவேடுபற்றி தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் சொன்னதாவது: “மார்மன் புஸ்தகம் பூமியின் மீதிருக்கும் எந்த ஒரு புஸ்தகத்தை விடவும் மிகவும் சரியானதென்றும், நம் மதத்திற்கு முக்கியக் கல்லாக இருக்கிறதென்றும், ஒரு மனுஷன் மற்ற எந்த புஸ்தகத்தைக் காட்டிலும் இதனுடைய போதனைகளில் நிலைத்திருந்தால் தேவனின் அருகில் செல்வான் என்றும் நான் சகோதரர்களிடம் சொன்னேன்.”

ஜோசப் ஸ்மித்துடன், மற்ற பதினோரு பேரை தாங்களே அந்தத் தங்கத் தகடுகளைப் பார்க்கும்படியாகவும், மார்மன் புஸ்தகத்தின் சத்தியம் மற்றும், தெய்வீகத்தைப்பற்றி விசேஷ சாட்சிகளாயிருக்கும்படியாகவும் கர்த்தர் கொடுத்தார். அவர்களது எழுதப்பட்ட சாட்சியங்கள் இத்துடன் “மூன்று சாட்சிகளின் சாட்சியம்” மற்றும் “எட்டு சாட்சிகளின் சாட்சியம்” என சேர்க்கப்பட்டுள்ளன.

நாங்கள் எங்குமிருக்கும் எல்லா மனுஷரையும் மார்மன் புஸ்தகத்தைப் படிக்கவும், அதிலடங்கியிருக்கின்ற செய்தியினை தங்கள் இருதயங்களில் சிந்தனை செய்யவும், அதன் பின்னர் நித்திய பிதாவாகிய தேவனிடத்தில், கிறிஸ்துவின் நாமத்தினால் இந்தப் புஸ்தகம் உண்மைதானா எனக் கேட்கவேண்டும், எனவும் அழைக்கிறோம். இந்த மார்க்கத்தைப் பின் தொடர்ந்து விசுவாசத்தில் கேட்கிறவர்கள், இதனுடைய சத்தியம் மற்றும் தெய்வீகத்தைப்பற்றி பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் ஒரு சாட்சியத்தைப் பெறுவார்கள். (மரோனி 10:3–5 பார்க்கவும்.)

இந்த தெய்வீக சாட்சியைப் பரிசுத்த ஆவியினிடத்திலிருந்து பெறுகிறவர்கள், அதே வல்லமையினால், இயேசு கிறிஸ்துதான் உலகத்தின் இரட்சகர் எனவும், ஜோசப் ஸ்மித் இந்த கடைசி நாட்களில் அவருடைய வெளிப்படுத்துபவராகவும், தீர்க்கதரிசியாகவும் இருக்கிறார் எனவும், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபைதான் மேசியாவின் இரண்டாம் வருகைக்கு ஆயத்தமாக, பூமியின் மீது மறுபடியுமாக ஸ்தாபிக்கப்பட்ட கர்த்தரின் ராஜ்யம் என்பதையும் அறிவார்கள்.